சங்க கட்டிட பணிகள் தீவிரம் நடிகர் சங்கத்துக்கு மே மாதம் தேர்தல்?


சங்க கட்டிட பணிகள் தீவிரம் நடிகர் சங்கத்துக்கு மே மாதம் தேர்தல்?
x
தினத்தந்தி 11 Jan 2019 11:00 PM GMT (Updated: 11 Jan 2019 5:32 PM GMT)

மே மாதம் நடிகர் சங்க தேர்தலை நடத்த முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் சங்கத்துக்கு 2015-ல் தேர்தல் நடத்தப்பட்டு விஷால் அணியினர் பொறுப்புக்கு வந்தனர். இவர்களின் 3 வருட பதவிக்காலம் கடந்த அக்டோபர் மாதமே முடிந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடியாததால் பொதுக்குழுவை கூட்டி நடிகர் சங்க தேர்தலை தள்ளி வைத்தனர்.

தற்போது நடிகர் சங்க கட்டிட பணிகள் தீவிரமாக நடக்கின்றன. தரைதளமும் 3 மாடிகளும் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு மாடி மட்டும் கட்ட வேண்டி உள்ளது. ஓரிரு மாதங்களில் கட்டுமான பணிகளை முடித்து உள் அலங்கார வேலைகளை தொடங்க உள்ளனர்.

கட்டிட செலவு ரூ.30 கோடியை தாண்டி இருப்பதாக கூறப்படுகிறது. அலுவலக அறைகள், கலை அரங்கம், மாநாட்டு கூடம், திருமண மண்டபம், உடற் பயிற்சி கூடம், நடன பயிற்சி அரங்கம் ஆகியவை கட்டப்பட்டு உள்ளன. மே அல்லது ஜூன் மாதம் திறப்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் வருகிற மே மாதம் நடிகர் சங்க தேர்தலை நடத்த முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தேர்தலில் விஷால் அணியினர் மீண்டும் போட்டியிட திட்டமிட்டு உள்ளனர்.

அவருக்கு எதிராக களம் இறங்க அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த ராதாரவி, எஸ்.வி.சேகர், ஜே.கே.ரித்திஷ் உள்ளிட்டோர் புதிய அணியை உருவாக்கி வருகிறார்கள்.

Next Story