‘டத்தோ’ பட்டம் தொடர்பாக ராதாரவியுடன் மீண்டும் மோதிய சின்மயி


‘டத்தோ’ பட்டம் தொடர்பாக ராதாரவியுடன் மீண்டும் மோதிய சின்மயி
x
தினத்தந்தி 30 Nov 2018 11:23 PM GMT (Updated: 30 Nov 2018 11:23 PM GMT)

டத்தோ பட்டம் தொடர்பாக, ராதாரவியுடன் மீண்டும் சின்மயி மோதியுள்ளார்.


‘மீ டூ’வில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய பாடகி சின்மயிக்கு ஆதரவும், எதிர்ப்புகளும் கிளம்பி உள்ளன. விமர்சனங்களுக்கு அவர் பதிலடியும் கொடுத்து வருகிறார். திரைப்பட டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் சின்மயி உறுப்பினராக இருந்து முன்னணி கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்து வந்தார்.

தற்போது ராதாரவி தலைவராக உள்ள டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து சின்மயியை நீக்கி உள்ளனர். சங்கத்துக்கு சந்தா தொகையை செலுத்தாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வாழ்நாள் கட்டணத்தை சங்கத்துக்கு செலுத்தி விட்டதாக சின்மயி விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் ராதாராவிக்கு வழங்கப்பட்டுள்ள டத்தோ பட்டம் குறித்து சர்ச்சையை கிளப்பி உள்ளார் சின்மயி. மலேசியாவில் வழங்கப்படும் கவுரவமான பட்டமாக இது கருதப்படுகிறது. ராதாரவி தனது பெயருக்கு முன்னால் வைத்துள்ள டத்தோ பட்டம் பொய்யானது என்று சின்மயி கூறியுள்ளார்.

இது தொடர்பாக சின்மயி மலேசியா நாட்டின் மெலோகா மாநில அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு வந்த பதிலை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில் ராதாரவிக்கு அரசு எந்த பட்டமும் வழங்கியதாக ஆவணத்தில் இல்லை. இந்தியாவில் உள்ள நடிகர் ஷாருக்கானுக்கு மட்டுமே விருது வழங்கப்பட்டு உள்ளது என்று அரசு செயலர் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த கடிதம் மூலம் ராதாரவியுடன் மீண்டும் மோதலை தொடங்கி உள்ளார் சின்மயி.

Next Story