சினிமா செய்திகள்

சினிமா கேள்வி-பதில்! : குருவியார் + "||" + Cinema Question-Answer! : Kuruviyar

சினிமா கேள்வி-பதில்! : குருவியார்

சினிமா கேள்வி-பதில்! : குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
கார்த்தி நடித்த படங்களில், அவருடைய நடிப்பு பேசப்பட்ட படங்கள் எவை?  (ஜெ.வத்சலா, பெங்களூரு)

‘பருத்தி வீரன்,’ ‘கொம்பன்,’ ‘தோழா,’ ‘ஆல் இன் ஆல் அழகுராஜா.’

***

குருவியாரே, அமலாபால் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு நிற்கும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறதே... இது, எதை காட்டுகிறது? (வி.ஜெயபால், சேலம்)

அமலாபாலின் துணிச்சலை காட்டுகிறது!

***

குருவியாரே, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய இருவரில் வயதில் மூத்தவர் யார்? இருவரையும் ஒப்பிட முடியுமா? (வெ.ரங்கராஜன், கோவை)

கீர்த்தி சுரேசை விட, ஐஸ்வர்யா ராஜேஷ் வயதில் மூத்தவர். கீர்த்தி சுரேசின் பூர்வீகம், கேரளா. ஐஸ்வர்யா ராஜேஷ் பூர்வீகம், ஆந்திரா. கீர்த்தி சுரேஷ் சம்பள வி‌ஷயத்தில், ஒரு கோடியை தாண்டி விட்டார். ஐஸ்வர்யா ராஜேஷ், இன்னும் ஒரு கோடியை தொடவில்லை!

***

குருவியாரே, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் சிம்பு ஜோடி யார்? அந்த படத்தை டைரக்டு செய்பவர் யார்? படம் எந்த நிலையில் உள்ளது? (டி.ஆர்.லோகநாதன், வேலூர்)

அந்த படத்தில் சிம்பு ஜோடியாக கேத்தரின் தெரசா, மேகா ஆகாஷ் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். டைரக்டு செய்பவர், சுந்தர் சி. படம் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில், பொள்ளாச்சி அருகே படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது!

***


குருவியாரே, நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது நடக்கும்? (கே.நடராஜன், திருவண்ணாமலை)

இப்போதே அந்த இரண்டு பேரும் தாலி கட்டிக் கொள்ளாத கணவன்-மனைவியாக ஒரே வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், விக்னேஷ் சிவன் திருமணம் செய்துகொள்ளலாம் என்று வற்புறுத்தி வருவதாகவும், அதற்கு நயன்தாரா உடன்படவில்லை என்றும் பேச்சு அடிபடுகிறது!

***

பெரிய புயலாக ஆரம்பித்து, மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘மீ டூ’ விவகாரம், புஸ்வானம் போல் அமுங்கிப் போய்விட்டதே... என்ன காரணம்? (கணபதிராஜ், சென்னை-1)

‘மீ டூ’ பெயரை சொல்லி சிலர், சிலரை மிரட்ட ஆரம்பித்ததும், அதன் ஆயுள் காலம் குறைந்து விட்டது!

***

‘காற்றின் மொழி’ படத்தை அடுத்து ஜோதிகா நடிக்கும் புதிய படம் எது? ஜோதிகா என்ன வேடத்தில் நடிக்கிறார்? (மு.வே.தங்கராஜ், வள்ளியூர்)

ஜோதிகா நடிக்கும் புதிய படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. அந்த படத்தில், அவர் ஆசிரியையாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது!

***

தமிழ் திரையுலகில் சமீபகாலமாக கதை திருட்டு நடக்கிறதே...? டைரக்டர்கள் மத்தியில் கற்பனை திறன் குறைந்து விட்டதா, என்ன? (டி.சுதாகரன், திருச்சி)

கற்பனை திறன் குறைந்ததுதான் கதை திருட்டுக்கு முக்கிய காரணம்!

***

குருவியாரே, ஆர்யாவுக்கும், அனுஷ்காவுக்கும் இடையே இருந்த ‘நட்பையும் தாண்டிய சினேகம்’ என்ன ஆனது? (கே.ராஜமார்த்தாண்டன், நாகர்கோவில்)

‘நட்பையும் தாண்டிய சினேகம்’ என்பதோடு அந்த உறவு முடிந்து போனது! மீண்டும் துளிர்க்குமா, துளிர்க்காதா? என்பது பற்றி இருவருமே கவலைப் படவில்லை!

***

வடிவேலுவின் நகைச்சுவை நடிப்பில் வேறு நகைச்சுவை நடிகரின் பாதிப்பு இருக்கிறதா, இல்லையா? (இரா.பாஸ்கர பால்பாண்டியன், விருத்தா சலம்)

வடிவேலுவின் நகைச்சுவை நடிப்பில், 10 சதவீதம் நாகேஷ் எட்டிப்பார்ப்பார்!

***

பாக்யராஜ் இயக்கி நடித்த படங்களில், அதிக நாட்கள் ஓடிய படம் எது? (சசி, வல்லம்)

‘முந்தானை முடிச்சு!’ 25 வாரங்களை தாண்டி ஓடி, வெள்ளி விழா கண்ட படம், அது!

***

குருவியாரே, ஆண்ட்ரியாவுக்கு போலீஸ் வேடம் பொருந்துமா, ரவுடி வேடம் பொருந்துமா? எது கச்சிதமாக பொருந்தும்? (எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு)

போலீஸ் வேடத்தை விட, ஆண்ட்ரியாவுக்கு ரவுடி வேடம்தான் கச்சிதமாக பொருந்தும் என்று அவருடைய ஒப்பனையாளரும், உடையலங்கார நிபுணரும் கூறுகிறார்கள்!

***

பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி, ஈஸ்வரிராவ் நடித்து வெளிவர இருக்கும் ‘அழியாத கோலங்கள்-2’ படத்துக்கும், பாலுமகேந்திரா இயக்கிய ‘அழியாத கோலங்கள்’ படத்துக்கும் தொடர்பு உண்டா? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

‘டைட்டில்’ ஒன்றை தவிர, வேறு எந்த தொடர்பும் இல்லை என்கிறார்கள், 2-ம் பாகம் படக்குழுவினர்!

***

குருவியாரே, 19 வருடங்களாக கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் திரிஷா, இன்னும் 10 வருடங்கள் கதாநாயகியாகவே நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாரே... அது நடக்குமா? (கோ.வேல்முருகன், சேலம்)

ஆசைப்படுவதில் தவறே இல்லை. அதை செயல்படுத்துவதில்தான் திறமை வெளிப்படும். திரிஷா, திறமையானவர்தான்!

***

தமிழ் திரையுலகில் அடிக்கடி ‘பார்ட்டி’ கொடுப்பவர் யார், ‘பார்ட்டி’யில் தவறாமல் கலந்துகொள்பவர் யார்? (பி.சஞ்சய், ஊட்டி)

அடிக்கடி ‘பார்ட்டி’ கொடுப்பவர், டைரக் டர் வெங்கட் பிரபு. அவர் கொடுக்கும் ‘பார்ட்டி’களில் தவறாமல் கலந்துகொள்பவர், வைபவ்!

***

குருவியாரே, தயாரிப்பாளரும், டைரக்டருமான வி.சி. குகநாதனை கதாசிரியராக அறிமுகம் செய்தவர் யார்? (மு.ஜவுபர் சாதிக், களக்காடு)

வி.சி.குகநாதனை கதாசிரியராக அறிமுகம் செய்தவர், எம்.ஜி.ஆர்!

***

இன்றைய இளம் கதாநாயகிகளில் செயற்கை கலவாத பேரழகி யார்? (இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி)

செயற்கை கலந்தால்தான் அழகி, பேரழகியாக தெரிவார். இன்றைய இளம் கதாநாயகிகளில், ‘பேரழகி’ என்று சொல்கிற மாதிரி யாரும் இல்லை!

***

குருவியாரே, டாப்சி தமிழ் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்துகிறாரா அல்லது இந்தி படங்களில் கவனம் செலுத்துகிறாரா? (எம்.ஆனந்த், கோபிச்செட்டிப்பாளையம்)

இந்தி படங்களில் அதிக சம்பளம் கிடைப்பதால், டாப்சியின் கவனம் முழுவதும் அங்கேயே இருக் கிறது!

***

குருவியாரே, நயன்தாரா சம்பளத்தை உயர்த்தியதற்கு என்ன காரணம் சொல்கிறார்? (வி.ஜெகன்நாத், தேனி)

அவருடைய தொடர் வெற்றிகளை காரணமாக சொல்கிறாராம்!

***

ஏ.பி.நாகராஜன் டைரக்‌ஷனில், ‘நடிகர் திலகம்‘ சிவாஜிகணேசன் நடித்த ‘திருவிளையாடல்,’ ‘சரஸ்வதி சபதம்,’ ‘தில்லானா மோகனாம்பாள்’ ஆகிய படங்களில் அதிக நாட்கள் ஓடிய படம் எது? (எல்.குமாரசாமி, உடுமலைப்பேட்டை)

‘திருவிளையாடல்’ படம் 175 நாட்கள் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது. ‘சரஸ்வதி சபதம்,’ ‘தில்லானா மோகனாம்பாள்’ ஆகிய இரண்டு படங்களும் 100 நாட்களை தாண்டி ஓடி, வெற்றி பெற்றன!

***