சினிமா செய்திகள்

பெண்களுக்கு எது தேவை?கரீனா கபூர் மனந்திறந்து சொல்லும் புதிய தகவல்கள் + "||" + What do women need?

பெண்களுக்கு எது தேவை?கரீனா கபூர் மனந்திறந்து சொல்லும் புதிய தகவல்கள்

பெண்களுக்கு எது தேவை?கரீனா கபூர் மனந்திறந்து சொல்லும் புதிய தகவல்கள்
எல்லோரும் ரேடியோ, டி.வி.யில் புகழ்பெற்ற பிறகு சினிமாவுக்குச் செல்வார்கள். ஆனால் பிரபல இந்தி நடிகை கரீனா கபூர், வெள்ளித்திரையில் பிரகாசிக்கும் வேளையிலேயே ரேடியோவுக்கு வந்திருக்கிறார்.
ல்லோரும் ரேடியோ, டி.வி.யில் புகழ்பெற்ற பிறகு சினிமாவுக்குச் செல்வார்கள். ஆனால் பிரபல இந்தி நடிகை கரீனா கபூர், வெள்ளித்திரையில் பிரகாசிக்கும் வேளையிலேயே ரேடியோவுக்கு வந்திருக்கிறார். ‘வாட் விமன் வான்ட்’ (பெண்களுக்கு எது தேவை) என்ற நிகழ்ச்சியின் மூலம் எப்.எம். ரேடியோவில் கரீனாவின் குரல் தொடர்ந்து ஒலிக்கப் போகிறது.

அதுபற்றி அவரது பேட்டி:

வானொலியில் நிகழ்ச்சி நடத்துவதற்கு நீங்கள் ஒத்துக்கொண்ட காரணம் என்ன?

இன்று எந்த ஊடகம் என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. அது திரைப்படமாக இருக்கலாம், டி.வி., மேடை, இணையதளம் அல்லது ரேடியோவாக இருக்கலாம். கொடுக்கும் விஷயம் தரமாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம். இந்த ரேடியோ நிகழ்ச்சிக்காக என்னை அணுகியபோது அதன் மையக்கருத்து எனக்குப் பிடித்தது. உண்மையில் பெண்கள் எதை விரும்புகிறார்கள் என்பது குறித்த எந்த ரேடியோ நிகழ்ச்சியும் இதுவரை ஒலிபரப்பப்பட்டதில்லை. அதை உயர்த்திப் பிடித்து ஒரு நிகழ்ச்சி தயாரிப்பது, இன்றைய சூழலுக்கு அவசியமானது. உள்ளுணர்வின் விருப்பப்படி நான் இந்த நிகழ்ச்சிக்கு ஒத்துக்கொண்டேன்.

முற்போக்கு சிந்தனைகொண்ட உங்களால் இந்த நிகழ்ச்சியில் எந்த அளவுக்கு வெற்றிபெற முடியும் என்று கருதுகிறீர்கள்?

ரேடியோவில் நாங்கள் விவாதிக்கும் பல விஷயங்களில் எனக்கு தெளிவான நிலைப்பாடு இருக்கிறது. எங்கம்மா பபிதாவாகட்டும், சகோதரி கரிஷ்மா கபூராகட்டும், எங்கள் குடும்பத்தில் எல்லாப் பெண்களும் சுதந்திரமானவர்கள். நாங்கள் விரும்பியதைத்தான் நாங்கள் செய்திருக்கிறோம். எனவே இந்த நிகழ்ச்சியை நடத்து வதற்கு நான்தான் பொருத்தமான தேர்வு (சிரிக்கிறார்). பெண்கள் விரும்பும் விஷயங்கள் குறித்து இடை யிடையே நான் எனது கருத்துகளை வெளிப்படுத்து கிறேன். ஆக, என்னால் இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெற முடியும்.

ரேடியோ மூலம் சுவாரசியமான நிகழ்ச்சியை வழங்குவது அவ்வளவு எளிதான வேலையா?

ரேடியோவில் நாங்கள் விவாதிக்கும் விஷயங்கள் எல்லாமே சீரியசானவை அல்ல. வேடிக்கையான விஷயங் களையும் நாங்கள் பேசுகிறோம். இதில் சுவாரசியமான விவாதங்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, எட்டு முதல் ஒன்பது நிமிடத் தொகுப்பாக யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. உதாரணத்துக்கு நான் இன்னொரு நடிகையுடன் நிகழ்ச்சியில் பேசுகிறேன் என்றால், ரசிகர்கள் எங்கள் புகைப்படங்களைத்தான் பார்த்திருப்பார்கள். நாங்கள் இருவரும் ஒன்றாக எப்படி இருப்போம், எப்படிப் பேசுவோம் என்று அறிந்திருக்க மாட்டார்கள். அதை அவர்கள் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்புக் கிட்டுகிறது. ரேடியோ மூலம் சுவாரசியமான நிகழ்ச்சிகளை வழங்குவது கொஞ்சம் கடினம்தான். காரணம் சினிமாவில் நமது நடிப்பு, முகபாவம் மூலம் ரசிகர்களைக் கவரலாம். ஆனால் ரேடியோ வாயிலாக நம் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது. குரலைத்தான் வெளிப்படுத்த முடியும்.

திருமணம், கர்ப்பம், தாய்மை எல்லாவற்றிலும் நீங்கள் வழக்கத்தை மீறியவராகவே கருதப்படுகிறீர்கள் அல்லவா?

எனக்கு என்ன தேவை என்பதில் எப்போதுமே நான் தெளிவாக இருந்திருக்கிறேன். திருமணம் செய்துகொள்ளாதே, அதனால் திரைப்பட வாய்ப்புகள் நின்று போகும் என்று எனக்குப் பலர் அறிவுரை கூறியிருக்கிறார்கள். கர்ப்ப காலத்தில் நடிக்கக் கூடாது என்றும் அவர்கள் சொன்னார்கள். ஆனால் பெண்களால் எல்லா நேரத்திலும் எல்லாம் சாத்தியம்தான். பெண்களால் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்ய முடியும். நாம் ஒரு தாயாக இருந்துகொண்டே வேலையும் பார்க்க முடியும். உலகில் பலரும் அப்படி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். நமக்கு வேண்டுமானால் அது தெரியாமல் இருக்கலாம். ஆனால் நான் ஒரு நடிகை என்பதால், கர்ப்ப காலத்தில் நான் என்ன செய்கிறேன் என்பதை அதிகம் பேர் கவனித்திருக்கிறார்கள். தற்போதைய எனது ரேடியோ நிகழ்ச்சியின் மூலம், பெண்கள் பலரும் தங்கள் உண்மைக் கதைகளைப் பகிர்ந்துகொள்ள முடியும். பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவார்கள், அதுபற்றி பிரபலங்களும் தங்கள் கருத்துகளைக் கூறுவார்கள். பிரபலங்களின் கருத்துகளைத்தானே நாம் எதிர்பார்க்கிறோம்.

ஒரே நேரத்தில் நீங்கள் பல வேலைகளில் ஈடுபட்டு அற்புதமாக அவைகளை முடித்துவிடுகிறீர்களே அது எப்படி?

உண்மையைச் சொல்லப் போனால் எனக்கு எதுவும் செய்யப் பிடிக்காது. வீட்டில் நான் என் மகன் தைமூருடன் சும்மா இருப்பேன். ஆனால் அதேநேரம், நான் எப்போதும் அப்படி இருக்க முடியாது என்று எனக்குத் தெரியும். அதனால், வேலைக்கும், சும்மா இருப்பதற்கும் இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்திக்கொள்ள நான் முயல்கிறேன். எனது சொந்த வாழ்க்கைக்கும் தொழிலுக்கும் அந்தச் சமநிலையை ஏற்படுத்திக்கொள்ள என்னால் முடிந்திருக்கிறது. உதாரணத்துக்கு, நான் தொடர்ந்து நான்கைந்து நாட்கள் வேலை செய்தால், அடுத்த மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துக்கொள்வேன். நான் எனது குடும்பத்தினர், நண்பர்களுடன் கொஞ்சம் பொழுதைக் கழிக்க விரும்புவேன். காரணம், அவர்களைச் சுற்றித்தான் என் வாழ்க்கை சுழல்கிறது. நான் ஒரு மனிதப்பிறவி என்பதை அவ்வப்போது நானே உணர வேண்டும். என்னை நான் ஒரு ரோபோ போல கருதிக்கொள்ள முடியாது. ஆனால் இந்தத் திரையுலகம் எங்களை அதை நோக்கித்தான் தள்ளும். இன்று மனிதர்கள் அப்படித்தான் தங்களை வெளிப்படுத்திக் கொண்டே இருக் கிறார்கள். வேலை இல்லையா, உடனே இன்ஸ்டா கிராம், பேஸ்புக், டுவிட்டர் என்று வந்துவிடுகிறார்கள்.

ஒரு பெண் என்பதாலேயே உங்களுக்கு மறுக்கப்பட்ட விஷயம் எதுவும் உண்டா?

இல்லை. அப்படி எதுவும் இல்லை. ஆனால், யோசித்துப் பார்த்தால் ஒரு விஷயம் சொல்லலாம். திருமணமான பின் ஒரு பெண்ணால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாது என்று சிலர் நினைக்கிறார்கள். எனது சகோதரி கரிஷ்மா, திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. ஆனால் இன்று அந்த நிலை மாறியிருக்கிறது. இன்றைய இயக்குனர்கள் மிகவும் திறந்த மனம் கொண்டவர்கள். முன்பிருந்த நிலையுடன் ஒப்பிடும்போது இன்று சூழல் வெகுவாக மாறியிருக்கிறது. நடிகைகளை சுற்றியுள்ள விஷயங்கள் எல்லாம் மாறிக்கொண்டிருக்கின்றன. ஒரு நடிகர், நடிகைக்கு நல்ல காலகட்டம் இது.