இந்து மதத்தை புண்படுத்துவதாக புகார் ‘கேதார்நாத்’ படத்துக்கு தடைவிதிக்க கோர்ட்டு மறுப்பு


இந்து மதத்தை புண்படுத்துவதாக புகார் ‘கேதார்நாத்’ படத்துக்கு தடைவிதிக்க கோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 6 Dec 2018 10:30 PM GMT (Updated: 6 Dec 2018 5:20 PM GMT)

‘கேதார்நாத்’ படத்துக்கு தடைவிதிக்க கோரி தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவில் பகுதியில் 2013–ல் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதை மையமாக வைத்து இந்தியில் ‘கேதார்நாத்’ என்ற படம் தயாராகி உள்ளது. இதில் சுஷாந்த் சிங் ராஜ்புத் கதாநாயகனாகவும், சயீப் அலிகான் மகள் சாரா அலிகான் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். அபிஷேக் கபூர் இயக்கி உள்ளார். 

காதல்தான் புனிதப்பயணம் என்ற வாசகம் இந்த படத்தில் உள்ளது. இது இந்து மதத்தையும் இந்து மக்கள் நம்பிக்கையின் அடையாளமாக இருக்கும் கேதார்நாத்தையும் அவமதிப்பதுபோல் உள்ளது. படத்துக்கு தடைவிதிக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் இந்து அமைப்புகள் எச்சரித்தன. 

படத்துக்கு தடைவிதிக்கும்படி இந்து சேனா அமைப்பின் தலைவர் பிரகாஷ் ராஜ்புத் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர். இது விளம்பரத்துக்காக தொடரப்பட்ட வழக்கு என்றும், வழக்கு தொடர்ந்தவர் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். 

இந்த படம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உத்தரகாண்ட் அரசு குழு அமைத்து உள்ளது. அந்த குழு அளிக்கும் அறிக்கையை பொறுத்து அந்த மாநிலத்தில் படத்தை திரையிடுவது குறித்து அரசு முடிவு எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story