பகவத் கீதையை அவமதிக்கவில்லை - நடிகர் விஜய்சேதுபதி மறுப்பு


பகவத் கீதையை அவமதிக்கவில்லை - நடிகர் விஜய்சேதுபதி மறுப்பு
x
தினத்தந்தி 12 Feb 2019 11:00 PM GMT (Updated: 12 Feb 2019 10:47 PM GMT)

பகவத் கீதையை அவமதிக்கவில்லை என்று நடிகர் விஜய்சேதுபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.


நடிகர் விஜய்சேதுபதி கடந்த 6-ந் தேதி தமிழக காவல்துறை ஏற்பாடு செய்த செல்போன் திருட்டை கண்டுபிடிக்கும் ‘டிஜிகாப்’ என்ற மொபைல் செயலி அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது “காவல் துறைக்கும் பொது மக்களுக்குமான இடைவெளி இந்த ‘டிஜிகாப்’ செயலி மூலம் குறையும் என்று பேசினார்.

இது டி.வி. சேனலில் வெளியானது. அந்த டி.வி. சேனல் பதிவில் விஜய் சேதுபதி கூறிய கருத்துக்கு மாறாக பகவத் கீதையை அவர் அவதூறாக கூறுவதுபோன்ற கருத்தை போட்டோஷாப் மூலம் மாற்றி பதிவிட்டு சிலர் பரப்பினர். சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை பார்த்த சிலர் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டனர். இதற்கு விஜய் சேதுபதி தனது முகநூல் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் டி.வி. சேனலின் உண்மை செய்தியையும், விஷமிகள் பரப்பிய போட்டோஷாப் கருத்தையும் வெளியிட்டு கூறியிருப்பதாவது:-

“என் அன்பிற்குரிய மக்களுக்கு, பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனித நூலை பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும் இல்லை. பேசவும் மாட்டேன். சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது. எந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும், ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன்.” இவ்வாறு விஜய் சேதுபதி கூறியுள்ளார்.


Next Story