நல்வழிப்படுத்தும் பாரதியார் கவிதைகள் இளைஞர்களுக்கு ரஜினிகாந்த் அறிவுரை


நல்வழிப்படுத்தும் பாரதியார் கவிதைகள் இளைஞர்களுக்கு ரஜினிகாந்த் அறிவுரை
x
தினத்தந்தி 4 Dec 2018 11:45 PM GMT (Updated: 4 Dec 2018 6:47 PM GMT)

மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி, இளைஞர்களுக்கு ரஜினிகாந்த் அறிவுரை வழங்கியுள்ளார்.

மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரஜினிகாந்த் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– 

‘‘பாரதியாரிடம் எனக்கு முதலில் பிடித்தது அவரது தோற்றம். முண்டாசு, முறுக்கிய மீசை என்று அப்போதே வித்தியாசமானவராக தன்னை காட்டியவர். என்னை பொறுத்தவரை பாரதியாரை கவிஞர் என்று சொல்வதை விட, அவர் மிகப்பெரிய ஞானி. தன்னைத்தான் உணர்ந்த ஒரு ஞானி. அவருடையை வார்த்தைகள், கவிதைகள், எழுத்துக்கள் எல்லாம் இன்னும் சாகா வரம் பெற்று நேரங்கள் ஆக ஆக காலங்கள் ஓட ஓட அதன் வலிமை இன்னும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் தன்னைத்தானே உணர்ந்த ஒரு ஞானியிடம் இருந்து வந்த வார்த்தைகள் என்பதால்தான். 

அந்தக் கால கட்டத்தில் திருவள்ளுவர், அவ்வை மற்றும் இந்த காலகட்டத்தில் பாரதியாரையும் ஒப்பிடலாம். எனக்கு அவர் கவிதைகள் நிறைய பிடித்தது இருக்கிறது. ‘‘சாதிகள் இல்லையடி பாப்பா’’, ‘‘தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்’’ இந்த மாதிரி சொல்லிக்கொண்டே போகலாம். 

இப்போதைய இளைஞர்கள், மாணவர்கள் நல்ல வி‌ஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் திருவள்ளுவர், அவ்வை, பாரதியார் ஆகியோரின் கவிதைகள், அவர்கள் எழுதிய எழுத்துக்களை படித்தாலே போதும். அவர்கள் வாழ்க்கையில் வெற்றிகரமாக, சந்தோ‌ஷமாக, நிம்மதியாக இருக்கலாம். 

மகாகவி பாரதியாரின் 136–வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடுகிறார்கள். அது நல்லபடியாக நடக்க வேண்டும் என்று சொல்லி நான் வாழ்த்துகிறேன்.’’

இவ்வாறு  ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Next Story