சினிமா செய்திகள்

‘டத்தோ’ பட்டம் விவகாரம் : ராதாரவி மீது சின்மயி மீண்டும் புகார் + "||" + 'Datho' degree Affair: Chinmayi again complains about Radharavi

‘டத்தோ’ பட்டம் விவகாரம் : ராதாரவி மீது சின்மயி மீண்டும் புகார்

‘டத்தோ’ பட்டம் விவகாரம் : ராதாரவி மீது  சின்மயி மீண்டும் புகார்
பாடகி சின்மயி மீ டூவில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினார். ராதாரவிக்கு மலேசியாவில் வழங்கிய டத்தோ பட்டம் போலி என்றும் கூறிவருகிறார். இந்த நிலையில் முகநூல் பக்கத்தில் நேரடியாக அவர் பேசியதாவது:–
‘‘மீ டூ ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஆகிறது. பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லைகள் சகஜமாக நடக்கிறது. பாலியல் கொடுமைகளை பெண்கள் தைரியமாக வெளியே சொல்ல வேண்டும். மீ டூவில் நான் புகார் சொன்ன பிறகு நிறைய பேர் என்னை வசைபாடினார்கள். முதலில் கஷ்டமாக இருந்தது. இப்போது சகஜமாகி விட்டது. 

பெண்களை பாலியல் தொல்லைக்கு பயந்து வீட்டில் அடைக்காதீர்கள். கணவன் மனைவி என்றாலும் மனைவி விருப்பத்துக்கு எதிராக தொடக்கூடாது. பிரச்சினைகளை பெண்கள் வெட்கப்படாமல் பேசவேண்டும். நான் 2016–ல் இருந்து டப்பிங் யூனியன் உறுப்பினர் இல்லை என்று சொல்லும் ராதாரவி கடந்த 2 ஆண்டுகளில் 4 படங்களில் டப்பிங் பேச ஏன் ஒப்புக்கொண்டார்?. 

டப்பிங் யூனியன் உறுப்பினர்களிடம் இருந்து வசூலிக்கும் பணத்தில் கட்டிய கட்டிடத்துக்கு டத்தோ ராதாரவி வளாகம் என்று பெயர் சூட்டியது ஏன்? மீ டூ புகார் சொன்னால் நடிக்க வராதீர்கள். ஆண்களே பெண் வேடமிட்டு நடிப்பார்கள் என்று ஏன் எச்சரிக்கிறார்? டத்தோ பட்டத்தை மெலாகா அரசு அவருக்கு கொடுக்கவில்லை. சுல்தான் ஒருவர் வழங்கியதாக கூறுகிறார். அந்த சுல்தான் உண்மையானவர் இல்லை என்கிறார்கள். 

மீ டூவில் நான் பேசுவதற்கு பா.ஜனதா காரணம் என்றும், பெங்களூருவில் அந்த கட்சி எனக்கு ஒரு அபார்ட்மெண்ட் வீடு வாங்கி கொடுத்துள்ளது என்றும் செய்தி வந்தது. பா.ஜனதா கொள்கைகளை விமர்சித்து இருக்கிறேன். நான் எந்த கட்சிக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ இல்லை.’’

இவ்வாறு சின்மயி கூறியுள்ளார்.