சினிமா செய்திகள்

சிவாஜியை சீண்டிப்பார்த்த நாகேஷ் + "||" + Nagesh is teased sivaji

சிவாஜியை சீண்டிப்பார்த்த நாகேஷ்

சிவாஜியை சீண்டிப்பார்த்த நாகேஷ்
ஒரு புகழ்பெற்றக் கலைஞனின் நடிப்பை, அப்படியே நகல் எடுப்பது அல்லது பின்பற்றி அப்படியே செய்வது என்பது தற்கொலைக்குச் சமானம். அது நாகேஷூக்கு நன்றாகத் தெரியும்.
ஆனால் ஒருவரின் மேனரிஷத்தை உள்வாங்கிக் கொண்டு, அதை தனக்கான பாணியில் வெளிப்படுத்துவார். அதற்கு ‘திருவிளையாடல்’ படம் மிகச் சிறந்த உதாரணம்.

அந்தப் படத்தில் கோவிலுக்குள் நாகேஷ், தானாகவே புலம்புகின்ற காட்சி வரும். “வரமாட்டான்.. வரமாட்டான்.. நம்பாதே, அவனை நம்பி நம்பி புலமை போச்சு; கத்தி கத்தி குரலும் போகப்போகுது” என்பதாக அந்த வசனம் அமைந்திருக்கும்.

அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நாகேஷூக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது, மயிலாப்பூர் தெப்பக் குளக்கரையில் ஒரு பிராமணர். அவர் தனக்குத்தானே பேசிக் கொண்டு நிற்பதை ஒரு முறை நாகேஷ் கவனித்திருக்கிறார். அந்த நபர் தமிழும், ஆங்கிலமும் கலந்து புலம்பியிருக்கிறார். அதைத் தான் ‘திருவிளையாடல்’ படத்தில் தருமி கதாபாத்திரத்திற்காக கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார் நாகேஷ். என்ன இது புராணப் படம் என்பதால், தமிழில் பேசி புலம்பினார். ‘நடிப்பே.. திருடுவது தான்’ என்பார் நாகேஷ்.

‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் நாகேஷ் நடித்துக் கொண்டிருந்த நேரம் அது. உயர் நீதி மன்றத்தில் அவரது மைத்துனர் (மனைவியின் சகோதரர்) மரணம் குறித்து ஒரு வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாகேஷின் குடும்பத்தினர் அடிக்கடி வழக்குமன்றம் செல்ல வேண்டிஇருந்தது. ஊடகங்களும் அந்த வழக்கு பற்றிய விவரங்களை பெரிய அளவில் வெளியிட்டுக் கொண்டிருந்தன. நாகேஷ் இவற்றால் மனஉளைச்சல் அடைந்திருந்தார். எனினும் தொடர்ந்து படப்பிடிப்புக்கு சென்று கொண்டிருந்தார். தயாரிப்பாளர்களுக்கு அதிகம் ஒத்துழைப்பு கொடுத்தார்.

“ஒருநாள் வீட்டில் வழக்கு தொடர்பான விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. அன்று ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் பாலையா அண்ணனை, நான் கிண்டல் செய்யும் காட்சியில் நடிக்க வேண்டியதிருந்தது. ‘காசு வாங்கினீங்கள்ள வாசிங்கய்யா..’ என்பதாக அந்த கிண்டல் செய்யும் வசனம் வரும். அந்தக் காட்சியில் நான் எப்படி நடிச்சிருப்பேன்னு எண்ணிப்பார் ராஜேஷ்” என்று ஒரு முறை நாகேஷ் என்னிடம் கூறினார்.

நான் அவரிடம், “யாராலும் அந்த மன நிலையிலும், சூழ்நிலையிலும் நடிக்க முடியாது சார். உங்களுடைய மூளையை தனித்தனி சேனலாக வடிவமைத்து வைத்திருக்கிறீர்கள். அதனால் தான் சோகச் சேனலை அடைத்துவிட்டு, சிரிப்பு சேனலை திறந்து விட்டு அதில் நடித்திருக்கிறீர்கள்” என்றேன்.

ஒருநாள் நாகேஷூடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சாப்பாடு பற்றி பேச்சு வந்தது. “யோவ் ராஜேஷ், சிவாஜி வீடு மாதிரி ருசியா நான் எங்கேயுமே சாப்பிட்டதில்லையா? அவர் மனைவி கமலாம்மாவுக்கு சமையலில் ஓர் பி.எச்டி. பட்டமே கொடுக்கலாம்” என்று சிலாகித்தார்.

“அப்படி என்ன நடந்தது?” என்று கேட்டேன்.

ஒருநாள் சிவாஜியும், நாகேஷூம் ஷூட்டிங் முடிந்து புறப்பட்ட போது, அதிகாலை 3 மணி. அப்போது சிவாஜி, ‘நாகேஷ், நீ மிகவும் சோர்வாக இருப்பது போல் தெரிகிறது. எங்க வீட்டிற்கு வந்து சூடா இரண்டு தோசை சாப்பிட்டு போ” என்று அழைத்தார்.

“எப்படி பார்த்தாலும் சிவாஜி வீட்டிற்கு செல்ல 4.30 மணி ஆகும். ரெண்டும்கெட்டான் நேரத்தில் எப்படி சாப்பிடுவது?” என்று நினைத்தாலும், சிவாஜி அழைத்ததால் மறுக்காமல் சென்றார் நாகேஷ்.

படப்பிடிப்பு தளத்தில் இருந்து புறப்படும்போதே மனைவிக்கு போன் செய்து, நாகேஷூடன் வருவதாக சிவாஜி சொல்லிவிட்டார். காலை 4.30 மணிக்கு இருவரும் சாப்பிட அமர்ந்தனர். கமலாம்மா சூடான தோசையை பரிமாற, அதை ரசித்து ருசித்து சாப்பிட்டிருக்கிறார் நாகேஷ்.

இதை அவர் என்னிடம் சொல்லும் போது, “ராஜேஷ்.. அந்தம்மா அந்த நேரத்தில் எழுந்து சட்னி அரைத்து, திருநெல்வேலி தோசை என்று சொல்லுவோமே.. அதுபோல குட்டி தேசைகள் இரண்டு வைத்து தேங்காய் சட்டினியை ஊற்றினார்கள். சட்டினியைத் தொட்டு வாயில் வைத்தேன். என்னய்யா ருசி. இரண்டுங்கெட்டான் நேரம்.. பசியே இல்லாத சமயம்.. ஆனாலும் ஐந்தாறு தோசைகள் சாப்பிட்டேன். அப்படியொரு சட்னியின் சுவையை நான் எங்கேயும் சாப்பிட்டதில்லை” என்றார்.

ஒரு நாள் நடிகர் சங்கத்தில் நடந்த கூட்டத்திற்கு நாகேஷ் வந்திருந்தார். நானும் சென்றிருந்தேன். எதற்காக அந்தக்கூட்டம் நடைபெற்றது என்று எனக்கு நினைவில்லை. நாகேசும் நானும் மண்டபத்திற்கு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தோம். அந்த நேரம் “டேய் நாகேஷ், சிகரெட் குடுடா” என்று ஒரு குரல் கேட்டது.

நான் குரல் வந்த திசையை திரும்பிப் பார்த்தேன். 75 வயது மதிக்கத்தக்க ஒருவர், லுங்கி கட்டிக்கொண்டு, சாதாரண சட்டை போட்டுக்கொண்டு, 10 நாட்களாக சவரம் செய்யாத முகத்தோடு நின்று கொண்டிருந்தார். அவரை எப்போதும் நடிகர் சங்க கூட்டம் நடைபெறும் பொழுதெல்லாம் பார்த்திருக்கிறேன். பழைய நாடக நடிகராக இருப்பார் என்று எண்ணியிருந்தேன்.

அன்று எனக்கு சரியான கோபம். ‘மிகப்பெரிய கலைஞரை இந்த ஆள் இப்படி அதிகார தோரணையோடு அழைக்கிறாரே’ என்று நினைத்தேன்.

நான் அதிர்ச்சியில் இருக்க.. நாகேஷ் தன்னிடம் இருந்த வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டைத் திறந்து, அந்த நபரிடம் நீட்டி “எடுத்துக்கடா..” என்றார்.

நான் வியப்போடு நிற்பதைப் பார்த்த நாகேஷ், “ராஜேஷ் நான் இருக்க வேண்டிய இடத்தில் இவன் இருக்க வேண்டியவன். எஸ்.ஆர்.ராஜகோபால் என்பது அவர் பெயர். ‘நல்லவன் வாழ்வான்’ படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் நடித்தவர். திறமை இருந்தது. ஆனால் அதிர்ஷ்டம் இல்லை” என்றார்.

நான் இப்போது அந்த மனிதரை மரியாதையோடு பார்த்துக் கொண்டிருந்தேன்.

நாகேஷ் நடிக்க வந்த ஆரம்பத்தில், ஒரு படத்தில் சிவாஜியுடன் நடித்தார். அப்போது மரியாதை நிமித்தமாக சிவாஜி உட்கார்ந்திருப்பதற்கு வெகுதூரம் தள்ளி நாகேஷ் அமர்வார். இதைக் கவனித்த சிவாஜி, “என்ன நாகேஷ், ரொம்ப தூரம் தள்ளிப் போறீங்க. நான் என்ன ஆகாதவனா?” என்று கேட்டிருக்கிறார்.

“அதுக்கில்லை சார். ஒரு மரியாதையால் சற்று தள்ளிப்போகிறேன்; உட்காருகிறேன். வேண்டுமானால் நாளையில் இருந்து உங்கள் பக்கத்திலேயே உட்காருகிறேன்” என்றிருக்கிறார்.

சொன்னபடி அடுத்த நாள், சிவாஜியின் அருகில் இடிப்பது போல் சென்றிருக்கிறார் நாகேஷ். அதைப் பார்த்த சிவாஜி, “என்ன நாகேஷ், இதற்கு என் தலை மேலேயே நடந்து போகலாமே” என்று கிண்டலாக கேட்டதும், “என்ன சார் இது, தள்ளிப்போனா நான் என்ன ஆகாதவனா என்கிறீர்கள். பக்கத்தில் சென்றால் ஏன் தலைமேலே நடந்து போயேன் என்கிறீர்கள். நான் என்னதான் செய்வது?” என்று தானும் கிண்டல் செய்திருக்கிறார். “வச்சா குருமி.. அடிச்சா மொட்டையா?” என்று கூறி சிரித்தாராம் சிவாஜி.

1983-ம் ஆண்டு ஏவி.எம். ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்த, என்னுடைய திருமணத்திற்கு நாகேஷ் வந்து எங்களை ஆசீர்வதித்தார். 1987-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த, என்னுடைய தங்கையின் திருமணத்திற்கும் வந்தார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் வந்து மணமக்களை வாழ்த்தினார். நாகேஷ் சாரைப் பார்த்த எம்.ஜி.ஆர். அவரை அழைத்து தன்னுடைய பக்கத்து இருக்கையில் அமரச் செய்து, வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

என்னுடைய 50-வது பிறந்த நாளுக்கு, நாகேஷ் வீட்டிற்குச் சென்று அவரிடமும், அவரது மனைவியிடமும் ஆசி வாங்கி வந்தேன். அந்த நாட்களை எல்லாம் என்னால் மறக்க முடியாது.

புல்லாங்குழல் மேதை மாலியின் கச்சேரி, ஒரு முறை மயிலாப்பூரில் நடந்தது. அதில் முன்வரிசையில் நாகேஷ் அமர்ந்திருந்தார். மாலி அன்று கச்சேரிக்கு வந்ததே தாமதம். இதில் புல்லாங்குழலை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டார். அதனால் தனது காரியதரிசியை அனுப்பி வீட்டில் இருந்து புல்லாங்குழலை எடுத்துவரச் சொன்னார். அவரது வீடு தாம்பரத்தில் இருக்கிறது; கச்சேரி நடப்பதோ மயிலாப்பூரில் என்பதால் தாமதமாகும் என்பதை உணர்ந்த நாகேஷ் அங்கிருந்து புறப்படத் தயாரானார். புல்லாங்குழல் வந்து சேர்ந்தபிறகும் கூட கச்சேரியைத் தொடங்குவதில், மாலி தாமதம் செய்தார். இதனால் ரசிகர்களிடையே சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

இதை எல்லாம் கவனித்த மாலி, “நான் வாசிப்பது எனக்காகத் தான். அடுத்தவர்களுக்காக நான் என்றைக்குமே வாசித்ததில்லை. முக்கியமான வேலை இருப்பவர்கள் இப்பொழுதே புறப்படலாம். கச்சேரி ஆரம்பமான பிறகு இடையில் யாரும் போகக்கூடாது” என்று கூறியிருக்கிறார். மாலி அப்படிச் சொன்னதும் நாகேஷ் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

கச்சேரியை கொஞ்ச நேரத்தில் முடித்து விட்டு வெளியில் வந்த மாலி, அங்கே நாகேஷ் நிற்பதைப் பார்த்து விட்டு, “கச்சேரி கேட்கணும்னு வந்தீர். கேட்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்தமா?” என்று கேட்க, “ஆமாம்” என்று சொல்லியிருக்கிறார் நாகேஷ்.

உடனே நாகேஷ் வந்த காரில் ஏறி, “வாருங்கள் உங்களுடைய வீட்டிற்குப் போகலாம்” என்றாராம் மாலி.

இருவருமாக நாகேஷ் வீட்டிற்குச் சென்றனர். அங்கு வீட்டின் பெரிய அறையில் உட்கார்ந்து புல்லாங்குழலை எடுத்து வாசிக்க ஆரம்பித்து விட்டார் மாலி. இடைவிடாமல் 2½ மணி நேரம் வாசித்து நாகேஷை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறார். அது தன் வாழ்நாளில் நடந்த மறக்க முடியாத நிகழ்வு என்று நாகேஷ் குறிப்பிட்டிருக் கிறார்.

காலத்திற்கு ஏற்றபடி தன்னுடைய நடிப்பை மாற்றிக்கொண்டவர் நாகேஷ். அதனால் தான் அவரால் கடைசிக் காலம் வரை நடிக்க முடிந்தது. கமல்ஹாசன் போன்றவர்கள் நாகேஷின் திறமையை நன்றாக வெளிப்படுத்தினார்கள்.

“என்னை விட்டுப் பிரியக்கூடாதவர்களும், எனக்கு வேண்டியவர்களும் ஒன்று இறந்து விட்டார்கள் அல்லது என்னை விட்டு விலகி விட்டார்கள். ஆனால் என்னை விட்டு தினமும் பிரிய வேண்டிய சிறுநீர் மட்டும் பிரிய மாட்டேன் என்கிறது” என்று உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்து கடைசி காலத்திலும் கூட நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியவர் நாகேஷ்.

அவர் 2009-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதி மரணம் அடைந்தார். அவரது வீட்டிற்குச் சென்று அவருடைய உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். வெகு நேரம் வரை இருந்து விட்டு வந்தேன்.

தொலைக்காட்சிகள் இருக்கும்வரை, நாகேஷ் என்ற நகைச்சுவை கலைஞன், அனைவரின் உள்ளத்திலும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.

-தொடரும்.

பிச்சை எடுத்த நாகேஷ்

ஜெயகாந்தனுடன் நாகேஷூக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. ஒருநாள் ஜெயகாந்தன், நாகேஷ், இன்னொரு நண்பர் ஆகிய மூவரும் வெளியூரில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்தனர். வழியில் தொழுப்பேடு ரெயில்வே லெவெல் கிராசிங்கில் கார் நின்றது. ரெயில்வே கேட் திறப்பதற்கு அதிக நேரமாகும் என்று அறிந்ததும், ‘கேட் திறக்கும் வரை என்ன செய்வது?’ என்று மூவருக்கும் விளங்கவில்லை.

ஜெயகாந்தன் ஒரு யோசனை சொல்லியிருக்கிறார். கேட் திறக்கும் வரை, ரெயில்வே கேட்டில் அமர்ந்து பிச்சை எடுப்பது தான் அந்த யோசனை. முதலில் நாகேஷ் அதிர்ந்தாலும், ஒரு அனுபவத்துக்காக சம்மதித்தார்.

மூவரும் ஆடைகளை களைந்து விட்டு, அண்டர்வாருடன் ரோட்டின் ஓரத்தில் உட்கார்ந்தனர். அவர்களை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. ரெயில்வே கேட் திறக்க இருந்த நேரத்தில் மூவரும் போய் காரில் ஏறிக்கொண்டனர். இந்த மாறுவேட போட்டியில் நிஜ நடிகரான நாகேஷை விட, அதிக சில்லறை வாங்கி வெற்றிபெற்றவர் ஜெயகாந்தன்.

வாழ்நாள் வழக்கம்

மார்கழி மாதம் முடிவதற்குள் தானும் தன்னுடைய குடும்பத்தாரும் உபயோகித்த துணிமணிகளில் இருந்து, பொருட்கள் என பலவற்றையும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொடுத்து விடும் நல்ல பழக்கத்தை தன் வாழ்நாள் முழுவதும் நாகேஷ் கடைப்பிடித்து வந்தார். அவர் அப்படிக் கொடுக்கும் பொருட்களெல்லாம் நல்ல நிலையிலேயே இருக்கும். இன்னும் சில மாதங்கள் உபயோகப்படுத்தலாம். இருந்தாலும், மார்கழி மாதம் வந்துவிட்டால் எல்லாப் பொருட்களையும் கொண்டுபோய் கொடுத்துவிட்டு, தை மாதம் புதிய பொருட்களை வாங்கிக்கொள்வார்.