சினிமா செய்திகள்

குருவியார் கேள்வி-பதில்கள் + "||" + Kuruviyar Question and Answers

குருவியார் கேள்வி-பதில்கள்

குருவியார் கேள்வி-பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, வெளிமாநிலத்தை சேர்ந்தவர் என்ற சுவடே தெரியாத அளவுக்கு சில கதாநாயகிகள் சரளமாக தமிழ் பேசுவதை பார்த்து அசந்து இருக்கிறீர்களா? (பி.விஜய் விக்னேஷ், சென்னை–20)

முன்னாள் கதாநாயகிகளில், அம்பிகா. இந்நாள் கதாநாயகிகளில், நயன்தாரா. இருவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். இரண்டு பேரும் மலையாள வாசனையே இல்லாமல் தமிழ் பேசுவதை பார்த்து அசந்து இருக்கிறேன்!

***

வடிவேலு நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்களில், இன்று வரை மறக்க முடியாத கதாபாத்திரம் எது, அந்த கதாபாத்திரம் எந்த படத்தில் இடம்பெற்றது? (கே.தமிழ்செல்வன், தஞ்சை)

‘வின்னர்’ படத்தில் இடம் பெற்ற ‘கைப்புள்ள’ கதாபாத்திரத்தை எந்த காலத்திலும், யாராலும் மறக்க முடியாது!

***

குருவியாரே, நடிகர் சங்க பொதுச்செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் திருமணம் எங்கே, எப்போது நடைபெறும்? (அழகன் ராஜவேல், சேலம்)

நடிகர் சங்க கட்டிடம் ஜூன் மாதத்துக்குள் கட்டி முடிக்கப்பட்டு விடும். அதில் நடைபெறும் முதல் நிகழ்ச்சியே விஷாலின் திருமணம்தான் என்று அவருக்கு நெருக்கமான நண்பர்கள் கூறுகிறார்கள்!

***

முன்னாள் கதாநாயகி ரூபினிக்கு எத்தனை பிள்ளைகள்? அவர்கள் எங்கே படிக்கிறார்கள்? (எஸ்.ஜீவா, நாகர்கோவில்)

ரூபினிக்கு ஒரே ஒரு மகள் மட்டும் இருக்கிறார். அவர், மும்பையில் 10–ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார்!

***

குருவியாரே, பி.மாதவன் டைரக்‌ஷனில் எம்.ஜி.ஆர். நடித்து இருக்கிறாரா? (ஏ.ஜி.முகமது தவ்பீக், மேலப்பாளையம்)

பி.மாதவன் டைரக்‌ஷனில், ‘தெய்வத்தாய்’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் எம்.ஜி.ஆர். நடித்தார்!

***

தமிழ் திரையுலகில், ‘நகைச்சுவை மன்னர்கள்’ என்று பெயர் வாங்கிய கவுண்டமணி–செந்தில் இருவரும் சென்னையில் எந்த பகுதியில் வசிக்கிறார்கள்? (ஆர்.குருதேவ், திருச்சி)

கவுண்டமணி தேனாம்பேட்டையிலும், செந்தில் சாலிகிராமத்திலும் வசிக்கிறார்கள்!

***

குருவியாரே, உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வீரதீர சாகச காட்சிகளில் ‘டூப்’ நடிகரை பயன்படுத்தாமல் ஒரிஜினலாக நடிக்கும் நடிகைகள் இருக்கிறார்களா? (வி.ஞானசேகரன், சிவகாசி)

திரிஷா, தன்சிகா, டாப்சி ஆகிய மூவரும் சாகச காட்சிகளில் ‘டூப்’ நடிகரை நடிக்க விடுவதில்லை. அவர்களே துணிச்சலாக நடித்து விடுகிறார்கள்!

***

நடிகர்–டைரக்டர் பார்த்திபன் வயதே தெரியாத அளவுக்கு இன்னும் இளமையாக தெரிவதன் ரகசியம் என்ன? (ஏ.சாஜகான், அரக்கோணம்)

அவருடைய காதல்வசப்பட்ட மனசுதான் அந்த ரகசியம். காதலுக்கும், தோற்றத்துக்கும் அப்படி ஒரு தொடர்பு இருக்கிறதாம். பார்த்திபனின் கண்டுபிடிப்பு, இது!

***

குருவியாரே, கவர்ச்சி நடிகைகளில் யாருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்? (எம்.சுந்தரமூர்த்தி, மதுரை)

முன்பு ‘சில்க்’ சுமிதாவுக்கு...இப்போது சன்னிலியோனுக்கு! மன்றம் வைத்து நடத்துகிற அளவுக்கு இந்த 2 பேருக்கும் அதிக ரசிகர்கள்...!

***

தமன்னா, ஹன்சிகா, சமந்தா ஆகிய மூன்று பேரில் செக்கச்சிவந்த நிறத்தழகி யார்? (கு.ராம்குமார், கோவை)

மூன்று பேருமே தங்க நிறத்தழகிகள்தான். ஒருவருக்கொருவர் குறைந்தவர்கள் அல்ல!

***

குருவியாரே, ‘மாரி–2’ படத்தில் நடித்த சாய்பல்லவி தமிழ் திரையுலகின் ‘நம்பர்–1’ நடிகையாக உயர்வாரா? (கே.சி.பிரதாப், விருதுநகர்)

‘நம்பர்–1’ நடிகையாக வருவதற்கான தகுதிகள் அனைத்தும் சாய்பல்லவியிடம் இருக்கிறது. அடுத்து அவர் நடித்து வெளிவரும் படங்களை பொருத்து அவருடைய நட்சத்திர அந்தஸ்து அமையும்!

***

ஆர்யா எளிதில் எந்த நாயகியிடமும் சிக்க மாட்டாரே...சாயிஷாவிடம் சிக்கியது எப்படி? (எம்.சாகுல் அமீது, ஈரோடு)

வேறு எந்த கதாநாயகியிடமும் இல்லாத அழகை சாயிஷாவிடம் பார்த்தாராம். அதுவே ஆர்யாவை காதல்வசப்படுத்தியதாம்!

***

குருவியாரே, தமிழ் நடிகர்களில் கேரளாவில் அதிக ரசிகர்களை பெற்றுள்ள நடிகர் யார்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

விஜய்! இவர் நடித்த படங்களுக்கு கேரளாவில் வரவேற்பு அதிகம். விஜய் படங்களை கேரளாவில் கொண்டாடுகிறார்கள்.

***

‘‘தேரு பார்க்க வந்திருக்கும் சித்திர பெண்ணே’’ என்ற பாடல் காட்சி இடம் பெற்ற படம் எது, அந்த பாடல் காட்சியில் நடித்தவர்கள் யார்? (ஜே.ஜாஸ்மின், புதுக்கோட்டை)

அந்த பாடல் இடம்பெற்ற படம், ‘இரு துருவம்.’ பாடல் காட்சியில் நடித்தவர்கள்: ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன்–பத்மினி!

***

குருவியாரே, ஆதரவற்றோருக்காக இல்லம் நடத்தும் நடிகர்–நடிகை யார்? (மு.வே.சாமிநாதன், வள்ளியூர்)

ராகவா லாரன்ஸ் சென்னையிலும், ஹன்சிகா மும்பையிலும் ஆதரவற்றோருக்காக இல்லம் நடத்தி வருகிறார்கள்!

***

நடிகர்களுக்கு தகுந்தபடி, அவர்கள் குரலுக்கு பொருந்துகிற மாதிரி பாடுகிற தனி திறமை கொண்ட பாடகராக மறைந்த டி.எம்.சவுந்தரராஜன் இருந்தார். இப்போது அப்படி ஒரு பாடகர் இருக்கிறாரா? (ஜி.பாலாஜி, மயிலாடுதுறை)

டி.எம்.சவுந்தரராஜனுக்கு இணையான பாடகர் இப்போது யாரும் இல்லை! எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய இருவருக்கும் மட்டுமல்ல. ஜெய்சங்கருக்கும் பொருந்துகிற மாதிரி பாடி பாராட்டு பெற்றவர், அவர் ஒருவர்தான்!

***

குருவியாரே, வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதி அடுத்து நடித்து வெளிவரும் படம் எது, அது எப்படிப்பட்ட கதையம்சம் உள்ள படம்? (என்.சேதுராம், திருப்பூர்)

விஜய் சேதுபதி நடித்து அடுத்து வெளிவரும் படம், ‘சூப்பர் டீலக்ஸ்.’ இது, குற்றப்பின்னணியிலான கதை. திகில் பட ரசிகர்களுக்கு சரியான விருந்தாக இருக்கும்!

***

தேவயானியை இப்போதெல்லாம் படங்களில் பார்க்க முடியவில்லை... சின்னத்திரையிலும் பார்க்க முடிவதில்லை. அவர் எங்கே இருக்கிறார்? (இரா.ராஜமார்த்தாண்டன், குளித்தலை)

தேவயானிக்கு அந்தியூர் பக்கம் பண்ணை வீடும், தோட்டமும் இருக்கிறது. இப்போதெல்லாம் அவர் குடும்பத்துடன் அடிக்கடி அந்தியூர் போய்விடுகிறார்!

***

குருவியாரே, தமிழ் பட உலகில் கொடிகட்டி பறந்த நடிகை ராதா தற்போது எங்கு இருக்கிறார்? (த.நேரு, வெண்கரும்பூர்)

ராதாவின் கணவருக்கு சொந்தமாக மும்பையிலும், கேரளாவிலும் ஓட்டல்கள் உள்ளன. கணவருக்கு உதவியாக ராதா ஓட்டல் நிர்வாகத்தை கவனிக்கிறார். அதனால் அவர் பாதி நாட்கள் மும்பையிலும், மீதி நாட்கள் கேரளாவிலும் வசித்து வருகிறார்!

***

அஜித்குமாரின் அடுத்த படத்துக்கு பெயர் சூட்டப்பட்டு விட்டதா, அந்த படத்தை இயக்குபவர் யார், கதாநாயகி யார்? (வே,கவுதம், முகப்பேர்)

அஜித்குமாரின் அடுத்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. அந்த படத்தை வினோத் இயக்குகிறார். கதாநாயகியாக வித்யாபாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்!

***