விஷால் திருமணம் செய்யும் மணப்பெண் படம் வெளியானது


விஷால் திருமணம் செய்யும் மணப்பெண் படம் வெளியானது
x
தினத்தந்தி 11 Jan 2019 10:45 PM GMT (Updated: 11 Jan 2019 5:25 PM GMT)

நடிகர் விஷால் திருமணம் செய்யும் மணப்பெண் அனிஷாவின் புகைப்படம் தெலுங்கு இணையதளங்களில் வெளியாகி உள்ளது.

நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிப்பவர் விஷால். தமிழில் முன்னணி நடிகராக இருக்கிறார். அரசியல் கருத்துகளை வெளியிட்டும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். அவருக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.

இந்தநிலையில் விஷாலுக்கும் ஆந்திராவை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது. அனிஷா ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டி-பத்மஜா தம்பதியின் மகள் ஆவார். அவரது புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இவர்கள் திருமணம் விரைவில் நடக்க உள்ளது. அனிஷாவின் புகைப்படம் தெலுங்கு இணையதளங்களில் வெளியாகி உள்ளது.

திருமணம் குறித்து விஷால் கூறியதாவது:-

“எனக்கும் அனிஷாவுக்கும் இந்த வருடம் திருமணம் நடைபெறும். நாங்கள் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து காதல் வயப்பட்டோம்.

எங்கள் காதல் விவகாரம் நெருக்கமான சிலருக்கு தெரிந்து விட்டது. இருவீட்டு பெற்றோர்களும் பேசி திருமண தேதியை முடிவு செய்வார்கள்.

நடிகர் சங்க கட்டிடத்தை கட்டியபிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று ஏற்கனவே கூறி இருந்தேன். அந்த முடிவில் மாற்றம் இல்லை. எனது திருமணம் சென்னையில் நடைபெறும்.”

இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.

மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில், “எனது திருமணம் பற்றி தவறான தகவல்கள் பரவுகின்றன. இது எனது சொந்த வாழ்க்கை. எனது திருமணம் பற்றி நானே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

Next Story