‘கே.ஜி.எப்’ படம் மூலம் கன்னட நடிகரை தமிழில் அறிமுகப்படுத்திய விஷால்


‘கே.ஜி.எப்’ படம் மூலம் கன்னட  நடிகரை  தமிழில் அறிமுகப்படுத்திய விஷால்
x
தினத்தந்தி 12 Dec 2018 11:15 PM GMT (Updated: 12 Dec 2018 6:43 PM GMT)

பிரபல கன்னட நடிகர் யஷ், ‘கே.ஜி.எப்’ என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்த படம் கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. ரூ.80 கோடி செலவில் தயாரித்துள்ளனர்.

பாகுபலி உள்ளிட்ட சில தெலுங்கு படங்கள் தமிழிலும் வந்து வரவேற்பை பெற்றன. 

கே.ஜி.எப் படத்தை  வாங்கி தமிழகம் முழுவதும் நடிகர் விஷால் தனது பட நிறுவனம் சார்பில் வெளியிடுகிறார். நடிகர் யஷ்ஷை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் நடிகர் விஷால் கலந்து கொண்டு யஷ்ஷை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தார். விழாவில் விஷால் பேசியதாவது:–

‘‘பாகுபலி படம் தமிழில் வெளியானதன் மூலம் பிரபாஸ் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். தொடர்ந்து அவரது படங்கள் தமிழில் வெளியாகின்றன. இப்போது கன்னட நடிகர் யஷ் கே.ஜி.எப் படம் மூலம் தமிழுக்கு வந்துள்ளார். கே.ஜி.எப் என்பது கோலார் தங்க வயல் என்ற பெயராகும். 

இந்த படத்தில் உலகளாவிய கருத்து உள்ளது. இதனால் தமிழ் பதிப்பை நானே வெளியிடுகிறேன். ஏற்கனவே கன்னட நடிகர்கள் தமிழில் பெரிய நடிகர்களாக உயர்ந்துள்ளனர். யஷ்சுக்கும் இந்த படம் மூலம் தமிழில் வாய்ப்புகள் கிடைக்கும். நானும் அவரை வைத்து தமிழ் படம் தயாரிக்க தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு பேசினார்.

நடிகர் யஷ் பேசும்போது, ‘‘தமிழ் ரசிகர்கள் நல்ல கதையம்சம் உள்ள பிறமொழி படங்களுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். என்னையும் ஏற்பார்கள் என்ற நம்பிக்கை மூலம் கே.ஜி.எப் படத்தின் மூலம் தமிழுக்கு வந்துள்ளேன்.’’ என்றார்.

Next Story