வில்லனாக நடிக்க மறுக்கும் வினய்


வில்லனாக நடிக்க மறுக்கும் வினய்
x
தினத்தந்தி 28 Jan 2019 10:15 PM GMT (Updated: 28 Jan 2019 8:47 PM GMT)

சினிமாவில் வில்லன் வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு அமெரிக்காவில் சாப்ட்வேர் தொழிலில் ஈடுபட சென்று விட்டார் என்றும் மானேஜர் தெரிவித்து இருக்கிறார்.

தமிழில் 2007-ல் வெளியான ‘உன்னாலே உன்னாலே’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் வினய். தொடர்ந்து ஜெயம் கொண்டான், மோதி விளையாடு, மிரட்டல், ஒன்பதுல குரு, என்றென்றும் புன்னகை, அரண்மனை ஆகிய படங்களில் நடித்துள்ளார். துப்பறிவாளன் படத்தில் வில்லனாக வந்தார். தற்போது வெங்கடேஷ் இயக்கிய ‘நேத்ரா’ படத்திலும் வில்லனாக நடித்துள்ளார்.

நேத்ரா படத்தில் தமன் கதாநாயகனாக நடித்துள்ளார். வின்சென்ட் அசோகன், ரித்விகா, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொள்ள பெங்களூருவில் தங்கி இருந்த வினய்யை டைரக்டர் வெங்கடேஷ் போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் அமெரிக்கா சென்று விட்டதாக மானேஜர் தெரிவித்தார்.

வினய் வில்லனாக நடித்த கடைசி படம் நேத்ரா தான். இனிமேல் அவர் சினிமாவில் வில்லன் வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு அமெரிக்காவில் சாப்ட்வேர் தொழிலில் ஈடுபட சென்று விட்டார் என்றும் மானேஜர் தெரிவித்து இருக்கிறார். இதனால் இயக்குனர் வெங்கடேஷ், மற்ற நடிகர் நடிகைகளை வைத்து படவிழாவை நடத்தி முடித்துள்ளார்.

இனிமேல் கதாநாயகனாக மட்டுமே நடிப்பது என்று வினய் முடிவு செய்து அதற்கான கதைகள் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

Next Story