சினிமா செய்திகள்

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தலா? + "||" + Actor Power Star Srinivasan kidnapped?

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தலா?

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தலா?
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் 5-ந் தேதியில் இருந்து மாயமாகிவிட்டதாக அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லி,

சென்னை அண்ணா நகர், எல்.பிளாக்கில் வசித்து வருபவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். நகைச்சுவை நடிகரான இவர் லத்திகா, ஆனந்த தொல்லை, கன்னா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி ஜூலி நேற்றுமுன்தினம் அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில், தனது கணவரை கடந்த 5-ந்தேதி மாலையில் இருந்து காணவில்லை என்று புகார் அளித்தார்.


இதுகுறித்து அண்ணா நகர் உதவி கமிஷனர் குணசேகரன், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். பவர் ஸ்டார் சீனிவாசனின் செல்போனை தொடர்பு கொண்டபோது அது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

இதனால் அவர் கடத்தப்பட்டாரா? அல்லது வேறு எங்காவது சென்று விட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்தநிலையில் நேற்று மீண்டும் சீனிவாசனின் செல்போனுக்கு போலீசார் தொடர்பு கொண்டனர்.

அப்போது எதிர்முனையில் பேசிய பவர்ஸ்டார் சீனிவாசன், தான் ஊட்டியில் இருப்பதாகவும், தேனியை சேர்ந்த நண்பர் ஒருவரிடம் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் ஊட்டியில் உள்ள தனது நிலத்தை விற்று, அந்த தொகையை கொடுக்க ஊட்டிக்கு வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.

அவர் ஊட்டிக்கு சென்ற தகவலை மனைவியிடமோ, நண்பர்களிடமோ தெரிவிக்கவில்லை. இதை அறியாத மனைவி, கணவரை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்ததாலேயே இந்த விஷயம் வெளியே தெரிந்தது. இதற்கிடையே ஊட்டியில் உள்ள நிலத்தை விற்க மனைவியின் கையெழுத்தும் தேவைப்பட்டதால், சீனி வாசன் மனைவியை செல் போனில் தொடர்புகொண்டு அவரையும் ஊட்டிக்கு வரவழைத்துள்ளதாக தெரிகிறது.

இந்த தகவலை போலீசாரிடம் சொல்லாமல் ஜூலியும் ஊட்டிக்கு சென்று விட்டார். இதை அறியாத போலீசார் பவர்ஸ்டார் சீனிவாசனை தேடியுள்ளனர். இதனையடுத்து போலீசாரை செல்போனில் தொடர்பு கொண்ட பவர்ஸ்டார் சீனிவாசன், இன்று சென்னை வந்து விடுவதாக தெரிவித்தார்.