சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் யார்? சிம்ரனா, திரிஷாவா? (வி.ஜெயராம், சென்னை)

சிம்ரன், திரிஷா இருவருமே ரஜினிகாந்தின் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். படத்தில், ரஜினிகாந்த் தொடர்பான முன்கதை இருக்கிறது. அதில், திரிஷா வருவார்!

***

சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பான ‘கனா’ வெற்றி படமா, தோல்வி படமா? போட்ட முதல் தேறியதா? (எஸ்.பிரேம்குமார், வால்பாறை)

‘கனா,’ திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் நல்ல வசூல் செய்து இருக்கிறது. அதன் மூலம் போட்ட முதல் தேறியதுடன் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் லாபம் கிடைத்து இருக்கிறது!

***

குருவியாரே, திரிஷா நடித்துள்ள ‘விண்ணைத்தாண்டி வருவாயா?,’ ‘96’ ஆகிய காதல் படங்களில் அவருக்கு மிகவும் பிடித்த படம் எது? (ஆர்.தங்கசாமி, நாகர்கோவில்)

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் நடித்தபோது, அவருடைய ‘மார்க்கெட்’ ஏறுமுகமாக இருந்தது. ‘96’–க்கு முன்பு அவர் இறங்குமுகமாக இருந்தார். அவரை மீண்டும் தூக்கி நிறுத்தியது, 96’ படம்தான். அதனால், ‘வி தா வ’ படத்தை விட, 96 படத்தின் மீது திரிஷாவுக்கு தனி மரியாதை!

***

நாகேஷ் கதாநாயகனாக நடித்த ‘தேன்கிண்ணம்’ படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்தவர் யார்? (ஏ.ஜி.தவ்பீக், மேலப்பாளையம்)

‘தேன்கிண்ணம்’ படத்தில் நாகேசுக்கு ஜோடியாக நடித்தவர், பழைய கவர்ச்சி நடிகை விஜயலலிதா!

***

குருவியாரே, அதிர்ஷ்டம், அழகு, திறமை ஆகிய மூன்றில் நயன்தாராவுக்கு இதுவரை கை கொடுத்தது எது? (நடராஜன், திருவண்ணாமலை)

அதிர்ஷ்டம் 60 சதவீதம், அழகு 30 சதவீதம், திறமை 10 சதவீதம்!

***

தேவர் பிலிம்ஸ் கலரில் தயாரித்த படங்களில், எம்.ஜி.ஆர். நடித்து இருக்கிறாரா? (கே.மணிகண்டன், தஞ்சை)

‘நல்ல நேரம்,’ கலர் படம்தான்! எம்.ஜி.ஆரும், கே.ஆர்.விஜயாவும் ஜோடியாக நடித்த படம், அது!

***

குருவியாரே, ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனும், ஜெய்சங்கரும் இணைந்து நடித்த முதல் படம் எது? அந்த படம் எப்போது திரைக்கு வந்தது? (பெ.மோகன், தூத்துக்குடி–3)

‘அன்பளிப்பு.’ அந்த படம் 1969–ல் திரைக்கு வந்தது!

***

‘இந்தியன்–2’ படத்தில் கதாநாயகி நயன்தாராவா, காஜல் அகர்வாலா? (கே.ஆர்.ரவீந்திரன், சென்னை–1)

நயன்தாரா பெயர் முதலில் அடிபட்டது. இப்போது காஜல் அகர்வால் பெயர் அடிபடுகிறது!

***

குருவியாரே, கண்ணதாசன், வாலி, வைரமுத்துவுக்கு பிறகு அதிகமான பாடல்களை எழுதிய கவிஞர் யார்? (எம்.பத்மநாபன், குடியாத்தம்)

மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார்.

***

ஏவி.எம்., சத்யா மூவிஸ், மதர்லேண்ட் பிக்சர்ஸ், சூப்பர் குட் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள் புதிய படம் தயாரிப்பதில்லையே, ஏன்? (ஜே.கோவிந்தராஜ், திருச்செங்கோடு)

தமிழ் திரையுலகுக்கு கடந்த சில வருடங்கள் கடுமையான சோதனைக்குரிய காலமாக இருந்தது. அதன் காரணமாக அந்த சில ஆண்டுகளாக பெரிய பட நிறுவனங்கள் புத்திசாலித்தனமாக பட தயாரிப்பில் இருந்து ஒதுங்கியிருந்தன. இந்த வருடம் (2018) திரைக்கு வந்த பல படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாக அமைந்தன. அதைத்தொடர்ந்து சில பெரிய பட நிறுவனங்கள் மீண்டும் பட தயாரிப்பில் ஈடுபடலாமா? என்று யோசித்து வருகின்றன!

***

குருவியாரே, செல்வராகவன் டைரக்‌ஷனில் சூர்யா நடித்து வந்த ‘என்.ஜி.கே.’ படம் எந்த நிலையில் உள்ளது? (பி.அரவிந்த், புதுச்சேரி)

‘என்.ஜி.கே. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. சூர்யா அடுத்த படத்துக்காக தயாராகி வருகிறார். புதிய படத்தில் அவருடைய தோற்றம் மாறுபட்டு இருக்குமாம்!

***

கே.பாக்யராஜ் இயக்கி நடிக்க, ‘முந்தானை முடிச்சு–2’ம் பாகம் தயாரானால்...? (ஆர்.செல்வராஜ், உடுமலைப்பேட்டை)

முருங்கைக்காய் விலை மேலும் உயர்ந்து விடும். முருங்கை கீரை, மற்றும் முருங்கை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பிசின் ஆகியவற்றுக்கு மவுசு கூடிவிடும்...!

***

குருவியாரே, மறைந்த நடிகர் ரகுவரன்–ரோகிணி தம்பதிக்கு எத்தனை குழந்தைகள்? (பி.செந்தில்நாதன், கடம்பூர்)

ரகுவரன்–ரோகிணி தம்பதிக்கு ஒரே ஒரு மகன் மட்டும் இருக்கிறார். அவர், அமெரிக்காவில் படித்து வருகிறார்!

***

ஜெய்–அஞ்சலி ஜோடியின் காதலுக்கும், கல்யாணத்துக்கும் தடை ஏற்படுத்தியவர் யார்? (எஸ்.கதிரேசன், கோவை)

ஜெய்–அஞ்சலி காதலுக்கு குறுக்கே நின்று தடை ஏற்படுத்தியவர், ஒரு தெலுங்கு பட அதிபர் என்று கூறப்படுகிறது. காதலர்களை பிரித்த பாவத்தை பங்கு போட்டுக் கொண்டவர், அவர்தான்!

***

குருவியாரே, ‘பார்ட்–2’ படங்களில் அதிக வசூல் செய்த படம் எது? (இ.ஜெயராமன், ஸ்ரீவைகுண்டம்)

பிரபாஸ்–அனுஷ்கா நடித்து, ராஜமவுலி இயக்கிய ‘பாகுபலி–2’.

***

‘கண்ணகி’யாக நடிக்க ஆசை என்று சொல்லும் நிவேதா பெத்துராஜின் ஆசை நிறைவேறுமா? (வி.ரகோத்தமன், வந்தவாசி)

படத்துக்கு ‘பைனான்ஸ்’ செய்வதற்கு ‘வசதியாக’ ஒருவர் கிடைத்தால்...கண்ணகி வேடத்தில் நிவேதா பெத்துராஜ் கேமரா முன்பு வந்து நிற்பார்!

***

குருவியாரே, பொங்கலுக்கு எத்தனை படங்கள் திரைக்கு வருகின்றன? (சின்னதுரை, சேலம்)

பொங்கல் விருந்தாக ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட,’ அஜித்குமார் நடித்த ‘விஸ்வாசம்’ ஆகிய 2 படங்களும் திரைக்கு வரும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளன!

***

ஜீவா நடித்த படங்களில் மிக அதிக நாட்கள் ஓடி வசூல் செய்த படம் எது? (ஆ.பாபு, ஆழ்வார் குறிச்சி)

‘கோ.’ ஜீவா நடித்து வெற்றி பெற்ற மற்ற படங்கள் அனைத்தையும் வசூல் ரீதியாக பின்னுக்கு தள்ளிய படம், இதுதான்!

***

குருவியாரே, தமிழ் பட கதாநாயகிகளில் அதிக கவர்ச்சி காட்டி நடிப்பவர் யார்? (இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி)

ஒருவர் அல்லது இருவர் அல்ல. கவர்ச்சியாக நடித்தால்தான் நீடிக்க முடியும் என்று ஏறக்குறைய எல்லா நாயகிகளும் இறங்கி வந்து கொண்டிருக்கிறார்கள்!

***

பல்லவி என்று ஒரு நடிகை இருந்தாரே...அவர் என்ன ஆனார்? (வி.சுப்ரமணியம், பி.கொமாரபாளையம்)

பல்லவி, வெளிநாட்டில் வசித்து வருகிறார்!

***

குருவியாரே, திருமணம் செய்து கொண்டு கணவருடன் மும்பையில் குடியேறி விட்ட லைலாவும், மாளவிகாவும் மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பார்களா? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

இரண்டு பேருக்குமே மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. லைலாவின் ஆசைக்கு அவருடைய கணவர் ‘பச்சைக்கொடி’ காட்டி விட்டார். மாளவிகாவின் கணவர் இன்னும் கொடி அசைக்கவில்லையாம்!

***

‘சீயான் விக்ரம் எந்த படத்திலாவது இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறாரா? (கே.ஜெயசீலன், சிவகாசி)

‘இருமுகன்’ படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடித்ததை மறந்து விட்டீர்களா?

***