நடிகை கடத்தல் விவகாரம்: நடிகர் திலீப் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு


நடிகை கடத்தல் விவகாரம்: நடிகர் திலீப் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 2 Dec 2018 11:00 PM GMT (Updated: 2 Dec 2018 10:31 PM GMT)

நடிகை கடத்தல் விவகாரத்தில், நடிகர் திலீப் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கேரளாவில் 2017-ம் ஆண்டு நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைதானார்கள். மலையாள நடிகர் திலீப்புக்கும் இந்த கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அவரும் கைதானார். இப்போது அவர் ஜாமீனில் இருக்கிறார். இந்த பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ பதிவை திலீப்புக்கு எதிரான வலுவான ஆதாரமாக கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். அந்த வீடியோ பிரதியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி திலீப் கேரள கோர்ட்டில் மனுதாக்கல் செய்து அது நிராகரிக்கப்பட்டது.

இதை எதிர்த்து திலீப் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் “மலையாள நடிகையை தாக்கி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக என்மீது குற்றம் சாட்டி உள்ளனர். போலீசாரிடம் சிக்கி உள்ளதாக கூறப்படும் செல்போன் மெமரி கார்டில் துன்புறுத்தியதற்கு ஆதாரமான படங்கள் உள்ளன என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த படங்களை பார்க்க எனக்கு உரிமை உள்ளது. என்னை வழக்கில் சிக்க வைக்க இதுபோன்ற படங்களை உருவாக்கி இருப்பதாக கருதுகிறேன். எனவே அந்த புகைப்படங்களை எனக்கு காட்டும்படி உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.


Next Story