நடிகை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற கோரிய நடிகர் திலீப் மனு தள்ளுபடி


நடிகை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற கோரிய நடிகர் திலீப் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 19 Dec 2018 9:30 PM GMT (Updated: 19 Dec 2018 4:49 PM GMT)

நடிகை கடத்தல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட கோரிய நடிகர் திலீப் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கேரளாவில் 2017-ம் ஆண்டு நடிகையை காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைதானார்கள். மலையாள நடிகர் திலீப்புக்கும் இந்த கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார்.

இப்போது அவர் ஜாமீனில் இருக்கிறார். பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ பதிவை திலீப்புக்கு எதிரான வலுவான ஆதாரமாக கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். அந்த வீடியோ பிரதியை தன்னிடம் ஒப்படைக்க கோரி திலீப் கேரள கோர்ட்டில் மனுதாக்கல் செய்து அது நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை கடத்தல் வழக்கில் போலீசார் போலியான ஆதாரங்களை திரட்டி தன்னை சிக்க வைத்து இருப்பதாகவும், எனவே வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும் கேரள ஐகோர்ட்டில் திலீப் மனுதாக்கல் செய்தார். நீதிபதி சுனில் தாமஸ் தலைமையிலான பெஞ்ச் இதுகுறித்து விசாரித்து திலீப் மனுவை தள்ளுபடி செய்தது.

“போலீஸ் விசாரணை சரியான திசையில் செல்கிறது. விசாரணை திருப்தி அளிப்பதாகவும் உள்ளது. எனவே வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தேவை இல்லை” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story