13 பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவு மன்மோகன் சிங் படக்குழுவினர் அதிர்ச்சி


13 பேர் மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவு மன்மோகன் சிங் படக்குழுவினர் அதிர்ச்சி
x
தினத்தந்தி 9 Jan 2019 10:00 PM GMT (Updated: 9 Jan 2019 5:25 PM GMT)

மன்மோகன் சிங் வேடத்தில் நடித்த அனுபம் கேர் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வாழ்க்கையை மையமாக வைத்து ‘தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற பெயரில் சினிமா படம் தயாராகி உள்ளது. இதில் மன்மோகன் சிங் வேடத்தில் அனுபம் கேர் நடித்துள்ளார். விஜய் ரத்னாகர் இயக்கி உள்ளார். காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றபோது சோனியாகாந்தி பிரதமர் பதவி ஏற்க எதிர்ப்பு கிளம்பியது. 

இதனால் அவருக்கு பதிலாக மன்மோகன் சிங்கை பிரதமராக தேர்வு செய்தனர். இந்த சம்பவங்களை மையமாக கொண்டு மன்மோகன் சிங்கிடம் ஆலோசகராக பணியாற்றிய சஞ்சயா பாரு எழுதிய புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளனர். இந்த படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டனர். 

அதில் உள்கட்சி அரசியலுக்கு மன்மோகன்சிங்கை பலிகடா ஆக்கியதுபோல் காட்சி இருந்தது. இதனால் படத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் பா.ஜனதா கட்சியினர் படத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். காங்கிரசுக்கு எதிரான பிரசாரத்துக்கும் படத்தின் டிரெய்லரை பயன்படுத்தினர். 

இந்த நிலையில் மன்மோகன் சிங் படத்துக்கு தடைவிதிக்கக்கோரி சுதிர் ஓஜே என்ற வக்கீல் பீகார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் மன்மோகன் சிங் வேடத்தில் நடித்த அனுபம் கேர் உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட்டார். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

Next Story