வசந்தம் வீசுகிறது.. வாழ்க்கை இனிக்கிறது..


வசந்தம் வீசுகிறது.. வாழ்க்கை இனிக்கிறது..
x
தினத்தந்தி 9 Dec 2018 9:36 AM GMT (Updated: 9 Dec 2018 9:36 AM GMT)

பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலெட்சுமி மகிழ்ச்சியாக இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கிறார். கணவர் அனுப், அவரை கைக்குள் தாங்குகிறார். மனைவிக்கு கண்தெரியாது என்பதால் கூடுதல் கவனம் செலுத்தி அவரை பாதுகாக்கிறார்.

கேரளாவில் வைக்கத்தில் உள்ள கோவிலில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட அவர் கணவரிடம் முதன் முதலில் சொன்னது என்ன தெரியுமா? எந்த புதுப்பெண்ணும் தனது கணவரிடம் சொல்லாத விஷயம் அது!

முகூர்த்தம் முடிந்து, எல்லோரும் வாழ்த்திவிட்டு கலைந்து கொண்டிருந்த நேரத்தில் கணவரிடம் மெல்லிய குரலில் ‘என் கையில் கொஞ்சம் கிள்ளுகிறீர்களா?’ என்றார். காரணம் புரியாமல், ‘எதற்காக?’ என்று கேட்டார், அவர். ‘இப்போது நடந்து கொண்டிருப்பதெல்லாம் கனவா? நிஜமா? என்பதை உணர்ந்து கொள்வதற்காகத்தான் கிள்ளிவிட சொல்கிறேன்’ என்றார். கணவர், விஜயலெட்சுமியின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு, ‘இது நிஜம்தான்.. நாம் இப்போது கனவைவிட மிகுந்த உயரத்தில் இருக்கிறோம்..’ என்று பதிலளிக்க, நெகிழ்ந்து சிரித்தார், விஜயலெட்சுமி.

“இப்போதும் எனக்கு எல்லாம் ஒரு கனவுபோல்தான் இருந்து கொண்டிருக்கிறது. அனுப் என் வாழ்க்கைக்குள் வந்திருப்பதும், அவர் என்னை ஒரு குழந்தை போன்று பாதுகாத்துக் கொண்டிருப்பதும் கனவு காண்பதுபோல் தான் இருக்கிறது. நான் எதிர்பார்த்தது போல் கடவுள் எனக்கு இந்த நிதியை கொண்டு வந்து சேர்த்திருக்கிறார். என் கையைவிட்டு போகாத அளவுக்கு இந்த வாழ்க்கையை நான் பாதுகாத்துக் கொள்வேன்..” என்று அவர் உணர்ச்சிப்பெருக்குடன் கூறும்போது, அனுப் சிலிர்த்துப்போகிறார்.

“உண்மையை சொன்னால் நான்தான் அதிர்ஷ்டக்காரன். இந்தியா முழுவதும் தெரிந்த பிரபலமான பாடகியின் வாழ்க்கையில் என்னைப் போன்ற சாதாரண மனிதன் இணைவது என்பது கற்பனைகூட செய்து பார்க்க முடியாத விஷயம். விஜயலெட் சுமியை திருமணம் செய்துகொண்டு அவரை என் பின்னால் நடக்கவைக்க விரும்பவில்லை. சமமாக நடத்தவே விரும்புகிறேன். என் உயிர் உள்ளவரை அது தொடரும்..” என்று அனுப் உருக்கமாக சொல்கிறார்.

அனுப் கேரளாவில் பாலா என்ற பகுதியை சேர்ந்தவர். மிமிக்ரி கலைஞர். உள்ளறை அலங்கார பணியையும் செய்பவர். தொடர்ந்து பெற்றோர் இவருக்கு பெண் தேடியும் பலனில்லை. ஏதோ தோஷம் இருப்பதாக கூறினார்கள். தோஷம் நிவர்த்தி செய்ய எந்த கோவில் ஏற்றது என்று அவரது குடும்பம் தேடிக்கொண்டிருந்தபோது, வைக்கம் நாகசாமுண்டேஸ்வரி ஆலயத்திற்கு செல்லுங்கள் என்று யாரோ கூறியிருக்கிறார்கள். அந்த ஆலயம், விஜயலெட்சுமியின் வீட்டு முன்னால் இருக்கிறது.

ஒரு நாள் அதிகாலையில் அந்த ஆலயத்திற்கு சென்றவர், கோவிலில் வழிபாடு செய்வதற்கான விதிமுறைகளை கேட்க பக்கத்தில் இருந்த விஜயலெட்சுமி வீட்டு கதவை தட்டியிருக்கிறார். அவரது தந்தை முரளிதரன் கதவை திறந்து, ‘இது எங்கள் குடும்ப கோவில். ஆனால் எல்லோரும் வழிபாடு செய்யலாம். நீங்கள் அடுத்து வரும்போது ஒரு குத்துவிளக்கு கொண்டு வாருங்கள்’ என்று கூறியிருக்கிறார்.

நாலைந்து நாட்கள் கழித்து அனுப், விளக்குடன் மீண்டும் வந்திருக்கிறார். கோவிலில் வழிபாடு செய்திருக்கிறார். திரும்பும்போது முரளிதரன் தனது வீட்டிற்கு அவரை அழைத்து தேநீர் வழங்கி உபசரித்திருக்கிறார். அப்போது அனுப், விஜயலெட்சுமியை எங்கே என்று கேட்டிருக்கிறார். முந்தைய நாள் கச்சேரி முடிந்து அதிகாலை வீடு திரும்பிய அவர் தூங்கிக்கொண்டிருந்திருக் கிறார்.

அப்போது முரளிதரன், ‘முதலில் நிச்சயித்த திருமணம் நடக்காமல் போனது அவளுக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்திருக்கிறது. அடுத்த சில வாரங்களில் அவளுக்கு சிகிச்சை செய்து கொண்டிருந்த டாக்டர் திடீரென்று மரணமடைந்து விட்டார். அது அவளுக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்துவிட்டது. அதனால் நாங்கள் இப்போது அவளுக்கு வரன் தேடுவதையும் தற்காலிக மாக நிறுத்திவைத்திருக்கிறோம்’ என்று கூறியிருக்கிறார்.

அவர் கவலையுடன் கூறியது, அனுப்பிடம் கண்ணீரை வரவழைத்திருக்கிறது. பின்பு விடை பெறும்போது அவர் தயங்கித் தயங்கி, ‘நீங்கள் அனைவரும் விரும்பினால் நான் விஜயலெட் சுமியை திருமணம் செய்துகொள்கிறேன்’ என்று கூறியிருக்கிறார். அதற்கு முரளிதரன் எந்த பதிலும் கூறவில்லை. மாதங்கள் சில கடந்த நிலையில், விஜயலெட்சுமி இசை உலகிற்கு அறிமுகமாகி முப்பது ஆண்டுகள் ஆனதற்கான விழா ஒன்றுக்கு ஏற்படு செய்யப்பட்டது. அந்த விழாவிற்கு அனுப்பை அழைத்தார்கள். அவர் தனது குடும்பத்தினரோடு விழாவில் கலந்துகொண்டார். போட்டோவெல்லாம் எடுத்துக்கொண்டார்கள். ஆனாலும் திருமணம் பற்றி யாரும் பேசவில்லை.

ஒரு வருடம் கடந்த நிலையில் மீண்டும் குறிப்பிட்ட தேதியில் அந்த ஆலயத்திற்கு விளக்கேற்ற அனுப் சென்றார். திருமணம் சீக்கிரம் நடைபெறட்டும் என்று வேண்டிக்கொள்ள, முரளிதரன் மீண்டும் தனது வீட்டிற்கு அனுப்பை அழைத்தார். வீட்டில் விஜயலெட்சுமியும் இருந்தார். அவர் அனுப்பிடம், உங்களுக்கு திருமணமாகிவிட்டதா? என்று கேட்க, அவர் இல்லை என்று கூற, அப்படி என்றால் நாம் அது பற்றி ஆலோசிக்கலாமே என்று விஜயலெட்சுமி சொல்ல, அனுப்புக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. மகளின் விருப்பத்திற்கு அம்மா விமலாவும் சம்மதிக்க, பின்பு எல்லா வேலைகளும் விரைவாக நடந்திருக்கின்றன. இருவரின் ஜாதகத்தையும் பார்த்து திருமண தேதியை குறித்தார்கள். பின்பு நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

திருமணத்திற்கும்-நிச்சயதார்த்தத்திற்கும் இடைப்பட்ட 8 மாதங்களை இருவரும் காதலுக்காக பயன்படுத்திக்கொண்டார்கள். தினமும் இரவு 8 மணிக்கு அனுப் போனில் அழைப்பார். பின்பு இரு வரும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார்கள். மிமிக்ரி, பாட்டு என்று கலக்கியிருக்கிறார்கள்.

“எங்களுக்கு திருமணம் நடந்த அன்று காலையில் இன்னொரு திருமணமும் நடந்தது. அந்த திருமணத்திற்கு வந்தவர்கள் யாரும் திரும்பிச் செல்லவில்லை. எல்லோரும் என் திருமணத்தை பார்க்க காத்திருந்தார்கள். பிரபலங்களும் நிறைய பேர் எங்களை காத்திருந்து வாழ்த்தினார்கள்” என்று புன்னகை முகமாய் சொல் கிறார், விஜயலெட்சுமி.

இவருக்கு கடவுள் பக்தி மிக அதிகமாக இருக்கிறது. “முதலில் எனக்கு நிச்சயமானபோது, நான் வழிபாடு செய்தேன். அப்போது என் உள் மனது, அதை ரத்து செய்துவிடுமாறு சொன்னது. அனுப்பை பற்றிய பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருந்தபோது என் உள்மனது, இன்னும் ஏன் தாமதிக்கிறாய்? என்று கேட்டது. என்னால் சிறு துக்கத்தைகூட தாங்கிக்கொள்ள முடியாது. அழுதுவிடுவேன். திருமணமாகி கணவர் வீட்டிற்கு செல்லும்போது, என் பெற்றோரை பிரிவதை நினைத்து அழுதுவிட்டேன். என்னோடு நிழலாக நடந்து என்னை இந்த அளவுக்கு ஆளாக்கியது என் பெற்றோர்தான். அவர்கள் பார்வையற்ற என்னை வீட்டிற்குள்ளே முடக்கிப்போட்டிருந்தால், நான் இ்ந்த நிலைக்கு வளர்ந் திருக்க முடியாது. நான் இந்த உலகத்தை கண்குளிர பார்க்க ஆசைப்படுகிறேன். கண் சிகிச்சைக்காக அடுத்த ஆண்டு அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருக்கிறோம். எனக்கு பார்வை கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்..” என்கிறார், விஜயலெட்சுமி.

அவருக்கு பார்வை கிடைக்க வேண்டும் என்பதுதான் அவரது இசை ரசிகர்கள் அனைவரது பிரார்த்தனையும்..! 

Next Story