‘வெப்’ தொடர்களுக்கு மாறும் நடிகர்-நடிகைகள்


‘வெப்’ தொடர்களுக்கு மாறும் நடிகர்-நடிகைகள்
x
தினத்தந்தி 23 Dec 2018 11:00 PM GMT (Updated: 23 Dec 2018 9:35 PM GMT)

நடிகர்-நடிகைகள் தற்போது வெப் தொடர்களுக்கு மாறி வருகின்றனர்.


டிஜிட்டல் துறையின் அடுத்த வளர்ச்சியாக இணையதள தொடர்கள் என்ற ‘வெப் சீரீஸ்’கள் உருவெடுத்துள்ளன. ஹாலிவுட்டில் அதிக வெப் தொடர்கள் வருகின்றன. இதற்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உள்ளது. அமெரிக்காவில் பிரபலமாக இருக்கும் வெப் தொடர் மோகம் இந்திக்கும் வந்துள்ளது.

முன்னணி நடிகர்-நடிகைகள் இதில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். சேக்ரட் கேம்ஸ், லஸ்ட் ஸ்டோரி உள்பட பல இந்தி வெப் தொடர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. சயீப் அலிகான், நவாசுதீன் சித்திக், ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இவற்றில் நடித்து இருந்தனர். மகாபாரதம் கதை வெப் தொடராக 7 பாகங்கள் தயாராகிறது. இதில் கிருஷ்ணர் வேடத்தில் அமீர்கான் நடிக்கிறார்.

இப்போது தமிழிலும் வெப் தொடர்கள் அதிகம் தயாராகின்றன. பாபி சிம்ஹா, பார்வதிமேனன் நடிப்பில் ‘வெள்ள ராஜா’ என்ற வெப் தொடர் வந்தது. பரத், ரோபோ சங்கர், பிரியா பவானி சங்கர் நடிக்க புதிய வெப் தொடர் தயாராகி வருகிறது. ரூ.50 லட்சம் செலவில் அரங்கு அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை சிலர் சினிமா படமாக்கும் முயற்சியில் இருக்க கவுதமேனன் அதை வெப் தொடராக எடுக்கிறார். இதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.

நடிகர் தனுசுக்கும் வெப்தொடர்களில் ஆர்வம் உள்ளது. “வெப் தொடர்கள் தயாரிக்கும் திட்டம் உள்ளது. விரைவில் அதை செயல்படுத்துவேன்“ என்று ஏற்கனவே தெரிவித்து உள்ளார்.

வெப் தொடர்களுக்கு தணிக்கை கிடையாது என்பதால் நிர்வாண காட்சிகளையும் ஆபாச வசனங்களையும் தாராளமாக புகுத்தி இளைஞர்களை இழுக்கிறார்கள். இதற்கு தணிக்கை அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்துள்ளனர்.



Next Story