வித்தியாசமான தோற்றத்தில் பிருதிவிராஜ்
அடுஜீவிதம் படத்தில் பிருதிவிராஜின் வித்தியாசமான தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் பிருதிவிராஜ், தமிழில் கனா கண்டேன், மொழி சத்தம் போடாதே, வெள்ளித்திரை, அபியும் நானும் உள்பட பல படங்களிலும் நடித்தார். இப்போது அவருக்கு தமிழ் படங்களில் வாய்ப்புகள் அமையாததால் மீண்டும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
4 மலையாள படங்கள் அவர் கைவசம் உள்ளன. மோகன்லால், விவேக் ஓபராய் ஆகியோரை வைத்து லூசிபர் என்ற படத்தை டைரக்டும் செய்கிறார். இந்த படம் மார்ச் மாதம் திரைக்கு வருகிறது. மலையாளத்தில் அவர் நடித்து வரும் அடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.
அரேபிய நாடுகளில் பணியாற்றும் இந்தியர்களை பற்றிய கதையம்சத்தில் தயாராகிறது. நஜீப் என்ற கதாபாத்திரத்தில் பிருதிவிராஜ் நடிக்கிறார். கதாநாயகியாக அமலாபால் வருகிறார். பிளஸ்சி டைரக்டு செய்கிறார். மலையாளத்தில் 25 வருடங்களுக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.
படத்தில் பிருதிவிராஜ் தோற்றத்தை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இதில் கிழிந்த ஆடை, நீண்ட தலைமுடி மற்றும் உடலில் ரத்த காயங்களுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார். இந்த படத்தை சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். இதனால் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த படத்தை தமிழிலும் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story