இரக்க குணத்திற்கு மறுபெயர் ‘சாவித்திரி’


இரக்க குணத்திற்கு மறுபெயர் ‘சாவித்திரி’
x
தினத்தந்தி 4 Jan 2019 3:30 AM GMT (Updated: 3 Jan 2019 11:10 AM GMT)

அன்பு, இரக்கம், கொடை மூன்றும் பிறவிக்குணம். இவை பிறரைப் பார்த்து பின்பற்றும் செயல் அல்ல. யாராலும் இதை நம்முடைய மூளையில் திணிக்கவும் முடியாது. அந்த வகையில் நடிகையர் திலகம் சாவித்திரி அன்பு, இரக்கம், கொடை ஆகிய மூன்றின் கலவை.

நிறைய நடிகர், நடிகைகளின் முதல் படத்தின் கதாபாத்திரமும், கதையும் அல்லது வெற்றிகரமாக ஓடி, புகழ்பெற்ற திரைப்படத்தின் கதையும், கதாபாத்திரமும், அவர்களுடைய நிஜ வாழ்க்கையில் அப்படியே பொருந்திப் போவதை நான் எட்ட நின்று பார்த்திருக் கிறேன். அது சாவித்திரிக்கு பலவகையிலும் பொருந்திப் போனதுதான் வியப்பிலும் வியப்பு.

சாவித்திரி கதாநாயகியாக நடித்த முதல் படம் ‘தேவதாஸ்.’ அந்தப் படத்தில் தன்னை விட வயதில் மூத்தவருக்கு இரண்டாவது மனைவியாகப் போவார். நிஜ வாழ்க்கையிலும் தன்னைவிட 16 வயது மூத்தவரான ஜெமினிகணேசனை காதலித்து அவருக்கு இரண்டாம் தாரமாக ஆனார் சாவித்திரி. அதே படத்தில் பார்வதியைப் பிரிந்து, காதல் தோல்வியால் அளவுக்கு அதிகமாக மது அருந்தி இறந்து போவார், தேவதாஸ். சாவித்திரியும் தன்னுடைய நிஜ வாழ்க்கையில் ஜெமினிகணேசனைப் பிரிந்து, வாழ்க்கையிலும், தொழிலிலும் தோற்றதால் மது பழக்கத்திற்கு அடிமையாகி மரணித்தார்.

சாவித்திரி நடித்து நான் பார்த்த முதல் படம் ‘எங்கள் வீட்டு மகாலட்சுமி.’ அவர் நடிப்பில் என் மனதில் பதிந்த படங்கள், ‘பதிபக்தி’, ‘களத்தூர் கண்ணம்மா.’ மனதில் நீங்காமல் இடம்பெற்ற படம் ‘பாசமலர்.’

சாவித்திரியை நான் முதன் முதலில் நேரடியாகப் பார்த்தது, 1968-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ந் தேதி. நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகளான சாந்தி திருமணம், அன்றைக்கு மிகப்பிரபலமான ஆபட்ஸ்பரி மாளிகையில் நடந்தது. எனக்கு நெருங்கிய உறவினர் ஒருவர் அந்த திருமணத்திற்கு அழைத்தார். நானும் ‘நிறைய நடிகர்களைப் பார்க்கலாம்’ என்ற ஆவலில் அங்கு சென்றேன்.

அப்போது என் உறவினர் ஒரு யோசனை சொன்னார். “டேய்! நீ மண்டபத்திற்குள் போனால் எங்கேயாவது ஒரு ஓரத்தில் இடம் கிடைக்கும். எல்லா நடிகர்களையும் பார்க்க முடியாது. அதுவே மண்டபத்திற்கு வெளியே, கார்கள் நுழையும் இடத்தில் நின்றால் எல்லோரையும் பார்க்கலாம்.”

அவர் யோசனைப்படியே வெளியே நின்று எல்லா நடிகர்-நடிகைகளையும் பார்த்தேன். அதில் ஒருவர் தான் சாவித்திரி. பிளை மவுத் கார் போல மிகவும் நீளமான ஒரு காரை அவரே ஓட்டிக்கொண்டு வந்தார். மிகவும் நெருக்கத்தில் அவரைப் பார்த்ததும், என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இரண்டாவது முறை, பெருந்தலைவர் காமராஜரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற விருதுநகர் சீனிவாசனின் திருமணத்திலும், அடுத்ததாக ஏவி.எம். டூடியோவிலும் சாவித்திரியைப் பார்த்தேன். அதுபோன்ற நேரத்தில் நான் சாதாரண பள்ளி ஆசிரியர் என்ற தயக்கம், அவரிடம் என்னை பேசவிடாமல் செய்து விட்டது.

பின்னாளில் நான் நடிகனான பிறகு, அண்ணாநகரில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த சாவித்திரியைப் போய் பார்த்தேன். ‘அந்த 7 நாட்கள்’ படப்பிடிப்பு நடந்த வீட்டிற்குப் பின்புறம்தான் அவரது வீடு இருந்தது. அந்த வீட்டில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இருந்தார். அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டார்.

நான் அவரிடம் “சாவித்திரி அம்மாவின் விசிறி நான்; அவரைப் பார்ப்பதற்காக வந்தேன்” என்று கூறினேன்.

உடனே அவர் “கொஞ்சம் உட்காருங்கள். அம்மாவை நீங்கள் பார்ப்பதற்கு தயாா் செய்து கொண்டு உங்களை அழைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டார்.

அதன்பிறகு சாவித்திரியின் மகன் சதீஷ் வந்தார். அப்போது அவருக்கு 12 வயது இருக்கும். அவரும் அந்த அம்மா கூறியதுபோல், “கொஞ்சம் பொருத்திருங்கள்” என்று கூறினார். பின்னர் ஜெமினிகணேசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நான் சாவித்திரியைப் பார்க்க வந்திருப்பதைச் சொல்லி, என்னை அனுமதிக்கலாமா என்று கேட்டார்.

அதற்கு ஜெமினிகணேசன் “அந்த நடிகர் சாவித்திரியின் விசிறி. அவரை பார்க்க அனுமதியுங்கள்” என்று பச்சைக் கொடி காட்டியதும், நான் உள்ளே அனுமதிக்கப்பட்டேன்.

நான் சாவித்திரி இருக்கும் அறைக்குள் நுழைந்தேன். ‘நான் பார்த்துக் கொண்டிருப்பது சாவித்திரி தானா? நான் திரையிலும், புகைப்படங்களிலும் பார்த்த அந்த அழகான சாவித்திரி எங்கே? அந்த அழகான முகம், இப்படிக்கூட மாற முடியுமா?’ எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

“சாவித்திரிக்கு அதிகமான விளக்கு களைப் போட்டு அழகைக்கூட்ட வேண்டிய அவசியமில்லை. குறைவான விளக்குகளைப் போட்டாலே போதும், அவருடைய முகம் அழகாகத் தெரியும். அப்படிப்பட்ட கேமராவுக்கு ஏற்ற முகம் அவருடையது” என்று என்னிடம் கூறிய கேமராமேன் மஸ்தானின் நினைவு தான் எனக்கு அப்பொழுது வந்தது.

‘கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா? அவருக்கு இரக்கமில்லையா?. இவரது இந்த நிலைக்கு யார் காரணம்?. ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்ற கனியன் பூங்குன்றனின் கூற்றுப்படி, அவரது இந்த நிலைக்கு அவரே தான் காரணமா?’ இப்படி பல கேள்விகள் என்னுள் எழுந்தன. 5 நிமிடத்திற்கு மேல் அவரைப் பார்க்க முடியாமல் அங்கிருந்து வந்துவிட்டேன்.

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட சாவித்திரி, தமிழை முறைப்படி கற்றுக்கொண்டு, தன்னுடைய படங்களில் பேசிய தமிழ் வசனங்களின் உச்சரிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனிடம் “இந்தியாவின் அழகான பெண்மணியாக தாங்கள் கருதும் பத்து பேரின் பட்டியலைச் சொல்லுங்கள்” என்று ஆங்கில ஏடு ஒன்று கேட்டது. அதற்கு அவர், தென்னிந்தியாவில் சாவித்திரியை மட்டும் அந்த பத்து பேரில் மூன்றாவது நபராகக் குறிப்பிட்டு இருந்தார்.

உடல், பொருள், ஆவி இந்த மூன்றிலும் சாவித்திரி அளவு கடந்த அன்பை வைத்திருந்தார். இந்த அளவுகடந்த அன்பே அவருக்கு பல வகையிலும் துன்பத்தைக் கொடுத்தது. இறுதியில் அதுவே அவரை அளவு கடந்த சுயநலத்தில் கொண்டுபோய்விட்டு விட்டது.

இடது கை பழக்கம் கொண்டவர் சாவித்திரி. பொதுவாக வலது கை பழக்கம் உள்ளவர்களை விட, இடது கை பழக்கம் கொண்டவர்கள் கூடுதலாக சில திறமைகளைக் கொண்டிருப்பார்களாம். அதை மெய்ப்பிப்பதற்காக சாவித்திரி பல்வேறு முயற்சிகளை எடுத்தார்.

1950-களின் நடுவில் நடிகர் சங்கத்தில், நடிகைகளுக்கான ஓட்டப்பந்தயம் வைத்திருக்கிறார்கள். சாவித்திரி உள்பட அன்றைக்குப் பிரபல்யமான நடிகைகள் அனைவரும் அதில் கலந்து கொண்டனர். ‘சாவித்திரியால் அந்த அளவிற்கு ஓட முடியுமா?’ என்று சில நடிகர், நடிகைகள் பேசிக்கொண்டார்கள். ஆனால் அனைவரும் வியக்கும் வகையில் முதல் பரிசை தட்டிச் சென்றார், சாவித்திரி.

எந்த மாதிரியான காலகட்டத்திலும், பிறர் செய்த உதவிகளுக்கு நன்றி மறக்காத குணம் கொண்டவர். தனக்கு ஒரு காலத்தில் யாராவது சிறிய உதவி செய்திருந்தால் கூட, அவர்களே மலைத்து போகின்ற அளவிற்கு பெரிய பெரிய உதவிகளை செய்து அவர்களை அசத்திவிடுவார்.

அதே போல் சாவித்திரியின் கண்முன் யாராவது கஷ்டப்பட்டால், அதை அவரால் தாங்கிக்கொள்ள முடியாது. அவர்களுக்கு தன்னால் என்ன உதவிகளை செய்ய முடியும்? எந்த வகையில் தன்னால் அவருக்கு உதவ முடியும்? என்று தான் யோசிப்பார்.

ஒரு ஸ்டூடியோவில் வேலை பார்த்து வந்த வருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டிருந்தது. சாவித்திரி அதைக் கேள்விப்பட்டு சிறுவயதில் தன்னுடைய தாயார் கொடுத்த மோதிரத்தை கழற்றி அந்த ஊழியரின் மருத்துவச் செலவுக்குக் கொடுத்தார். அது சாவித்திரி திரைப்படத்தில் நடிக்க வந்த ஆரம்ப காலம். அதனால் அவரிடம் பணம் இல்லை. எனவே தான் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்தார்.

‘நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பதற்காக, சாவித்திரி இப்படியெல்லாம் உதவி செய்கிறார்’ என்று சிலா் பேசிக் கொண்டார்கள். இரக்க குணம் பற்றி அறியாதவர்கள் எப்போதும் இப்படித்தான் பேசுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு சாவித்திரியின் மனித நேயம் தெரிய வாய்ப்பில்லை.

திரைப்படத்துறையில் தனக்கு வாய்ப்பு கொடுத்த விஜயா புரடொக்‌ஷன்ஸ் அதிபர் நாகிரெட்டியின் நினைவாக, ‘விஜயா’ என்ற பெயரையும், ஜெமினியின் விருப்பக் கடவுளான ‘சாமுண்டீஸ்வரி’யையும் இணைத்து, தனது அருமை மகளுக்கு ‘விஜயா சாமுண்டீஸ்வரி’ என்று பெயர் வைத்தார்.

‘தானத்தில் சிறந்தது நிதானம்’, ‘தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும்’ என்பார்கள். அதை சாவித்திரி பின்பற்றவில்லை. அளவு கடந்த தர்மம் பண்ணினார்.

நடிகர் சந்திரபாபு, ஜெமினிகணேசனுக்கும் சாவித்திரிக்கும் நெருங்கிய நண்பராக இருந்தார். அவர் சொந்த படமெடுக்கும் பொழுது மிகவும் பணக் கஷ்டத்தில் இருந்தார். அந்த நேரம் சாவித்திரி பணம் கொடுத்து உதவி செய்தார்.

ஒரு திருமணத்திற்கு சென்றால் பொண்ணு, மாப்பிள்ளை இருவருக்குமே சமமாக பரிசுப் பொருட்களைக் கொடுப்பார். மிகவும் நெருங்கிய குடும்பமாக இருந்தால் பொண்ணு - மாப்பிள்ளை இருவருக்குமே தங்க மோதிரங்கள் பரிசளிப்பார். அதோடு நின்று விடாமல் மணமக்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்து பரிசுப் பொருட்களும் கொடுத்து அனுப்புவார்.

சாவித்திரி வெகுளி பெண்ணாக நடித்த ‘கைகொடுத்த தெய்வம்’ படத்தை இயக்கியவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். அந்தப் படத்தில் தன் தந்தையாக நடிக்க பொருத்தமானவர் நடிகர் எஸ்.வி.ரெங்காராவ் தான் என்று கோபாலகிருஷ்ணனிடம் சாவித்திரி கூறியிருக்கிறார்.

ஆனால் கோபாலகிருஷ்ணனோ, “ரெங்காராவ் மிகவும் பிஸியான நடிகர். அவரால் நமக்கு தேவையான தேதிகளை கொடுக்க முடியாது. சில சமயங்களில் மதியத்திற்கு மேல் படப்பிடிப்பிற்கு அவர் வருவது சந்தேகம்தான். எனவே நான் நடிகர் டி.எஸ்.பாலையாவை தான் போடப் போகிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு சாவித்திரி, “நான் எப்படியாவது ரெங்காராவிடம் உங்களுக்கு தேவையான தேதிகளை வாங்கித் தருகிறேன்” என்று உறுதியளித்திருக்கிறார்.

இருந்தாலும் கோபாலகிஷ்ணன் அதை நம்பாமல், நடிகர் டி.எஸ்.பாலையாவை ஒப்பந்தம் செய்து விட்டார். முதல் நாள் ஷூட்டிங்கில் பாலையாவும் சாவித்திரியும் நடிக்க வேண்டிய காட்சி திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிடையில் சாவித்திரி, நடிகர் ரெங்காராவிடம் தொலைபேசியில் பேசி படத்தில் நடிக்க சம்மதம் வாங்கிவிட்டார்.

இயக்குனர் ஒப்பந்தப்படி, முதல் நாள் படப்பிடிப்பிற்கு மேக்கப்போடு பாலையா வந்துவிட்டார். அதே நேரம் சென்னை விமான நிலையத்தில் ரெங்காராவும் வந்து இறங்கிவிட்டார். ரெங்காராவ் வந்துவிட்ட செய்தியை அறிந்த சாவித்திரி, நேராக கோபாலகிருஷ்ணனிடம் சென்று, விஷயத்தைச் சொல்ல, “அப்படியா ரெங்காராவ் வந்துவிட்டாரா?. ஆனால் பாலையா அண்ணன் மேக்கப்போடு ஷாட்டிற்கு தயாராக இருக்கிறார். அவரிடம் நான் போய் சொல்லமாட்டேன். அவர் சீனியர் ஆர்ட்டிஸ்ட், மிகவும் கோபக்காரர், கண்டிப்பானவர், என்னால் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் வேண்டுமானால் போய் பேசிப்பாருங்கள்” என்று நழுவிவிட்டார்.

சாவித்திரி நேராக பாலையா இருக்கும் மேக்கப் ரூமிற்கு சென்று, தன் இக்கட்டான சூழ்நிலையையும், நடந்ததையும் விளக்கியிருக்கிறாா். சாவித்திரியின் குணத்தையும், திறமையையும் மதித்திருந்த டி.எஸ்.பாலையா, “சரிம்மா, இந்த வேடத்தை ரெங்காராவே செய்யட்டும். அவர் இந்த வேடத்தை என்னை விட நன்றாகவே செய்வார்” என்று பெருந்தன்மையாக சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். படம் வெளிவந்து நன்றாக ஓடியது. இப்படி நண்பர்களுக்கு வேடங்கள் வாங்கிக்கொடுப்பது, கஷ்டப்படுகின்ற நண்பர்களுக்கு தக்க நேரத்தில் பண உதவி செய்வது போன்ற விஷயங்களில் முதலில் நிற்பார் சாவித்திரி.

1950-களின் நடுவில் கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்வு செய்யும் இடத்தில் இருந்தவர் சாவித்திரி. அவர் 1970-களில் அதுவரை சம்பாதித்த பணம் முழுவதையும் இழந்து துன்பத்தில் துவண்டார்.

‘பொல்லாத நேரம் வந்துவிட்டால், நம்முடைய அறைஞான் கயிறு கூட பாம்பாகும்’ என்பது பழமொழி. செல்வம் வரும் பொழுது சினிமா கொட்டகைக்குள் ரசிகர்கள் வருவது போல் ஒவ்வொன்றாக வரும். போகும் பொழுது காட்சி முடிந்து செல்வதைப் போல வேகமாகவும், மொத்தமாகவும் போய்விடும். அதே போல் தான் சாவித்திரியின் செல்வமும் சீக்கிரமாக போய்விட்டது.

ஒருநாள் ஜெமினிகணேசனோடு நான் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர், “ராஜேஷ்! சாவித்திரி சாதாரண நடிகை இல்லை; அவள் ஹாலிவுட்டில் புகழ்பெற்று விளங்கிய, ஒப்பற்ற நடிகை இன்கிரிட் பெர்க்மென்னைவிட பெரிய நடிகை” என்று வாயாரப் புகழ்ந்து விட்டு, “இருந்தாலும் அவள் மடச்சி; சொல் பேச்சு கேட்கமாட்டாள்” என்று முடித்தார்.

சாவித்திரி அடைந்த துன்பங்களை அடுத்த வாரம் பார்ப்போம்.

தங்கத்தின் மீது மோகம்

சாவித்திரி, தங்கத்தின் மீது அதிக மோகம் கொண்டிருந்தார். கொலுசு, இடுப்பில் சொருகும் சாவிக்கொத்து, தாம்பாளத் தட்டுகள், அவ்வளவு ஏன்.. மெழுகுவர்த்திகளை வைப்பதற்கு உபயோகிக்கும் ஸ்டாண்டு கூட தங்கத்தில் செய்திருந்தார். வீட்டில் 300 தங்க வளையல்கள், வைர மோதிரங்கள் இருந்தது.

ஜெமினியின் மீதான காதல்

ஜெமினிக்காக கொட்டும் மழையில், அதுவும் சென்னை முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த இரவில், மாடியில் இருந்து தண்ணீர் குழாய் வழியாக இறங்கி, நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஜெமினியின் வீட்டிற்கு நடந்தே வந்தவர் சாவித்திரி.

ஜெமினியுடன் சாவித்திரி முதன் முதலில் இணைந்து நடித்த படத்தை இயக்கியவர் பி.புல்லையா. அதனால் அவர் மீது சாவித்திரிக்கு தனிப்பட்ட முறையில் அளவு கடந்த மரியாதை உண்டு.

கடைகளுக்கு போனால், ஜெமினிக்கு என்ன பொருள் விருப்பமோ, எந்தப் பொருள் தேவையோ, அவைகளை வாங்கிய பின்பே, தனக்கு தேவையானதை வாங்குவார். ஜெமினி- சாவித்திரி இருவரும் காதலிக்க ஆரம்பித்த நேரத்தில், அவர்கள் முதலில் சென்ற இடம் கொடைக்கானல். அதன் நினைவாக கொடைக்கானலில் வீடு ஒன்றை வாங்கி, அந்த வீட்டிற்கு ஜெமினியின் பெயரை வைத்தார்.

பெண்களின் மனம் எப்பொழுதும், அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு, நம்பிக்கை என்ற நான்கையும் நோக்கியே பயணிக்கும். இந்த நான்கு எல்லைக்குள் அடங்கியது தான் அவா்களுடைய உலகம். சிறு வயதிலேயே தந்தையை இழந்த சாவித்திரி, இந்த நான்கும் ஜெமினியிடம் கிடைக்கும் என்று நம்பினார். ஆனால் அந்த கற்பனை உலகம் ஜெமினி - சாவித்திரிக்கு, சில வருடங்களே வாழ இடம் கொடுத்தது.

Next Story