விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம் - நடிகர் முகேஷ் மீது சரிதா புகார்


விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம் - நடிகர் முகேஷ் மீது சரிதா புகார்
x
தினத்தந்தி 11 Feb 2019 11:03 PM GMT (Updated: 11 Feb 2019 11:03 PM GMT)

விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம் செய்து கொண்டதாக, நடிகர் முகேஷ் மீது சரிதா புகார் தெரிவித்துள்ளார்.


தமிழ், தெலுங்கு பட உலகில் 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகியாக இருந்த சரிதா, மலையாள நடிகர் முகேசை காதல் திருமணம் செய்து பின்னர் பிரிந்து விட்டார். தற்போது துபாயில் வசிக்கும் அவர் சமீபத்தில் ஐதராபாத் வந்தபோது குடும்பம் மற்றும் சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்து கூறியதாவது:-

“நான் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். பாலசந்தர் மரோசரித்ராவில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்க 180 பேரை நிராகரித்து என்னை தேர்வு செய்தார். படம் வெளியான முதல் வாரத்தில் சரியாக ஓடவில்லை. இந்த கருப்பு பெண்தான் படம் ஓடாததற்கு காரணம் என்று என்னை திட்டினர். அடுத்த வாரத்தில் இருந்து படம் ஓடியதும் என்னை பாராட்டினார்கள்.

இப்போது திரையில் வராமல் இருந்தாலும் பின்னால் இருந்து நடிகைகளுக்கு குரல் கொடுத்து வருகிறேன். நதியா, தபு, சவுந்தர்யா விஜயசாந்தி, நக்மா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலருக்கு குரல் கொடுத்துள்ளேன். திருமணத்துக்கு பிறகு குழந்தைகளை வளர்ப்பதற்காக நடிப்பில் இருந்து விலகினேன். மகளிர் மட்டும் படத்தில் நடிக்கும்படி கமல்ஹாசன் வற்புறுத்தியும் மறுத்தேன்.

கணவர் முகேஷ் எனக்கு ஆதரவாக இல்லை. அவர் எனக்கு சரியானவர் இல்லை என்பது தாமதமாகத்தான் தெரிந்தது. அன்பு, நேசிப்பு, எதுவும் கிடையாது. ஆனாலும் எங்கள் இருவர் இடையில் கடவுள் தங்கம் மாதிரி இரண்டு குழந்தைகளை கொடுத்து இருக்கிறார். அதுபோதும்.

எனக்கு விவாகரத்து கொடுக்காமலேயே முகேஷ் வேறு திருமணம் செய்து கொண்டார். மோசடி செய்து விவாகரத்து பத்திரம் வாங்கி கொண்டார்.

இந்த விஷயத்தில் நான் வழக்கு போட்டு இருந்தால் 7 வருடம் அவர் சிறையில் இருந்து இருப்பார். ஆனால் அப்படி செய்ய வில்லை. அவர் செல்வாக்கு மிகுந்த மனிதர். வழக்கு தொடர்ந்தாலும் அவரை என்னால் எதுவும் செய்ய முடியாது. நீ கேரளாவில் என்னை எதுவும் செய்ய முடியாது என்று நேரடியாக சவால் விட்டார். போலீசில் புகார் கொடுத்தும் பயன் இல்லை. அதன்பிறகு அந்த விஷயத்தை கடவுளிடமே விட்டு விட்டேன். என் 2 மகன்கள்தான் எனது தைரியம். அவர்களுக்காக வாழ்கிறேன். ஒரு மகன் டாக்டர். இன்னொரு மகன் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கிறான். அவர்களுக்கும் சினிமாவில் ஆர்வம் இருக்கிறது. இருவரும் விரைவில் கதாநாயகர்களாக நடிப்பார்கள்.” இவ்வாறு சரிதா கூறினார்.


Next Story