வீட்டில் யானை தந்தம் பறிமுதல்: மோகன்லாலை மீண்டும் விசாரிக்க வற்புறுத்தல்


வீட்டில் யானை தந்தம் பறிமுதல்: மோகன்லாலை மீண்டும் விசாரிக்க வற்புறுத்தல்
x
தினத்தந்தி 6 Dec 2018 9:30 PM GMT (Updated: 6 Dec 2018 5:09 PM GMT)

நடிகர் மோகன்லால் வீட்டில் யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டது பற்றி மீண்டும் விசாரிக்க வற்புறுத்தப்பட்டுள்ளது.

பிரபல மலையாள நடிகர் மோகன்லால் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2012–ம் ஆண்டு வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது கொச்சியில் உள்ள அவரது வீட்டில் 4 யானை தந்தங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்தனர். யானை தந்தங்கள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. 

வனத்துறை அதிகாரிகள் மோகன்லாலிடம் விசாரணை நடத்தினார்கள். அவற்றை யானை வளர்ப்பவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கியதாக தெரிவித்தார். 23 ஆண்டுகளாக சட்டப்படி அவற்றை வைத்து இருப்பதாகவும் கூறினார். மோகன்லால் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்தது. 

மோகன்லால் யானை தந்தங்கள் வைத்து இருந்ததில் தவறு இல்லை என்று அரசு தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மோகன்லாலுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் மோகன்லாலுக்கு எதிரான யானை தந்தம் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று மக்கள் சுற்றுச்சூழல் அமைப்பு இப்போது வற்புறுத்தி உள்ளது. 

மோகன்லாலை பாதுகாக்கும் நோக்கில் வனத்துறை செயல்பட்டு உள்ளது. போதிய ஆவணம் இல்லாமல் யானை தந்தம் அவர் வைத்து இருந்தார். விதிகள் மீறப்பட்டு உள்ளன. எனவே மோகன்லாலிடம் மீண்டும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அமைப்பின் பொறுப்பாளர் விளயோடி வேணுகோபால் கூறி உள்ளார். இது மோகன்லால் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story