7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி


7 பேரை விடுதலை செய்ய கவர்னருக்கு கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி
x
தினத்தந்தி 30 Nov 2018 11:30 PM GMT (Updated: 30 Nov 2018 11:30 PM GMT)

7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக, நடிகர் விஜய் சேதுபதி கவர்னருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய அரசியல் கட்சிகள் வற்புறுத்தின. மனித உரிமை ஆர்வலர்களும் குரல் கொடுத்து வருகிறார்கள். பேரறிவாளன் தாயாரும் போராடி வருகிறார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா விடுதலை செய்ய முயற்சி எடுத்தும் நடக்கவில்லை. 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழக அமைச்சரவை கூடி 7 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியது.

இதன்மீது கவர்னர் இன்னும் முடிவு எடுக்கவில்லை. இந்த நிலையில் 7 பேர் சிறை தண்டனை பெற்று 28 ஆண்டுகள் முடிந்ததை தொடர்ந்து ‘28 வருடம் போதும் கவர்னரே’ என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. இதில் பலரும் கருத்து பதிவிடுகிறார்கள். நடிகர் விஜய் சேதுபதியும் இந்த ஹேஷ்டேக்கில் கவர்னருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“இது தமிழர் பிரச்சினை மட்டுமல்ல. தயவு செய்து மனித உரிமை அடிப்படையில் 7 பேரை விடுதலை செய்ய கவர்னர் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும்” என்று அதில் குறிப்பிட்டு உள்ளார்.


Next Story