வயோதிகத்தால் என்னை மறந்துபோன பானுமதி


வயோதிகத்தால் என்னை மறந்துபோன பானுமதி
x
தினத்தந்தி 25 Jan 2019 12:30 AM GMT (Updated: 24 Jan 2019 11:47 AM GMT)

1980-களின் ஆரம்பத்தில் ஒரு விழாவில் தான் பானு மதியை முதன் முதலாக நான் சந்தித்தேன். என்னை அவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதும், சிரித்துக் கொண்டே “நல்லா இருப்பா” என்று வாழ்த்தி விட்டு சென்று விட்டார்.

பிறகு 1983-ம் ஆண்டு அவரது வீட்டிற்குச் சென்று, என் திருமண அழைப்பிதழைக் கொடுத்து ஆசி வாங்கினேன். திருமணம் பற்றி எல்லா விவரங்களையும் என்னிடம் கேட்டவர், “என் மகன் பரணியை விட நீ சின்னப் பையன் தானே” என்றார்.

“ஆமாம்மா! நான்கைந்து வயது இளையவனாகத் தான் இருப்பேன்” என்றேன்.

“என் மகன் பரணியைப் பற்றி உனக்கு எப்படித் தெரியும்?”

“நான் திருவல்லிக்கேணியில் ஆசிரியராகப் பணியாற்றினேன். அந்த சமயத்தில் நான் ஐயாப்பிள்ளை என்ற தெருவில் ஒரு அறையில் குடியிருந்தேன். அதே தெருவில் தான், உங்கள் மகன் பரணி கிளினிக் வைத்திருந்தார். அங்குள்ள நண்பர்கள், பரணிக்கும் எனக்கும் நண்பர்கள்” என்றேன்.

‘தினத்தந்தி’யின் பொன்விழா ஆண்டு மிகச் சிறப்பாக நடந்தது. அந்த விழாவிற்கு முன்னதாகவே சென்று முன் வரிசையில் அமர்ந்திருந்தேன். திரையில் நான் பார்த்து பிரமித்த பல நட்சத்திரங்கள், மேடையில் வரிசையாக அமர்ந்திருந்தனர். பானுமதி விழா ஆரம்பிப்பதற்கு சற்று முன்பு தான் வந்தார். வந்தவர் நடிகை சரோஜா தேவியின் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்தார். இருவரும் பேசிக்கொண்டார்கள்.

அந்தக் காட்சியைப் பார்த்த எனக்கு, ‘நாடோடி மன்னன்’ படப்பிடிப்பு சமயத்தில் நடைபெற்ற பல சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. எம்.ஜி.ஆரின் சொந்த தயாரிப்பு தான் ‘நாடோடி மன்னன்’ என்பது அனைவரும் அறிந்ததே. அந்தப் படத்தின் இயக்குனரும் எம்.ஜி.ஆர். தான். அந்தப் படப்பிடிப்பின் போது பானுமதிக்கும், எம்.ஜி.ஆருக்கும் சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டதாகவும், அதனால் தான் அந்தப் படத்தின் பாதியில் சரோஜாதேவியை எம்.ஜி.ஆர். இரண்டாவது கதாநாயகியாக அறிமுகம் செய்ததாகவும் கூறுவார்கள். அந்த இரு கதாநாயகிகளும் மேடையில் அருகருகே அமர்ந்து அன்போடு பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் எம்.ஜி.ஆர். இல்லை என்று நினைத்துப் பார்த்தேன்.

பானுமதிக்கு கைரேகை ஜோதிடம் பார்க்கத் தெரியும். ‘தாய்க்குப் பின் தாரம்’ படப்பிடிப்பு சமயத்தில் எம்.ஜி.ஆரின் கையைப் பார்த்த பானுமதி, “ஒரு காலத்தில் நீங்கள், மன்னன் போல நாட்டை ஆளுவீர்கள்” என்று சொல்ல, வியந்து போன எம்.ஜி.ஆர். “நாம் முதலில் சினிமாவை ஆளுவோம். பிறகு நாட்டை பார்க்கலாம்” என்று சொல்லியிருக்கிறார்.

‘நாடோடி மன்னன்’ படப்பிடிப்பு நேரத்தில், பல முரண்பாடுகளை சந்தித்தாலும், “நாட்டை ஆளுவீர்கள்” என்று பானுமதி சொன்னதை மட்டும் எம்.ஜி.ஆர். மறக்கவில்லை. அதனால் தான் அவர் முதல்-அமைச்சரான பிறகு, 1985-ம் ஆண்டு பானுமதியை தமிழக அரசின் இசைக் கல்லூரிக்கு முதல்வராக்கி அழகு பார்த்தார். ஆனால் அங்கும் கூட தனது கண்டிப்பான குணத்தை பானுமதி காட்டினார். “மாணவர்கள் வேட்டி-சட்டை அல்லது ஜிப்பா, மாணவிகள் சேலை-ரவிக்கை, பாவாடை- தாவணி அணிந்து தான் கல்லூரிக்கு வர வேண்டும்” என்று உத்தரவிட்டார்.

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் ‘வரலாறு’ படம் உருவாகிக் கொண்டிருந்த சமயம். படப்பிடிப்பு ராமோஜி ராவ் ஸ்டூடியோவில் நடந்து கொண்டிருந்தது. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அந்தப் படத்தை இயக்கினார். அதில் நான் போலீஸ் உயர் அதிகாரியாக நடித்தேன். படப்பிடிப்புக்காக இரண்டு நாட்களில் ஐதராபாத் செல்ல வேண்டியதிருந்தது. அந்த நேரத்தில் திடீரென்று பானுமதியின் நினைவு வந்தது. அவரைப் பார்த்து விட்டு ஐதராபாத் செல்லலாம் என்று முடிவு செய்தேன்.

அதன்படி பானுமதி வீட்டிற்கு சென்றேன். வீட்டில் இரண்டு, மூன்று பணிப்பெண்கள் இருந்தார்கள். என்னை அடையாளம் கண்டுகொண்டு வரவேற்றனர். அவர்களிடம், “பானுமதி அம்மாவை மரியாதை நிமித்தமாகப் பார்க்க வேண்டும்” என்று கூறினேன்.

நான் கூறியதை அந்தப் பெண்களில் ஒருவர் உள்ளே சென்று பானுமதியிடம் சொன்னார். ஆனால் அவருக்கு என்னுடைய பெயரும், உருவமும் திடீரென்று நினைவுக்கு வரவில்லை. என்னை யார் என்று கேட்டதோடு, அடுத்த வாரம் வந்து பார்க்க சொல்லி அனுப்பினார்.

பணிப் பெண் அதை என்னிடம் வந்து சொன்னதும், “நான் நாளைக்கு ஷூட்டிங்கிற்காக ஐதராபாத் செல்லவேண்டும். திரும்பி வருவதற்கு எப்படியும் பத்து நாட் களுக்கு மேல் ஆகும்” என்றேன்.

அதை அந்தப் பெண், பானுமதியிடம் சொன்னதும், என்னை உள்ளே வரும்படி கூறினார். நான் உள்ளே சென்றபோது, பானுமதி, தனி இருக்கையில் அமர்ந்து, காலை நீட்டி ஒரு பெரிய ஸ்டூலில் வைத்திருந்தார். என்னைப் பார்த்ததும் வழக்கமான சிரிப்பை உதிர்த்தார்.

“என்னப்பா.. எப்படி இருக்கிறாய்?” என்றார்.

“நான் நன்றாக இருக்கிறேன் அம்மா. நீங்கள் எப்படி இருக் கிறீர்கள்?” என்றேன்.

“வயதிற்கு தகுந்தபடி இருக்கிறேன்” என்று அவரிடம் இருந்து பதில் வந்தது.

நான் பானுமதியை பார்க்கச் சென்றபோது, அவருக்கு 80 வயது இருக்கும். அதனால் அவரிடம் பல விஷயங் களைப் பற்றிப் பேசினாலும், அவரை அதிகம் பேசவிடாமல் பார்த்துக் கொண்டேன். சிவாஜியுடன் ‘மக்களைப் பெற்ற மகராசி’ படத்தில் நடித்ததைப் பற்றியெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அவரது முகம் 80 வயதில் இருந்து 33 வயதுக்கு மாறியது போல் பிரகாசிக்கத் தொடங்கியது. பழமை ஒரு மனிதனை மீட்டெடுக்கிறது என்பதை அப்போது நான் உணர்ந்தேன்.

வெகு நேரம் பேசிவிட்டு, அவரிடம் ஒரு ஆட்டோகிராப் கேட்டேன். அதற்கு அவர், “இன்று யுகாதி பண்டிகை என்று தெரிந்து தான், என்னைப் பார்க்க வந்தியாப்பா” என்றார்.

ஆம்.. அன்று யுகாதி திருநாள். என்னுடைய ஆழ்மனம் பானுமதியைப் பற்றி திடீரென்று நினைக்க என்ன காரணம் என்பதை அப்போது நான் அறிந்து கொண்டேன்.

“இல்லையம்மா.. எனக்குத் தெரியாது. நான் எப்பொழுதும் வருவது போலத் தான் வந்தேன்” என்று கூறினேன்.

பிறகு அவருடைய பெயரை ஆங்கிலத்தில் எழுதி கையெழுத்திட்டார். அப்போது ‘பெஸ்ட் விஷஸஸ்’ என்று போடும் போது, “விஷ்ஸஸ்-க்கு என்ன ஸ்பெல்லிங்” என்றார்.

எனக்கு வியப்பும், அதிர்ச்சியுமாக இருந்தது. பானுமதிக்கு 5 மொழிகள் தெரியும். அதுவும் ஆங்கிலத்தில் ஒரு பாடலே பாடியிருக்கிறார். இருந்தும் வயது, அதனுடைய வேலையை ஒழுங்காக செய்கிறது. மறதியைக் கெடுக்கத் தொடங்கியிருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன்.

ஆட்டோகிராபில் கையெழுத்து வாங்கியதும், “நான் போய் வருகிறேன்” என்று கூறி விடை பெற்றேன். அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினேன். அப்போது “முன்பெல்லாம் ராஜேஷ் அடிக்கடி என்னை வந்து பார்த்து விட்டுப் போவான். இப்பொழுது அவன் வருவதே இல்லை” என்றார்.

எனக்கு தூக்கி வாரி போட்டது. 30 நிமிடங்களுக்கு மேல் அவருடன் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருந்த மகிழ்ச்சி போய், மனம் முழுவதும் வருத்தம் படர்ந்து விட்டது. இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தேன். முடிவாக உண்மையைச் சொல்லிவிடுவோம் என்று முடிவு செய்து, “நான் தான் அம்மா ராஜேஷ்” என்று அவரிடம் கூறினேன்.

நான் சொன்னதைக் கேட்டவுடன் அவருடைய முகம் சோகத்தில் ஆழ்ந்து, ஒரு சிலை போல் இருந்தார். அவரிடம் எந்த அசைவும் இல்லை. வயோதிகம் தன்னை எப்படி ஒரு நிலைக்குத் தள்ளியிருக்கிறது என்பதை அவர் உணர்ந்ததன் வலி, அவரை அப்படியே நிலைகுத்தி இருக்கச் செய்து விட்டது. அதிகபட்சமாக 10 நொடி களுக்கு மேல் அவரைப் பார்க்க முடியாமல் அங்கிருந்து புறப்பட்டு வந்து விட்டேன்.

மறுநாள் ‘வரலாறு’ படப்பிடிப்புக்கு புறப்பட்டுச் சென்றேன். படப் பிடிப்பு முடிந்து சென்னை வந்தேன். நான் பானுமதியை பார்த்து விட்டு வந்த 8 மாதங்களில் அவர் இறந்து விட்டார். அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு, மாலையுடன் இறுதி மரியாதை செலுத்த அவரது வீட்டிற்குச் சென்றேன். வாசலில் பானுமதியின் மகன் டாக்டர் பரணி நின்று ெகாண்டிருந்தார். என்னைப் பார்த்ததும், “யுகாதி அன்று, அம்மாவை வந்து பார்த்து விட்டு சென்றீர்களாமே” என்று கேட்டார்.

“ஆமாம்” என்று கூறிவிட்டு, பானுமதியின் உடலுக்கு மரியாதை செலுத்தினேன்.

பானுமதி இறந்தது, 24-12-2005. எந்த எம்.ஜி.ஆரோடு பல வெள்ளி விழா படங்களில் ஜோடியாக நடித்தாரோ, எந்த எம்.ஜி.ஆரோடு முரண்பட்டு, பின்னர் சமாதானம் அடைந்தாரோ, அதே எம்.ஜி.ஆர். மறைந்த டிசம்பர் 24-ந் தேதியே பானுமதியின் ஆன்மாவும் அமைதியாக அடங்கிவிட்டது.

-தொடரும்.

பிரதமரை சந்திக்க தயங்கினார்

இந்தியாவின் பிரதமராக நரசிம்மராவ் இருந்த சமயம் அது. பானுமதிக்கு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட நியாயமான ஒரு பிரச்சினை இருந்தது. அது தீர்வு காணப்படாமல் நீண்டு கொண்டே சென்றது. அனுபவம் உள்ள சிலர், “பிரதமரைச் சந்தித்து பிரச்சினையைச் சொன்னால் எளிதாக முடிந்து விடும்” என்று பானுமதியிடம் கூறினர்.

ஆனால் ஒரு நாட்டின் பிரதமரை எப்படி பார்ப்பது? யார் மூலம் பார்ப்பது? என்று பானுமதிக்கு தயக்கம். இதுபற்றி தனக்கு அறிவுரை சொன்னவர் களிடமே அவர் கேட்டார்.

அவர்களோ, “என்னம்மா இப்படி கேட்கிறீர்கள்? அவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். கண்டிப்பாக உங்களுடைய படங்களை பார்த்திருப்பார். உங்களைப் பற்றி அறிந்திருப்பார். அதுவுமில்லாமல் உங்களுடைய பிரச்சினை மிகவும் நியாயமானது. இதைச் செய்வதில் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. உங்களுக்காக அவர் கண்டிப்பாக இதைச் செய்வார். அதனால் டெல்லிக்கு சென்று பிரதமரைச் சந்தியுங்கள்” என்று கூறியிருக்கிறார்கள்.

இருந்தாலும் ‘ஒரு நடிகையாக தன்னைப் பற்றி அறிந்திருந்தாலும், நாட்டின் பிரதமராக இருப்பவர் உதவி செய்ய முன் வருவாரா? அவருக்கு இருக்கும் ஆயிரம் பிரச்சினைகளுக்கும், வேலைகளுக்கும் மத்தியில் நமக்கு நேரம் ஒதுக்கி செய்வாரா?’ என்பது போன்ற பல கேள்விகளுடன் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்று பிரதமரைச் சந்தித்தார்.

ஆனால் நரசிம்மராவ், பானுமதியை உரிய மரியாதையோடு வரவேற்று, அவருக்கான உதவியை செய்து கொடுத்தார். பானுமதியின் பிரச்சினை தீர்ந்தது. இப்படி தன்னுடைய செல்வாக்கைப் பற்றி அறியாமலே வாழ்ந்தவர் பானுமதி.

Next Story