சோனியா, ராகுலை அவமதிக்கும் காட்சிகள் மன்மோகன் சிங் படத்தை எதிர்த்து வழக்கு


சோனியா, ராகுலை அவமதிக்கும் காட்சிகள் மன்மோகன் சிங் படத்தை எதிர்த்து வழக்கு
x
தினத்தந்தி 3 Jan 2019 10:23 PM GMT (Updated: 3 Jan 2019 10:23 PM GMT)

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கை ‘தி ஆக்சிடன்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற பெயரில் இந்தியில் சினிமா படமாக தயாராகி உள்ளது.

இதில் மன்மோகன் சிங் கதாபாத்திரத்தில் அனுபம் கெர், சோனியா காந்தியாக சூசன் பெர்னெட், ராகுல்காந்தியாக அர்ஜுன் மாத்தூர், பிரியங்கா காந்தியாக அஹானா ஆகியோர் நடித்துள்ளனர். விஜய் ரத்னாகர் இயக்கி உள்ளார்.

வருகிற 11-ந் தேதி படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரசின் உள்கட்சி அரசியலுக்கு மன்மோகன் சிங்கை பலிகடாவாக ஆக்கியதுபோல் அதில் சித்தரித்து இருந்தனர். இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பா.ஜனதா, டிரெய்லருக்கு வரவேற்பு தெரிவித்து காங்கிரசுக்கு எதிரான பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருகிறது.

மன்மோகன் சிங் படத்தின் டிரெய்லரை யுடியூப்பில் இருந்து காணவில்லை என்று அந்த படத்தில் நடித்த அனுபம்கெர் புகார் கூறியுள்ளார். “யுடியூப்பில் மன்மோகன் சிங் பட டிரெய்லர் டிரென்டிங்கில் இருந்தது. ஆனால் இப்போது தேடிப்பார்த்தால் 50-வது இடத்தில் கூட வரவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார். டிரென்டிங்கில் இருந்த டிரெய்லர் எப்படி காணாமல் போனது? என்றும் கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோர் நற்பெயரை கெடுக்கும் வகையில் இந்த படம் இருப்பதாக அனுபம்கெர் மற்றும் படத்தின் இயக்குனர் ஆகியோர் மீது பீகார் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

Next Story