நகைச்சுவை நடிகர் யோகிபாபு சம்பளம் ரூ.80 லட்சம்?


நகைச்சுவை நடிகர் யோகிபாபு சம்பளம் ரூ.80 லட்சம்?
x
தினத்தந்தி 6 Dec 2018 10:00 PM GMT (Updated: 6 Dec 2018 5:13 PM GMT)

நகைச்சுவை நடிகர் யோகிபாபு ரூ.80 லட்சம் சம்பளம் கேட்டதாக தகவல் பரவி உள்ளது.

தமிழ் பட உலகில் நகைச்சுவை நடிகர்கள் பற்றாக்குறை உள்ளது. வடிவேலு கதாநாயகனாக நடிப்பதில் பிடிவாதமாக இருக்கிறார். முன்னணி நடிகர்கள் படங்களில் சிரிப்பு நடிகராக வந்த சந்தானமும் கதாநாயகனாகி விட்டார். இதனால் யோகிபாபு காட்டில் அடைமழை. 2009–ல் யோகி படத்தில் அறிமுகமான இவர் இப்போது வடிவேலு, சந்தானம் இல்லாத வெற்றிடத்தை பயன்படுத்தியுள்ளார். 

விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நடித்து ரசிகர்கள் வட்டாரத்தையும் சேர்த்துள்ளார். சூரி, கஞ்சா கருப்பு, வையாபுரி, சாம்ஸ், ரோபோ சங்கர், நான் கடவுள் ராஜேந்திரன், கருணாகரன் என்ற நகைச்சுவை நடிகர் பட்டியலில் யோகிபாபுவுக்குத்தான் முதல் இடம். இப்போது 19 படங்கள் அவர் கைவசம் உள்ளன. தர்மபிரபு என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். ஒரு நாள் சம்பளமாக ரூ.2 லட்சம் வாங்கி வந்த அவர் சமீபத்தில் அதை ரூ.3 லட்சமாக உயர்த்தினார். ஒரு படத்துக்கு 10 நாட்கள் கால்ஷீட் கொடுத்து ரூ.30 லட்சம் வாங்கி சென்றார். 20 நாட்கள் என்றால் ரூ.60 லட்சம் கொடுக்க வேண்டி இருந்தது. இந்த நிலையில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க யோகிபாபு ரூ.80 லட்சம் சம்பளம் கேட்டதாக தகவல் பரவி உள்ளது. 

மற்ற நகைச்சுவை நடிகர்கள் ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை வாங்குவதாக கூறப்படுகிறது.

Next Story