சினிமா செய்திகள்

காதல் தோல்வியால் ஆண்களை வெறுத்தேன் - நித்யா மேனன் + "||" + I hated men because of love failure - Nithya Menon

காதல் தோல்வியால் ஆண்களை வெறுத்தேன் - நித்யா மேனன்

காதல் தோல்வியால் ஆண்களை வெறுத்தேன் - நித்யா மேனன்
“டைரக்டர் என்னிடம் வந்து கதையை சொல்லிக் கொண்டிருக்கும்போதே மனதுக்குள் இருந்து யாரோ, அதில் நடிக்கலாம் என்று சொல்வார்.
சில நேரங்களில், நடிக்க வேண்டாம் என்றும் உள்ளுணர்வு சொல்லும். நான் என் மனது சொல்வதைதான் செய்வேன். நான் நடிக்க மறுத்த சினிமாக்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டாலும் அதை நினைத்து வருத்தப்பட மாட்டேன்” என்று கலகலப்பாக சொல்கிறார், நடிகை நித்யா மேனன். தமிழிலும், தெலுங்கிலும் கலக்கிக் கொண்டிருந்த நித்யா மூன்று வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் அவரது தாய் மொழியான மலையாளத்தில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். மனதில் இருப்பதை அப்படியே வெளிப்படுத்தி அதிரடியாக பேசும் நித்யா மேனனின் பேட்டி:

மலையாள படங்களில் நடிக்க நீண்ட இடைவெளி உருவானது ஏன்?

“மலையாளப் படம் வேண்டாம் என்று நினைத்துக்கொண்டு நான் மற்ற மொழிப் படங்களில் நடிக்க செல்லவில்லை. தமிழிலும், தெலுங்கிலும் நான்கு படங்களில் நடிக்கும்போது ஒரு வருடம் கடந்து போய்விடும். பின்பு மலையாளத்தில் நடிக்க நாள் இருக்காது. 365 நாட்களும் நடித்துக் கொண்டிருப்பவள் நான். இப்போது நான் நடித்துக் கொண்டிருக்கும் பிரணா, கதையை கேட்டபோதே பிடித்து விட்டது. மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் இதன் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. நான்கு மொழிகளில் தெரிந்த நடிகை வேண்டும் என்று விரும்பி, என்னை டைரக்டர் தேர்ந்தெடுத்திருக்கிறார். எனக்கு தமிழ், இந்தி உள்பட ஆறு மொழிகள் தெரியும். கூடுதலாக சில மொழிகளும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். தற்போது பெங்காலி படிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்..”

நடிப்பு மீது ஒரு கட்டத்தில் உங்களுக்கு வெறுப்பு இருந்து கொண்டிருந்தது. அது நீங்கி விட்டதா?

“நடிப்பை நான் விரும்பி தேர்ந்தெடுக்கவில்லை. ஊடகத்துறையைத்தான் நான் விரும்பினேன். பிளஸ்-டூ கோடைவிடுமுறையில் நான் இருந்து கொண்டிருந்தபோது டைரக்டர் கே.பி.குமாரன் ஆகாச கோபுரம் படத்தில் நடிக்க அழைத்தார். ஷூட்டிங் லண்டனில் நடக்கும் என்று சொன்னதால், அந்த மாநகரத்தை பார்க்கும் ஆசையில் ஒத்துக்கொண்டேன். பின்பு சில சினிமாக்களில் நடித்தாலும், அதை எல்லாம் நான் ரசித்து செய்யவில்லை. ஒவ்வொரு சினிமாவில் நடிக்கும்போதும் அடுத்த சினிமாவில் நடிக்கக்கூடாது என்றுகூட நினைப்பேன். அது போன்ற சிந்தனைகளில் இருந்து இரண்டு வருடங்களுக்கு முன்பே கடந்து விட்டேன். ஓய்வில் இருக்கும்போது கதை எழுதுவேன். தற்போது சினிமாவுக்காக இரண்டு கதைகள் தயார் செய்து விட்டேன்”

மலையாள சினிமாவில் இருக்கும் பெண்கள் அமைப்பில் உங்களை காண முடியவில்லையே?

“சினிமாவில் பெண்களுக்கென்று தனி அமைப்பு தேவையில்லை என்று நான் கூறியதாக சிலர் எழுதினார்கள். அது சரியல்ல. நான் அப்படி சொல்லவில்லை. அதுபோன்ற அமைப்பை விரும்புகிறவர்களுக்கு அது தேவைப்படும். எனக்கானது வித்தியாசமானது. தனி வழியாகும். முன்பு மலையாள திரை உலகில் எனக்கு பிரச்சினை ஏற்பட்டபோது நான் அதை தனியாகத்தான் எதிர்கொண்டேன். யாரிடமும் உதவி கேட்கவில்லை. அது என் குணம். கசப்பான அனுபவங்களால் நான் படப்பிடிப்பில் இருந்து வெளிநடப்பு செய்தேன் என்றும் செய்தி வெளியானது. அப்படிப்பட்ட மோசமான அனுபவங்கள் எதுவும் எனக்கு இதுவரை ஏற்பட்டதில்லை. சினிமாவில் நடிக்க ஒத்துக்கொண்டுவிட்டு, படப் பிடிப்பு நடக்கும்போது வெளிநடப்பு செய்வதெல்லாம் நடக்கக்கூடிய காரியம் அல்ல. ஆனால் பெண்களுக்கு பிரச்சினை என்பது எல்லா துறைகளிலும் இருக்கிறது. ‘மீ டூ’கூட சினிமாவில் மட்டும் இருக்கும் பிரச்சினை அல்ல. நடிகைகள் பிரபலமானவர் களாக இருப்பதால், மக்கள் அதன் மீது அதிக கவனம் செலுத்துகிறார்கள்”

பொதுவாக நீங்கள் தனிமை விரும்பியா?

“கூட்டத்தோடு இருக்கவும், தனியாக இருக்கவும் எனக்கு பிடிக்கும். தனியாக இருக்கும்போது அதிகமாக சிந்திப்பேன். கடவுளை பற்றியும் அப்போது நினைத்துப் பார்ப்பேன். என் பெற்றோருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் நான், நமக்கு மேல் ஒரு சக்தி இருப்பதாக நம்புகிறேன். அதற்கு எந்த பெயர்வைத்தும் அழைக்கலாம். விதி, விசுவாசம், ஆச்சாரங்களை நம்பும் பழமையான பெண் நான். சினிமா இல்லாவிட்டால் வீட்டில் சும்மாவே இருப்பேன். பயணங்களில் எனக்கு விருப்பம் கிடையாது. இசை ரொம்ப பிடிக்கும். இசைப் பயிற்சி பெற்றிருந்தாலும் எனக்கு இதுவரை சினிமாவில் பாடும் அதிர்ஷ்டம் அமையவில்லை”

உங்கள் உடல் குண்டாகிவிட்டதாக ஒரு தகவல் பரவியதே..?

“உடல் குண்டு.. உயரம் குறைவு என்பது போன்ற விமர்சனங்களை நான் பொருட்படுத்துவதே இல்லை. திறமைக்கு மதிப்பளிக்கும் துறையில் நான் வேலைபார்க்கிறேன். இங்கு உடல் அழகுக்கு ஓரளவுதான் முக்கியத்துவம் உண்டு. அதனால் என் உடலை பற்றி எனக்கு கவலைஇல்லை. உடல்மெலிய வேண்டும் என்பதற்காக பட்டினி கிடக்கவோ, ஜிம்மிற்கு போகவோ நான் தயாரில்லை. அதே நேரத்தில் சினிமாவை பற்றியும், நடிப்பை பற்றியும் எனக்கு சரியான புரிதல் உண்டு. குறைகளை மறக்கடிக்கும் அளவுக்கு நிறைகள் என்னிடம் உண்டு என்று நான் நம்புகிறேன்”

உங்களை பற்றிய கிசுகிசுக்களை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?

“கிசுகிசுக்களை நான் பொருட்படுத்துவதில்லை. அதனால் அது தரும் மனஉளைச்சல் குறையும் என்று சொல்வதற்கில்லை. மற்றவர்களுக்கு மன வலியை கொடுப்பவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள். முதல் காதலில் நான் ஆழ்ந்துபோயிருந்தேன். அந்த காதல் முறிந்துபோனதும் மிகுந்த கவலைகொண்டேன். அதனால் கொஞ்ச காலம் ஆண்களையே வெறுத்தேன். அதன் பிறகு ஒரு காதலும் இல்லை. ஆனாலும் கிசுகிசு வருகிறது.

தெலுங்கில் பிரபல நடிகரின் குடும்ப வாழ்க்கையில் பிரிவு ஏற்பட நான்தான் காரணம் என்றெல்லாம்கூட சொன்னார்கள். நாங்கள் இணைந்து நடித்த சினிமா அப்போது வெளியானதுதான் அதற்கு காரணம். அந்த நாட்களில் நான் மிகுந்த வேதனையை அனுபவித்தேன். யாரோடும் அதற்கு விளக்கம் சொல்லவும் நான் விரும்பவில்லை. எனக்கு வலியை கொடுத்தவருக்கு அது மகிழ்ச்சியை கொடுத்திருக்கும். அந்த காதல் கிசுகிசுவில் உண்மை இல்லை என்பது இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும். அந்த நடிகர் விவாகரத்து பெற்று வெகுநாட்கள் ஆகிவிட்டன. அந்த கிசுகிசு உண்மை என்றால், இதற்குள் நாங்கள் திருமணம் செய்துகொண்டிருக்கவேண்டும்.

எனது உலகம் எனக்கு மட்டுமே சொந்தம். திரு மணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக நான் யாரையும் திருமணம் செய்யமாட்டேன். பொருத்தமானவரை கண்டறிந்தால் திருமணம் செய்துகொள்வேன். நடிப்பை பொறுத்தவரையில் என் திறமையில் ஒரு பங்கைதான் நீங்கள் பார்த் திருக்கிறீர்கள். டைரக்டர்கள் அந்த அளவுக்குத்தான் என் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு தந்திருக்கிறார்கள். அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். அந்த ஆசை நிறை வேறிய பிறகு சினிமாவை டைரக்ட் செய்வேன்..”

நடிகை.. கதை ஆசிரியர்.. அடுத்து டைரக்டர் ஆகும் தகுதியும் நித்யா மேனனிடம் இருக்கிறது!