ஆடை பற்றிய விமர்சனம் ஏ.ஆர்.ரகுமான் மகள் விளக்கம்


ஆடை பற்றிய விமர்சனம் ஏ.ஆர்.ரகுமான் மகள் விளக்கம்
x
தினத்தந்தி 8 Feb 2019 11:00 PM GMT (Updated: 8 Feb 2019 4:55 PM GMT)

மும்பை தாராவி பகுதியில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். இதில் ஏ.ஆர்.ரகுமானுடன் கலந்து கொண்ட அவரது மகள் கதிஜா முகத்தை மறைத்து பர்தா அணிந்து பேசினார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படத்துக்கு ஆஸ்கார் விருது வாங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மும்பை தாராவி பகுதியில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். இதில் ஏ.ஆர்.ரகுமானுடன் கலந்து கொண்ட அவரது மகள் கதிஜா முகத்தை மறைத்து பர்தா அணிந்து பேசினார்.

இதைப் பார்த்த சிலர் ஏ.ஆர்.ரகுமான் இரட்டை வேடம் போடுவதாகவும் மகளை கட்டாயப்படுத்தி பர்தா அணிய வைத்துள்ளதாகவும் வலைத்தளத்தில் விமர்சித்தனர். இதைத்தொடர்ந்து முகத்தை மறைக்காமல் தலையில் முக்காடு மட்டும் போட்டுள்ள மனைவி, முக்காடு அணியாத மகள் ரஜிமா, பர்தா அணிந்த மகள் கதிஜா ஆகியோர் படங்களை ஏ.ஆர்.ரகுமான் டுவிட்டரில் வெளியிட்டு உடைகள் அணிவது அவர்கள் விருப்பம் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்து ஏ.ஆர்.ரகுமான் மகள் கதிஜா முகநூலில் கூறியிருப்பதாவது:-

“என் தந்தையுடன் மேடையில் கலந்து கொண்டபோது நான் அணிந்த ஆடை பற்றி பேசப்படுகிறது. நான் அணியும் ஆடை மற்றும் வாழ்க்கை முறைகளுக்கும் எனது பெற்றோருக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் முழுமையாக ஏற்றுக்கொண்டு எனது சொந்த விருப்பத்தின் பேரில்தான் பர்தாவை அணிந்து இருக்கிறேன். வாழ்க்கையில் எது வேண்டும்? என்று தேர்வு செய்யும் அளவுக்கு எனக்கு பக்குவம் இருக்கிறது.

எந்த தனி மனிதனுக்கும் எந்த உடை அணிய வேண்டும்? எப்படி வாழ வேண்டும்? என்ற சுதந்திரம் இருக்கிறது. அந்த சுதந்திரத்தை நானும் அனுபவித்து வருகிறேன். உண்மை நிலை தெரியாமல் பேச வேண்டாம்.” இவ்வாறு கதிஜா கூறியுள்ளார்.

Next Story