சினிமா செய்திகள்

சினிமா கேள்வி-பதில் : குருவியார் + "||" + Cinema Question-Answer: kuruviyar

சினிமா கேள்வி-பதில் : குருவியார்

சினிமா கேள்வி-பதில் : குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை–600007
சூர்யா நடித்து அடுத்து திரைக்கு வர இருக்கும் படம் எது, அந்த படத்தை இயக்கியவர் யார்? (இரா.செந்தில்குமார், திருக்கோவிலூர்)

சூர்யா நடித்து அடுத்து திரைக்கு வர இருக்கும் படம், ‘என்.ஜி.கே.’ இந்த படத்தை செல்வராகவன் டைரக்டு செய்திருக்கிறார். படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர முயற்சி நடைபெறுகிறது!

***

திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகிய நவ்யா நாயர், மீண்டும் சினிமாவுக்கு வந்தாரே...அவர் என்ன ஆனார்? (பி.கதிர், திண்டுக்கல்)

மறுபிரவேசம் செய்த நேரம் சரியில்லையோ, என்னவோ...அந்த படம் ஓடவில்லையாம். அதனால் வெறுத்துப்போன நவ்யா நாயர் மீண்டும் பெங்களூருவுக்கே திரும்பிப் போய்விட்டாராம்!

***

குருவியாரே, தமிழ் திரையுலகில், ‘இஞ்சி இடுப்பழகி’ என்று புகழ்கிற மாதிரி மெல்லிய இடுப்பழகை கொண்ட கதாநாயகி யார்? (பி.விஜய்குமார், சென்னை–18)

ஒரு காலத்தில், ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற பட்டத்துக்கு சொந்தக்காரராக சிம்ரன் இருந்து வந்தார். அதன் பிறகு அந்த பட்டத்துக்கு தகுதியானவர் இங்கே யாரும் கிடையாது!

***

குருவியாரே, பரத் நடித்த படங்களில் மிக அதிக நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படம் எது, அந்த படத்தின் டைரக்டர் யார்? (சரண்யா, புழல்)

‘காதல்.’ இந்த படத்தின் டைரக்டர், பாலாஜி சக்திவேல்!

***

திருமண பேச்சை எடுத்தாலே சிம்பு விரக்தியாக பேசுகிறாராமே...அந்த அளவுக்கு அவருடைய  மனதை பாதித்தவர் யார்? (எஸ்.சுதர்சன், கோவை)

கடைசியாக ஹன்சிகா! இவருடன் ஏற்பட்ட காதலை சிம்புவினால் மறக்க முடியவில்லையாம்!

***

குருவியாரே, ‘‘மன்னிக்க வேண்டுகிறேன்...உந்தன் ஆசையை தூண்டுகிறேன்...’’ என்ற பாடல் இடம் பெற்ற படம் எது, அந்த பாடலை பாடியவர்கள் யார்? பாடல் காட்சியில் நடித்தவர்கள் யார்? (வி.யுவராஜ், காட்பாடி)

அந்த பாடல் இடம் பெற்ற படம், ‘இரு மலர்கள்.’ பாடியவர் கள்: டி.எம்.சவுந்தரராஜன்– பி.சுசீலா. நடித்தவர்கள்: ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன்–பத்மினி!

***

குருவியாரே, காதல் தேவதை என்று சொல்லும் அளவுக்கு வசீகர முகமும், உடற்கட்டும் கொண்ட நடிகை நயன்தாராவா, திரிஷாவா? (கே.இன்பராஜ், ஊட்டி)

திரிஷா 2 படங்களில் காதல் தேவதையாக நடித்து, அந்த பட்டத்துக்கு பொருத்தமானவர் என்பதை நிரூபித்து விட்டார்!

***

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்த 100–வது படம் எது? (எல்.ஜாஸ்மின், கரூர்)

ரஜினிகாந்த் நடித்த 100– வது படம், ‘ராகவேந்திரா’

***

விஷால் தேர்ந்தெடுத்திருக்கும் மணப்பெண்ணின் பூர்வீகம் எந்த ஊர்? (ஆ.துரை, கருங்குளம்)

மணப்பெண்ணின் பூர்வீகம், ஆந்திரா. அவர் குடும்பத்தினருடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்!

***

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அண்ணனாக எம்.என்.நம்பியார் நடித்த படம் எது, அதில் கதாநாயகன் யார்? (ஏ.விஷால், பூந்தமல்லி)

‘சவாலே சமாளி’ என்ற படத்தில் எம்.என்.நம்பியார், ஜெயலலிதாவுக்கு அண்ணனாக நடித்து இருந்தார். அந்த படத்தின் கதாநாயகன், ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன்!

***

‘மஹா’ படத்தில் ஹன்சிகாவுக்கு என்ன வேடம்? (ஆர்.புவன், காஞ்சிபுரம்)

அவர் இதுவரை நடித்திராத வேடத்தில் நடிக்கிறார்!

***

குருவியாரே, 2015 மற்றும் 2017–ம் ஆண்டுகளில் அதிக வசூல் செய்த படம் எது? (ஏ.ஜெரால்டு, வக்கம்பட்டி)

2015–ம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம், ‘பாகுபலி.’ 2017–ம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம், ‘பாகுபலி–2.

***

குருவியாரே, சமந்தா கர்ப்பமாக இருப்பதாக ஒரு தகவல் பரவியிருக்கிறதே...உண்மையா? (எஸ்.தினேஷ், வேலப்பன்சாவடி)

திருமணம் ஆன பெண் கர்ப்பமாவது சகஜம்தானே...அந்த வகையில் சமந்தா கர்ப்பமானதில் எந்த ஆச்சரியமும் இல்லை!

***

விந்தியா என்று ஒரு நடிகை இருந்தாரே...அவர் என்ன ஆனார்? (வி.பூர்ணிமா, பி.கொமாரபாளையம்)

அ.தி.மு.க.வில் சேர்ந்த விந்தியா அந்த கட்சியின் பிரசார பீரங்கியாக இருந்து வந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின், விந்தியா கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கியிருக்கிறாராம்!

***

தமிழ் திரையுலகில், அந்த காலத்தில் இருந்தே நகைச்சுவை நடிகைகள் (மனோரமா உள்பட) மிக சிலரே இருந்தார்கள். தற்போது அந்த இடத்தை நிரப்புபவர்கள் யார்–யார்? (பி.முனிசாமி, திண்டுக்கல்)

கோவை சரளாவும், தேவதர்சினியும்...

***

குருவியாரே, தமன்னா ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவாரா? (ஜி.ஜானகிராமன், குடியாத்தம்)

நீண்ட கால நட்பில் உள்ள பெரிய பட அதிபர்களின் படங்களில் மட்டும் ‘நட்புக்காக’ ஆடுவாராம்!

***

ரம்யா நம்பீசனுக்கு பட வாய்ப்புகள் அதிகமாக இல்லையோ...அவரும் விளம்பர படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டாரே...? (மல்லிகா ராஜேஷ், புதுச்சேரி)

‘‘நயன்தாரா, ரேவதி, ரம்யாகிருஷ்ணன் போன்ற பெரிய கதாநாயகிகளே விளம்பர படங்களில் நடிக்கிறார்கள். நான் நடிக்க கூடாதா?’’ என்று திருப்பி கேட்கிறார், ரம்யா நம்பீசன்!

***

குருவியாரே, மும்பையில் இருந்து பல கதாநாயகிகள் தமிழ் பட உலகுக்கு வருகிறார்கள். வந்த வேகத்தில் அவர்கள் காணாமல் போய் விடுகிறார்கள். சமீபகாலமாக நிலைத்து நிற்பவர்கள் யார்? (செ.சுதீப், குளித்தலை)

சாயிஷா, ஆஷ்னாசவேரி, சஞ்சிதா ஷெட்டி! இந்த மூன்று பேருமே மும்பை வரவுகள்தான்!

***

மகேஷ் பாபு தமிழில் சரளமாக பேசுகிறாராமே...அது எப்படி? (எம்.பாஸ்கர பால்பாண்டியன், மதுரை)

மகேஷ்பாபு பிறந்தது, வளர்ந்தது, படித்தது எல்லாமே சென்னையில்தான். அவரை ஆந்திராக்காரர் என்று சொன்னால், நம்பமுடியாது!

***