திரைப்படங்களில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த பாட்டி வறுமையில் வாடுகிறார் மெரினா கடற்கரையில் ‘கர்சீப்’ விற்று பிழைக்கிறார்


திரைப்படங்களில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த பாட்டி வறுமையில் வாடுகிறார் மெரினா கடற்கரையில் ‘கர்சீப்’ விற்று பிழைக்கிறார்
x
தினத்தந்தி 23 Dec 2018 7:46 PM GMT (Updated: 23 Dec 2018 7:46 PM GMT)

திரைப்படங்களில் ரசிகர்களை மகிழ்வித்த பாட்டி, வறுமை காரணமாக மெரினா கடற்கரையில் ‘கர்சீப்’ விற்று கொண்டிருக்கிறார்.

சென்னை,

தமிழ் திரைப்படங்களில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர், கே.ஆர்.ரங்கம்மாள் (வயது 75). சென்னை வடபழனி குமரன்காலனியில் வசித்து வருகிறார். மூதாட்டியான இவரது காமெடி ரசிக்கும்படி இருக்கும். குறிப்பாக ஒரு திரைப் படத்தில் வடிவேலுவை, ‘போற வழியிலேயே அப்படியே இந்த நாயை ‘சூ’ வென விரட்டிட்டு போ’, என்று இவர் பேசிய வசனம் பிரபலமானது. அன்று முதல் ‘சூ பாட்டி’ என்ற அடையாளம் இவருக்கு கிடைத்தது.

ரசிகர்களின் கவலைகளுக்கு நகைச்சுவையை மருந்தாக அளித்த அந்த பாட்டி, இன்று பட வாய்ப்புகள் இல்லாமல் வறுமையில் வாடுகிறார். தவமிருந்து 9 பிள்ளைகள் பெற்றிருந்தும், வயிற்று பிழைப்புக்காக சென்னை மெரினா கடற்கரையில் கர்சீப் விற்று காலத்தை போக்கி வருகிறார். கடற்கரைக்கு வருவோர் இவரை அடையாளம் கண்டுகொண்டு அவருடன் ‘செல்பி’ எடுத்து செல்கின்றனர். உற்சாகமாக போஸ் கொடுக்கும் ரங்கம்மாள், தன்னிடம் ஏதாவது பொருள் வாங்கி செல்லுமாறும் வேண்டுகோள் வைக்கிறார்.

தனது நிலை குறித்து ரங்கம்மாள் ‘தினத்தந்தி’ நிருபரிடம் உருக்கமாக கூறியதாவது:-

நான் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறேன். பல நடிகைகளுக்கு ‘டூப்’ ஆகவும் நடித்திருக்கிறேன். தமிழ் தவிர மலையாளம், இந்தி படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறேன்.

500 படங்களுக்கு மேல் நடித்து நான் சம்பாதித்த பணத்தை எனது பிள்ளைகளுக்கே செலவழித்து விட்டேன். தள்ளாத வயதில் நான் நடிக்க தயாராக இருந்தாலும் சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பெற்ற பிள்ளைகளும் கைவிட்ட நிலையில், சாப்பாட்டுக்கே வழியின்றி கஷ்டப்படுகிறேன்.

அதனாலேயே மெரினா கடற்கரைக்கு வந்து கர்சீப் மற்றும் கைவினை பொருட்களை விற்பனை செய்து வருகிறேன். இதன்மூலம் எனக்கு சொற்ப வருமானமே கிடைக்கிறது. அது எனக்கு போதுமானதாக இல்லை. எனவே எனக்கு தமிழக அரசோ அல்லது நடிகர் சங்கமோ உதவிக்கரம் நீட்டினால் நன்றாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story