பெண்கள் சபரிமலை செல்ல அடம்பிடிப்பதா? நடிகை காயத்ரி ரகுராம் எதிர்ப்பு


பெண்கள் சபரிமலை செல்ல அடம்பிடிப்பதா? நடிகை காயத்ரி ரகுராம் எதிர்ப்பு
x
தினத்தந்தி 25 Dec 2018 11:30 PM GMT (Updated: 25 Dec 2018 7:12 PM GMT)

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கு மகளிர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.

கேரள அரசும் தீர்ப்பை அமல்படுத்த முன்வந்தது. ஆனால் அய்யப்ப பக்தர்கள் தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். பெண்கள் சபரிமலைக்கு சென்று எதிர்ப்பினால் திரும்பும் சூழ்நிலை உள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து 12 பெண்கள் சபரிமலைக்கு சென்றனர். அவர்களுக்கும் எதிர்ப்பு கிளம்பியது. சபரிமலைக்கு செல்லவிடாமல் தடுத்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவிலுக்கு செல்ல முடியாமல் திரும்பினார்கள்.

இந்த நிலையில் சபரிமலைக்கு செல்ல முயற்சிக்கும் பெண்களுக்கு நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-

“சபரிமலை அய்யப்பன் கோவில் பற்றிய பாரம்பரிய வழக்கங்களில் நம்பிக்கை இல்லாத பெண்கள் எதற்காக சபரிமலைக்கு செல்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. அரசியல் காரணங்களால் மட்டுமே அங்கு செல்ல அடம்பிடிக்கிறார்கள். இதனால் எதை நிரூபிக்கப்போகிறீர்கள்?. உங்களுக்கு அய்யப்பன் மீது நம்பிக்கை இருந்தால் பல வருடங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதுபோல் 50 வயது கடந்த பிறகு அங்கு செல்லுங்கள்.”

இவ்வாறு காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

Next Story