‘சைகோ’ ஆசாமி என்று நினைத்து “போலீசாரிடம் சிக்கி அடி வாங்கியிருக்கிறேன்” நடிகர் யோகி பாபு பேட்டி


‘சைகோ’ ஆசாமி என்று நினைத்து “போலீசாரிடம் சிக்கி அடி வாங்கியிருக்கிறேன்” நடிகர் யோகி பாபு பேட்டி
x
தினத்தந்தி 28 Jan 2019 12:00 AM GMT (Updated: 27 Jan 2019 11:46 PM GMT)

“என்னை ‘சைகோ’ ஆசாமி என்று நினைத்து, போலீசார் அடித்து உதைத்தார்கள்” என்று நடிகர் யோகி பாபு கூறினார்.

தமிழ் சினிமாவில், நகைச்சுவை நடிகர்களின் ‘மார்க்கெட்’ நிலவரம் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கிறது. தங்கவேல், நாகேஷ், சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில், வடிவேல், விவேக், சந்தானம், சூரி என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவர் உச்சத்தில் இருக்கிறார். அதன்படி இப்போது, யோகி பாபு. இவர் இல்லாத படமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா படங்களிலும் ஒரு காட்சியிலாவது இவருடைய ‘தலை’ தெரிகிறது. அவரிடம் ஒரு பேட்டி.

கேள்வி:- சினிமாவில் இவ்வளவு பெரிய இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?

பதில்:- எதிர்பார்க்கவில்லை. இப்படி ஒரு அமைப்பு வரும் என்று தெரியாமல் சுற்றினேன். ஒரு காலகட்டத்துக்குப்பின், சினிமாவில் நமக்கும் ஒரு இடம் கிடைத்து இருக்கிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டது. நிறைய பேர் எனக்கு ஆதரவு அளித்ததால், நம்பிக்கை உறுதி ஆனது.

கேள்வி:- உங்கள் சொந்த ஊர் எது, அம்மா, அப்பா, சகோதர சகோதரிகள் பற்றி...?

பதில்:- ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள நசரத்பேட்டைதான் என் சொந்த ஊர். 10-ம் வகுப்பு வரைதான் படித்தேன். நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, அப்பா இறந்து விட்டார். ஒரு தம்பியும், ஒரு தங்கையும் இருக்கிறார்கள். எனக்கு 32 வயது ஆகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. இப்போதுதான் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெண் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று நான் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.

கேள்வி:- உங்களுக்கு பிடித்த நகைச்சுவை நடிகர் யார்?

பதில்:- எனக்கு பிடித்த நகைச்சுவை நடிகர்கள் கவுண்டமணி, செந்தில். இருவருமே நல்ல மனிதர்கள். திறமையான நடிகர்கள். நீங்க செந்திலுக்கு உறவினரா? என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது. அவர் எனக்கு உறவினர் அல்ல. ஆனாலும், என் நலனில் அக்கறை கொண்டவர். “உனக்கு நல்ல நேரம் வந்து இருக்கிறது. அதை பயன்படுத்திக் கொள்” என்று அறிவுரை கூறியிருக்கிறார்.

கேள்வி:- உங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் சம்பளம் என்றும், ஒரு படத்துக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் என்றும் பேசப்படுகிறதே...அது உண்மையா?

பதில்:- ரூ.2 கோடி சம்பளம் என்றும், ரூ.3 கோடி சம்பளம் என்றும் வதந்தியை பரப்பியிருக்கிறார்கள். கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. நான், நியாயமான சம்பளத்தை கேட்கிறேன். தயாரிப்பாளர்களும் கொடுக்கிறார்கள்.

கேள்வி:- வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் எது?

பதில்:- சென்னை நகரில் நிறுத்தி வைத்திருக்கும் கார்களையும், 2 சக்கர வாகனங்களையும் தீவைத்து எரித்துக் கொண்டிருந்த ‘சைகோ’ ஆசாமியை போலீசார் வலைவீசி தேடிக்கொண்டிருந்த நேரம், அது. நான் ஒரு நாடகத்தில் நடித்து விட்டு, நள்ளிரவில் நடந்தே வீட்டுக்கு போய்க்கொண்டிருந்தேன். சந்தேகத்தின் பேரில் என்னை போலீசார் விசாரித்தார்கள். நான் சொன்னதை போலீசார் நம்பவில்லை. பளார் என்று ஒரு போலீஸ்காரர் முதலில் அடித்தார். இன்னொரு போலீஸ்காரர் காது நரம்புகள் செயல்படாத அளவுக்கு ஓங்கி ஒரு அடி விட்டார். ரொம்ப நேரம் பிடித்து வைத்துக் கொண்டு நம்பிக்கை வந்தபின் விடுதலை செய்தார்கள்.

கேள்வி:- சொந்த வாழ்க்கையில் காதல் அனுபவம் இருக்கிறதா?

பதில்:- இந்த முகத்தை பார்த்து எந்த பெண்ணுக்காவது காதல் வருமா என்ன?

கேள்வி:- இப்போது எத்தனை படங்கள் உங்கள் கைவசம் உள்ளன?

பதில்:- 15 படங்கள் உள்ளன.

கேள்வி:- படத்துக்காக உங்கள் தலைமுடியை மொட்டை அடிக்க சொன்னால், செய்வீர்களா?

பதில்:- இந்த தலைமுடிதான் என் ‘ஸ்பெஷல்.’ அதனால், மொட்டை அடிக்க சொல்ல மாட்டார்கள். இவ்வாறு யோகி பாபு கூறினார்.

Next Story