'இளையராஜா 75' விழாவை ஏன் ஒத்தி வைக்க கூடாது? உயர் நீதிமன்றம் கேள்வி


இளையராஜா 75 விழாவை ஏன் ஒத்தி வைக்க கூடாது? உயர் நீதிமன்றம் கேள்வி
x
தினத்தந்தி 28 Jan 2019 7:39 AM GMT (Updated: 28 Jan 2019 7:39 AM GMT)

'இளையராஜா 75' விழாவை ஏன் ஒத்தி வைக்க கூடாது என தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்டவும், இசையமைப்பாளர் இளையராஜாவின் திரையுலக சாதனைகளை பாராட்டவும் ‘இளையராஜா 75’ என்ற பெயரில் கலைவிழா நடத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்தது.

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிப்ரவரி 2, 3 ஆகிய தேதிகளில் நடக்க உள்ள இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் சங்கம் செய்துள்ளது.

இதன்படி 2ந்தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள நடிகர் நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களும் விழாவில் பங்கேற்பது உறுதியாகி உள்ளது. மோகன்லால், மம்முட்டி, சிரஞ்சீவி, நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, சிவராஜ்குமார் ஆகியோரையும் அழைத்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து 3ந்தேதி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.  இதில் முன்னணி பாடகர்களும் பாடகிகளும் பங்கேற்று பாடுகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக புதிய டீசரை டுவிட்டரில் வெளியிட்டு, விழாவில் கலந்து கொள்ளும்படி ரசிகர்களுக்கு அழைப்பும் விடப்பட்டது.

இந்த இசைநிகழ்ச்சி மூலம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.10 கோடி நிதி திரட்டவும் அதை நலிந்த தயாரிப்பாளர்களுக்கு வீடு கட்ட நிலம் வாங்குவது உள்ளிட்ட நலத்திட்ட பணிகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், 'இளையராஜா 75' நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட தொகை குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும்.  அறிக்கை, ஆவணங்களை நாளை மறுநாள் தாக்கல் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்திற்கு உத்தரவு பிறப்பித்தனர்.

தொடர்ந்து அவர்கள், சங்கத்தின் மீது குற்றச்சாட்டுகள் வருவதால் இளையராஜா நிகழ்ச்சியை ஏன் ஒத்தி வைக்கக்கூடாது? என கேள்வி எழுப்பினர்.  ஆனால், நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் முடிந்து விட்டதால் நிகழ்ச்சியை நிறுத்த முடியாது என்று தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Next Story