சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் கட்சிக்காக விரைவில் உதயமாகிறது சூப்பர் ஸ்டார் டி.வி. + "||" + Rajinikanth fans launching TV channel?

ரஜினிகாந்த் கட்சிக்காக விரைவில் உதயமாகிறது சூப்பர் ஸ்டார் டி.வி.

ரஜினிகாந்த் கட்சிக்காக விரைவில் உதயமாகிறது சூப்பர் ஸ்டார் டி.வி.
ரஜினி தனது கட்சிக்காக புதிய டி.வி. சேனல் தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட போவதாக கூறி சரியாக ஓராண்டு முடியப் போகிறது.

ஆனால் இன்னமும் அவர் எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. அவரது கைவசம் சில சினிமா படங்கள் இருப்பதால், தற்போது அவரது முழு கவனமும் அந்த படங்களை முடித்துக் கொடுப்பதிலேயே உள்ளது.

இதற்கிடையே ரஜினி தனது கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிப்பதற்காக “ரஜினி மக்கள் மன்றம்” எனும் அமைப்பை உருவாக்கி உள்ளார். 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்குடன் ரஜினி மன்றத்தினர் உறுப்பினர் சேர்க்கையை தீவிரமாக நடத்தி வருகிறார்கள். உறுப்பினர்களாக சேருபவர்களுக்கு உடனுக்குடன் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வளவு வேலைகள் நடந்தாலும் ரஜினி தனது புதிய அரசியல் கட்சியை எப்போது தொடங்குவார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது. பாராளுமன்றத்துக்கு இன்னும் 4 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னதாக ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்பதில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் ரஜினி தனது கட்சிக்காக புதிய டி.வி. சேனல் தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விண்ணப்பங்கள்  வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 6 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ரஜினி ரசிகர் மன்றத்தின் மூத்த நிர்வாகி வி.எம்.சுதாகர் பெயரில் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து ரஜினி கட்சியின் டி.வி. சேனல் பெயரை முறைப்படி பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களையும் கடந்த மாதம் 9-ந்தேதி “டிரேடு மார்க் ரிஜிஸ்டிரார்” அலுவலகத்தில் தாக்கல் செய்தனர். அதில் ரஜினி கட்சி டெலிவி‌ஷனுக்கு மூன்று பெயர்கள் தேர்வு செய்து பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

சூப்பர் ஸ்டார் டி.வி., ரஜினி டி.வி., தலைவர் டி.வி. ஆகிய மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த 3 பெயர்களில் “சூப்பர் ஸ்டார் டி.வி.” எனும் பெயருக்கு முன்னுரிமை கொடுத்து டி.வி. சேனல் பெயருக்கு அனுமதி வழங்கும்படி சுதாகர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சூப்பர் ஸ்டார் டி.வி. பெயர் அருகில் ரஜினி படத்துடன் லோகோ ஒன்றும் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கும் அனுமதி அளிக்கும்படி கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

இதற்கிடையே நடிகர் ரஜினியும் “டிரேடு மார்க்”கை பதிவு செய்யும் அதிகாரிக்கு தனியாக ஒரு கடிதம் கொடுத்து உள்ளார். அந்த கடிதத்தில் அவர், “சென்னை அண்ணாநகர் கிழக்கு என் பிளாக் லோட்டஸ் காலனியில் வசிக்கும் வி.எம். சுதாகர் எனது பெயரில் டெலிவி‌ஷன் சேனல் தொடங்க விண்ணப்பித்துள்ளது தொடர்பாக இந்த கடிதம் தருகிறேன். சூப்பர் ஸ்டார் டி.வி., ரஜினி டி.வி., தலைவர் டி.வி. பெயர்களை பயன்படுத்த எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று கூறி உள்ளார்.

மேலும், “அந்த சானலில் எனது புகைப்படம், லோகோ, லேபிள் போன்றவற்றை பயன்படுத்தவும் எனக்கு ஆட்சேபனை இல்லை. எனவே சுதாகர் தாக்கல் செய்துள்ள விண்ணப்பத்தை ஏற்று அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்றும் தனது கடிதத்தில் ரஜினி குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியின் கடிதத்தை தொடர்ந்து விரைவில் தடை இல்லா சான்றிதழ் வழங்குவார்கள் என்று தெரிகிறது. என்றாலும் ரஜினி கட்சியின் டி.வி. சேனல் எப்போது தொடங்கப்படும் என்பது பற்றிய தகவல்களை ரஜினி மன்ற நிர்வாகிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்பட பெரும்பாலான தமிழக கட்சிகள் தங்களுக்காக டி.வி. சேனல்கள் வைத்துள்ளன. அதன் மூலம் அந்தந்த கட்சி தகவல்கள் வெளியிடப்படுகின்றன. 

ரஜினி கட்சிக்கும் டெலிவி‌ஷன் சேனல் வரும் பட்சத்தில் அதில் ரஜினி தொடர்பான தகவல்களை வெளியிட்டு மக்களிடம் ஆதரவு திரட்ட முடியும் என்று ரஜினி மக்கள் மன்றத்தினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.