சினிமா செய்திகள்

சினிமா கேள்வி பதில்! குருவியார் + "||" + Cinema question and Answer Kuruviyar

சினிமா கேள்வி பதில்! குருவியார்

சினிமா கேள்வி பதில்! குருவியார்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டியமுகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை&600007
குருவியாரே, அஜித்குமாரை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய 4 படங்களை தொடர்ந்து இயக்கிய டைரக்டர் சிவா, அடுத்து விஜய்யை வைத்து ஒரு படம் இயக்குவாரா? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

டைரக்டர் சிவா தயாராக இருக்கிறார். விஜய் கால்ஷீட் கிடைத்தால், உடனே படப்பிடிப்பை தொடங்கி விடுவாராம்!
***
தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகிகளில் ஒருவரான திரிஷா என்ன கார் வைத்து இருக்கிறார்? உள்நாட்டு காரா, வெளிநாட்டு காரா? (எஸ்.மீனாட்சி சுந்தரம், மதுரை)

திரிஷா, வெளிநாட்டு காரும் வைத்து இருக்கிறார். உள்ளூருக்குள் போய் வர ஒரு கார், வெளியூர் செல்வதற்கு ஒரு கார் என அவர் 2 கார்களை பயன்படுத்துகிறார்!
***
குருவியாரே, நயன்தாரா, நகைச்சுவையாக பேசுபவர்களை விரும்புவாராமே...உண்மையா? (ஜே.கார்த்திக், ஊட்டி)

சிம்பு, பிரபுதேவா, விக்னேஷ் சிவன் ஆகிய மூன்று பேருமே நகைச்சுவையாக பேசுபவர்கள்தான். இவர்களை தாண்டி, நயன்தாரா இப்போது, யோகி பாபுவின் நகைச்சுவையை ரசிக்க ஆரம்பித்து இருக்கிறார்!
***
சசிகுமார் நடித்து அடுத்து வெளிவர இருக்கும் படம் எது? (என்.ராஜ், கம்பம்)

நாடோடிகள்&2.0 இந்த படத்தை மார்ச் மாதத்தில் திரைக்கு கொண்டுவர முயற்சி செய்து வருகிறார்கள்!
***
ராதையின் நெஞ்சமே...கண்ணனுக்கு சொந்தமே...என்ற பாடல் டியூன், எந்த மொழி படத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது? (கா.தமிழரசன், குலசேகரபட்டினம்)

ஷர்மிலி என்ற இந்தி படத்தில் வந்த டியூன் அது!
***
குருவியாரே, நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக மாறிய நடிகர்கள் யார்? (இரா.தமிழ்மணி, தஞ்சை)

நாகேஷ், தேங்காய் சீனிவாசன், கவுண்டமணி, வடிவேல், விவேக், சந்தானம் ஆகியோரை அடுத்து, யோகி பாபுவும் அந்த பட்டியலில் சேர்ந்து இருக்கிறார்!
***
'புன்னகை அரசி' கே.ஆர்.விஜயா என்ன செய்து கொண்டிருக்கிறார்? (நூர்முகமது, வேலூர்)

கே.ஆர்.விஜயா தனக்கு பிடித்த கதை மற்றும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் ஒரு விளம்பர படத்தில் நடித்து இருக்கிறார்!
***
நடிகர் ஜெய்க்கும், அஞ்சலிக்கும் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் இருக்கிறதாமே...அது என்ன? (எம்.சுதாகர், கோபிச்செட்டிப்பாளையம்)

நீ உன் பாதையில் போ...நான் என் பாதையில் செல்கிறேன்...விதி, இருவரையும் இணைத்தால், பார்க்கலாம்...என்பதே அந்த ஒப்பந்தம்!
***
வயது அதிகம் என்றாலும் தோற்றத்தில் தெரியாத நடிகர்&நடிகைகள் யார், யார்? (வே.தேவஜோதி, மதுரை)

நடிகர்களில், விவேக்! நடிகைகளில், கோவை சரளா!
***
குருவியாரே, இந்தி நடிகைகளுக்கு தென்னிந்திய நடிகர்கள், குறிப்பாக தமிழ் நடிகர்களைத்தான் ரொம்ப பிடிக்குமாமே, அப்படியா? அதன் ரகசியம் என்ன? (சி.ஸ்டீபன் பால்ராஜ், மார்த்தாண்டம்)

இந்தி நடிகர்கள் முன்தினம் இரவில் சாப்பிட்ட வாசனை மறுநாள் காலை வரை அப்படியே இருக்குமாம்...தமிழ் நடிகர்களிடம் அந்த வாசனை இல்லாததுடன், வசீகர (வாசனை திரவிய) வாசனை கவர்ந்து இழுக்குமாம். இதுவே அந்த ரகசியம்!
***
அந்த காலத்து 'அபிநய சரஸ்வதி' சரோஜாதேவி, சிவாஜிகணேசனுடன் அதிக படங்களில் நடித்து இருக்கிறாரா அல்லது ஜெமினிகணேசனுடன் அதிக படங்களில் நடித்துள்ளாரா? (ஜி.கோபால், விருத்தாசலம்)

ஜெமினிகணேசனை விட, சிவாஜிகணேசனுடன்தான் சரோஜாதேவி அதிக படங்களில் நடித்து இருக்கிறார்!
***
டைரக்டர் சுசீந்திரன் இயக்கிய முதல் படம் எது? அது எந்த ஆண்டு திரைக்கு வந்தது? (எஸ்.கென்னடி, திருவாரூர்)

சுசீந்திரன் இயக்கிய முதல் படம், 'வெண்ணிலா கபடிக்குழு' அது, 2009ல் திரைக்கு வந்தது!
***
 குருவியாரே, அனுஷ்கா வெளிநாட்டுக்குப் போய் உடல் எடையை குறைத்துக் கொண்டு வந்திருக்கிறாரே...இப்போது அவர் எப்படியிருக்கிறார்? (சா.ரவீந்தர் பிரபு, மதுரவாயல்)

அணில் உறிஞ்சி சாப்பிட்ட பழம் மாதிரி, ரொம்பவே மெலிவாக தெரிகிறார்!
***
சிவகார்த்திகேயனும், நயன்தாராவும் இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு என்ன பெயர் சூட்டியிருக்கிறார்கள்? (தா.பார்த்தசாரதி, சேலம்)

அந்த படத்துக்கு, 'மிஸ்டர் லோக்கல்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது!
***
குருவியாரே, சிம்ரன் இரண்டாவது ரவுண்டுக்கு வந்து விட்டாரே...இனி எந்த மாதிரி வேடங்களில் நடிப்பார்? (எஸ்.ஜானகிராமன், புதுச்சேரி)

அக்காள், அண்ணி, முன்னாள் காதலி என்று அனைத்து குணச்சித்ர வேடங்களிலும் சிம்ரன் நடிக்க தயாராக இருக்கிறாராம்!
***
விஜய்சேதுபதி சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தார்? (கே.ராஜன், திண்டுக்கல்)

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாலுமகேந்திரா ஸ்டூடியோவில் பணிபுரிந்து கொண்டிருந்தார்!

குருவியாரே, 'கஜினி' படத்தை அடுத்து அதிக வசூல் செய்த சூர்யா படம் எது? (எம்.பாலாஜி, திருச்சி)

'அயன்!' சூர்யா கதாநாயகனாக நடித்த படங்களில், அதிக வசூல் செய்த படமும் அயன் தான்!
***
குருவியாரே, லட்சுமி மேனன், கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரில் சரளமாக தமிழ் பேசுபவர் யார்? (இரா.புகழேந்தி, கொடைக்கானல்)

சரளமாக தமிழ் பேசுபவர், கீர்த்தி சுரேஷ். லட்சுமி மேனன் தமிழ் பேசும்போது, மலையாள வாசனை கொஞ்சம் இருக்கும்!
***
குருவியாரே, சிம்புவும், தனுசும் நண்பர்களாகி விட்டாலும், ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லையே...அவ்வளவுதானா அவர்களின் நட்பு? (ஆர்.குமரன், திருப்பூர்)

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் நட்பு வேறு, தொழில் வேறு என்று பிரிந்தே நடிக்கிறார்கள் அல்லவா? அதேபோல்தான் சிம்புவும், தனுசும் இணைந்து நடிப்பதில்லை என்று முடிவு செய்து இருக்கிறார்களாம்!
***
குருவியாரே, நடிப்பதுடன் சொந்த குரலில் பாடியும் வருகிற ரம்யா நம்பீசன், ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? பாடுவதற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? (ஏ.ஜெபராஜ், அவினாசி)

ரம்யா நம்பீசன் நடிப்பதற்கும், பாடுவதற்கும் பேரம் பேசாமல், பட அதிபர்கள் கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக் கொள்கிறார்! நடிப்புக்கு 20 முதல் 25 லட்சமும், பாடுவதற்கு ரூ.2 லட்சமும் அவர் வாங்குவதாக கேள்வி!
***