‘டத்தோ’ பட்டம் போலி என்பதா? பாடகி சின்மயிக்கு ராதாரவி கண்டனம்


‘டத்தோ’ பட்டம் போலி என்பதா? பாடகி சின்மயிக்கு ராதாரவி கண்டனம்
x
தினத்தந்தி 5 Dec 2018 9:30 PM GMT (Updated: 5 Dec 2018 5:34 PM GMT)

ராதாரவியின் டத்தோ பட்டம் போலியானது என்று கூறிய பாடகி சின்மயிக்கு ராதாரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் ராதாரவி மலேசியாவில் பெற்ற டத்தோ பட்டம் போலியானது என்று பாடகி சின்மயி புகார் கூறி மேலும் ஒரு சர்ச்சையை கிளப்பினார். இதற்கு ஆதாரமாக மலேசியா நாட்டின் மெலோகா மாநில அரசு தனக்கு எழுதிய கடிதத்தையும் டுவிட்டரில் வெளியிட்டார். இதற்கு நடிகர் ராதாரவி பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:–

‘‘கவிஞர் வைரமுத்து மீது சொன்ன புகார் எடுபடாமல் போனதால் டத்தோ பட்டம் பொய்யானது என்று சொல்லி சின்மயி என்மீது திரும்பி இருக்கிறார். மலேசியாவில் வழங்கப்படும் டத்தோ பட்டங்கள் மதிப்பு மிக்கவை. அங்குள்ள பெடரல் அரசாலும், சுல்தான்களாலும், மாநில கவர்னராலும், ஜூலு பிரிவினராலும் 4 வழிகளில் இவை வழங்கப்படுகின்றன. 

எனக்கு டத்தோ பட்டத்தை சுல்தான் வழங்கினார். அதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதை பொய் என்று சொல்லி விருது வழங்கியவர்களையே அவமதித்து இருக்கிறார் சின்மயி. இதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பி சின்மயி மற்றும் அவரது தோழி மீது கோர்ட்டில் வழக்கு தொடர ஏற்பாடு நடக்கிறது. 

இதன்மூலம் சின்மயி மலேசியாவுக்கு செல்ல தடைவிதிக்கப்படலாம். டப்பிங் யூனியனில் இருந்து அவரை நீக்கி விட்டதாக காழ்ப்புணர்ச்சியோடு என்மீது பழி சொல்லி வருகிறார். அவரை நீக்கவில்லை. கூட்டத்தில் கண்டனம்தான் தெரிவித்தோம். சின்மயி மிரட்டல்களுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை. எதிர்ப்புகளிலும், போராட்டங்களிலும் வளர்ந்தவன். டத்தோ பட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவேன்.’’

இவ்வாறு ராதாரவி கூறினார்.

Next Story