ரஜினிகாந்துக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு


ரஜினிகாந்துக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு
x
தினத்தந்தி 18 Dec 2018 7:52 AM GMT (Updated: 18 Dec 2018 7:52 AM GMT)

கஸ்தூரிராஜாவுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில், ரஜினிகாந்துக்கு எதிராக பைனான்சியர் முகன்சந்த் போத்ரா தாக்கல் செய்த வழக்கை சென்னை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் பைனான்சியர் முகன்சந்த் போத்ரா. இவர் திரைப்பட இயக்குனரும், நடிகர் தனுசின் தந்தையுமான கஸ்தூரிராஜாவுக்கு எதிராக செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.

அது தொடர்பான ஒரு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, கஸ்தூரிராஜா வாங்கிய கடனுக்கு நடிகர் ரஜினிகாந்த் உத்தரவாதம் கொடுத்தார். அதனால் கடன் கொடுத்தேன் என்று கூறியிருந்தார்.
 
இதையடுத்து முகன்சந்த் போத்ரா தன்னிடம் பணம் பறிக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தி, நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இந்த குற்றச்சாட்டினால் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறி நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக அவதூறு வழக்கை ஜார்ஜ் டவுன் குற்றவியல் கோர்ட்டில் முகன்சந்த் போத்ரா தாக்கல் செய்தார். 

இந்த வழக்கு விசாரணைக்கு முகன்சந்த் போத்ரா தொடர்ந்து ஆஜராகவில்லை என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் முகன்சந்த் போத்ரா வழக்கு தொடர்ந்தார்.

இதற்கிடையே தனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டில்  ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் உரிமையியல் வழக்கை நிராகரிக்கக் கோரிய கருத்தின் அடிப்படையில் இந்த வழக்கை தொடர முடியாது. எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 

ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்  அவருடைய வழக்கு விசாரணைக்கு தடை விதித்திருந்தது. 

இந்த நிலையில், இந்த வழக்கின் இறுதி உத்தரவு இன்று வெளியாகி இருக்கிறது. அதில், ரஜினிகாந்துக்கு எதிராக ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ரத்து செய்து உத்தரவிட்டார். 

Next Story