சினிமா செய்திகள்

போலீஸ் நடவடிக்கை விஷால் படப்பிடிப்புக்கு தடை + "||" + Police action Vishal shooting has been banned

போலீஸ் நடவடிக்கை விஷால் படப்பிடிப்புக்கு தடை

போலீஸ் நடவடிக்கை விஷால் படப்பிடிப்புக்கு தடை
சண்டகோழி-2 படத்துக்கு பிறகு விஷால் ‘அயோக்யா’ என்ற படத்தில் நடிக்கிறார். இதில் நாயகியாக ராஷிகன்னா வருகிறார். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வெங்கட் மோகன் இயக்குகிறார்.
இதில் விஷாலுக்கு போலீஸ் அதிகாரி வேடம். சமீபத்தில் போலீஸ் வேனில் கையில் பீர் பாட்டிலுடன் இருக்கும் விஷால் தோற்றம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது.

பீர் பாட்டில் குற்றத்தை துப்பு துலக்குவதாகவோ, அல்லது எதிரிகளுடன் சண்டை போடும் ஆயுதமாகவோ இருக்கலாம் என்று விஷால் விளக்கம் அளித்து இருந்தார். தற்போது இதன் படப்பிடிப்பு விழுப்புரம் பகுதிகளில் நடந்து வருகிறது. அங்குள்ள கூனிமேடு என்ற இடத்தில் ஒரு வீட்டில் படப்பிடிப்பை நடத்த போலீசில் கடிதம் கொடுத்து அனுமதி பெற்றனர்.


காலையில் விஷால் மற்றும் படக்குழுவினர் அந்த வீட்டின் முன்னால் திரண்டு படப்பிடிப்புக்கு ஆயத்தமானார்கள். அப்போது திடீரென்று அங்கு போலீசார் குவிக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்த தடை விதித்தனர். வீட்டின் அருகில் மசூதி உள்ளது என்றும் எனவே இங்கு படப்பிடிப்பு நடத்த கூடாது என்றும் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து படப்பிடிப்பை நிறுத்தி விட்டு அனைவரும் ஓட்டலுக்கு திரும்பினார்கள். படப்பிடிப்புக்கு போலீசார் அனுமதி கொடுத்து விட்டு திடீரென்று நிறுத்தியதால் ரூ.12 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர். தற்போது வேறு பகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.