டப்பிங் யூனியன் தடையால் 4 பட வாய்ப்புகளை இழந்தேன் - பாடகி சின்மயி வருத்தம்


டப்பிங் யூனியன் தடையால் 4 பட வாய்ப்புகளை இழந்தேன் - பாடகி சின்மயி வருத்தம்
x
தினத்தந்தி 6 Feb 2019 11:15 PM GMT (Updated: 6 Feb 2019 5:33 PM GMT)

‘மீ டூ’வில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்திய சினிமா பின்னணி பாடகி சின்மயி முன்னணி கதாநாயகிகளுக்கு டப்பிங் குரல் கொடுத்தும் வந்தார்.

 ‘96’ படத்தில் திரிஷாவுக்கு குரல் கொடுத்து இருந்தார். டப்பிங் சங்கத்துக்கு சந்தா கட்டவில்லை என்று கூறி அவரை நீக்கினர்.

இதுகுறித்து சின்மயி கூறும்போது “டப்பிங் கலைஞர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகள் நான் சந்தா செலுத்தவில்லை என்று என்னிடம் விளக்கம் எதுவும் கேட்காமல் நீக்கிவிட்டனர். இதனால் தமிழ் படங்களுக்கு இனிமேல் பின்னணி குரல் கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது” என்றார்.

சமீபத்தில் பொது நிகழ்ச்சிகளுக்கு சேலை அணிந்து செல்லும்படி டுவிட்டரில் சொன்ன ஒருவருக்கு, நான் சேலை அணிந்து வந்தால் சில ஆண்கள் எனது இடுப்பு பகுதியை போட்டோ எடுத்து அதில் வட்டமிட்டு ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் செய்து விடுகின்றனர், என்றார். இந்த நிலையில் தற்போது டுவிட்டரில் டப்பிங் யூனியன் குறித்து புதிய தகவலை பதிவிட்டுள்ளார்.

அதில் சின்மயி, “எனக்கு டப்பிங் யூனியன் தடை விதித்து உள்ளது. இதனால் கடந்த சில வாரங்களில் தமிழில் 4 படங்களில் டப்பிங் பேசும் வாய்ப்பை இழந்துள்ளேன். பாலியல் தொல்லைகள் குறித்து பேசக்கூடாது என்றும், பேசினால் வீட்டு வேலைக்குத்தான் செல்லவேண்டும் என்றும் டப்பிங் கலைஞர் ஹேமமாலினி கூறியிருக்கிறார்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

Next Story