சர்ச்சைக்குரிய போஸ்டர்; நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்


சர்ச்சைக்குரிய போஸ்டர்; நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார்
x
தினத்தந்தி 21 Dec 2018 12:35 PM GMT (Updated: 21 Dec 2018 12:35 PM GMT)

புகைப்பிடிப்பது போன்ற சர்ச்சைக்குரிய போஸ்டர் தொடர்பாக நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி புகார் அளித்துள்ளது.

சென்னை,

நடிகை ஹன்சிகா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளவர்.  தமிழில் கடந்த 2011ம் ஆண்டு முதல் நடிக்க தொடங்கிய ஹன்சிகா சமீபத்தில் ‘மஹா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இதனை ஜமீல் டைரக்டு செய்கிறார்.  இது அவருக்கு 50வது படம்.

இந்த நிலையில், இந்த படத்தில் ஹன்சிகாவின் புகைப்பிடிக்கும் தோற்றம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சில சாமியார்களுடன் அமர்ந்து ருத்ராட்ச மாலை அணிந்தபடி, காவி உடையில் ஹன்சிகா கஞ்சா புகைக்கிறார். பின்னணியில் காசி கோவில் உள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளிவந்து வைரலாகி உள்ளது.  இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.

இதுபற்றி நடிகை ஹன்சிகா கூறும்போது “மஹா எனது 50-வது படம். அந்த படம் பெரிய அளவில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு ஏற்ப படத்தின் போஸ்டர் பற்றி பேசுகிறார்கள். இது ஒரு சாம்பிள்தான். இன்னும் நிறைய விஷயங்கள் படத்தில் உள்ளன” என்றார்.

இந்நிலையில், மஹா படத்தின் போஸ்டர் இந்துக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாகவும், இளம்பெண்களை திசைதிருப்பும் வகையிலும் உள்ளது என கூறி நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி புகார் அளித்துள்ளது.

Next Story