பிரதமரை அவமதிக்கும் கார்ட்டூன் நடிகை குஷ்பு கண்டனம்


பிரதமரை அவமதிக்கும் கார்ட்டூன் நடிகை குஷ்பு கண்டனம்
x
தினத்தந்தி 3 Dec 2018 11:15 PM GMT (Updated: 3 Dec 2018 7:02 PM GMT)

நமது நாட்டு பிரதமரை அவமதிப்பது என்பதை ஏற்க முடியாது என்று நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள சமீபத்தில் அர்ஜென்டினா சென்று இருந்தார். அப்போது அந்த நாட்டின் டெலிவி‌ஷன் ஒன்று அபு என்ற கார்ட்டூனுடன் பிரதமரை ஒப்பிட்டு அவமானப்படுத்தி இருந்தது. ஒரு நாட்டின் பிரதமரை இப்படி அவமதிக்கலாமா? என்று சமூக வலைத்தளத்தில் எதிர்ப்புகள் கிளம்பின.

நடிகை குஷ்புவும் கண்டித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:–

‘‘இது இந்தியாவுக்கான தேசிய அவமானம். அரசியலில் கொள்கை ரீதியாக நமக்குள் வேறுபாடுகள் இருக்கலாம். எப்போதுமே முட்டி மோதிக்கொள்ளவும் செய்யலாம். ஆனால் நமது நாட்டு பிரதமரை அவமதிப்பது என்பதை ஏற்க முடியாது. நமக்குள் தனிப்பட்ட விரோதங்கள் எதுவும் கிடையாது. கொள்கை மாறுபாடுகள் ஏற்படுவதும் அதற்காக மோதிக்கொள்வதும் வேறு. ஆனால் கேவலப்படுத்தும் இந்த கார்ட்டூனை ரசிக்க தொடங்கினால் நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். அதனால் அப்படி செய்வதை நிறுத்துங்கள்.’’

இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.  

பா.ஜனதாவை தொடர்ந்து சாடி வரும் குஷ்பு இப்போது பிரதமருக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story