‘எனக்குள் ஒரு ஜான்சி ராணி’-கங்கணா ரனவத்


‘எனக்குள் ஒரு ஜான்சி ராணி’-கங்கணா ரனவத்
x
தினத்தந்தி 24 Feb 2019 5:46 AM GMT (Updated: 24 Feb 2019 5:46 AM GMT)

வித்தியாசமான வேடங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் தனித்தன்மையான நடிகை என்ற பெயர் பெற்று வருகிறார், பாலிவுட் பாவை கங்கணா ரனவத்.

வித்தியாசமான வேடங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் தனித்தன்மையான நடிகை என்ற பெயர் பெற்று வருகிறார், பாலிவுட் பாவை கங்கணா ரனவத்.

அவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ஜான்சி ராணியின் சரித்திரப் படமான ‘மணிகர்ணிகா’வும் பரவலாகப் பாராட்டை ஈட்டிக் கொடுத்திருக்கிறது. அந்த உற்சாகத்தில் திளைத்துக்கொண்டிருக்கும் கங்கணாவின் பேட்டி...

நீங்கள் இதுவரை நடித்ததிலேயே பெரிய படம் என்பதால், மணிகர்ணிகா ரீலிசின்போது நீங்கள் படபடப்பாக இருந்தீர்களா?

நிச்சயமாக இது எனது பெரிய படம். நான் இது போன்ற ஒரு பிரமாண்ட படத்தில் நடிப்பேன் என்று நினைத்ததே இல்லை. இது அவ்வளவு பெரிய படம் என்பதால், ரிலீசும் பெரிதாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். இப்படம் சம்பந்தப்பட்ட கே.வி. விஜயேந்திர பிரசாத் (கதை, திரைக்கதை), பிரசூன் ஜோஷி (பாடல்கள், வசனம்) போன்றோரும் பெரிய உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள். ஒரு படத்துக்கான பட்ஜெட் பெரிதாகவோ, சிறிதாகவோ இருக்கலாம். ஆனால் மணிகர்ணிகாவைப் பொறுத்தவரை அது கதையால் பெரிய படம். எனவே எனக்கும் அது முக்கியமான படம்.

இப்படத்தில் நடித்தபோது உற்சாகமாக இருந்ததா, படபடப்பாக இருந்ததா?

உற்சாகம்தான் அதிகமாக இருந்தது. இது படம் பிடிக்கப்பட்ட விதமே உற்சாகமூட்டுவதாக இருந்தது. குறிப்பாக, ஆக்‌ஷன் டைரக்டர் நிக் பொவல் படம் பிடித்த ஆக்‌ஷன் காட்சிகள். இவ்வளவு பிரமாண்ட ஆக் ஷன் படம் இந்தியாவில் இதற்குமுன்பு உருவானதில்லை. மணிகர்ணிகாவுக்கான ஆக்‌ஷன் காட்சிகளை மட்டும் நாங்கள் 80 நாட்கள் படமாக்கினோம். இன்றுவரை இந்தியில் காதல் கதைகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். ஆனால், எங்களுடையது ஒரு சரியான யுத்தப் படம். அதேநேரத்தில் அதிகம் அடக்கிவாசிக்கப்பட்ட படமும் இதுதான். பெண்கள் வெளியே தலைகாட்டாத காலத்தில் ஜான்சி ராணி லட்சுமிபாய் போல ஒரு பெண் அரியாசனம் ஏறியதும், போர்க்களத்தில் சண்டையிட்டதும் சாதாரண விஷயம் அல்ல.

ஒரு பெண்ணாக, ஜான்சி ராணி என்ற வலிமையான ஆளுமையுடன் உங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முடிந்ததா?

முழுமையாக அடையாளப்படுத்திக்கொள்ள முடிந்தது! ஆனால் இன்று நாங்கள் ஜான்சி ராணி அளவுக்கு கஷ்டப்பட வேண்டியிருக்கவில்லை (சிரிக்கிறார்). தனது குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு போருக்கு புலியென புறப்பட்டுச் சென்றவர், ஜான்சி ராணி. எவ்வளவு தன்னம்பிக்கை இருந்திருந்தால் அவர் அப்படிச் செய்திருப்பார்? ஆனால் இன்றோ நாங்கள் வேடிக்கைக்காகச் சண்டை போடுகிறோம். ஆக, என்னையும் ஜான்சி ராணியையும் ஒப்பிட முடியாது. தனது கவுரவத்தைக் காக்கப் போரிட்ட அந்த வீரப்பெண்ணின் ஊக்கத்தை, தாக்கத்தை எனக்குள் உணர முடிந்தது.

தனிப்பட்ட விதத்தில், ஜான்சி ராணியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

விஜயேந்திர சாரும், பிரசூன் சாரும் தீட்டிய விதத்தில்தான் நான் இப்படத்தில் நடித்தேன். ஆனால் பொதுவாக நாம் ஜான்சி ராணி பற்றி நிறைய அறிய முடிந்திருக்கிறது. அதற்குக் காரணம், ஆங்கிலேயப் படை கமாண்டரான ஹக் ரோஸ். பல போர்களில் வெற்றி பெற்ற ஜான்சி ராணி, ஹக் ரோஸுக்கு எதிராகப் போரிட்டுத்தான் மடிந்தார். ஆனால் ஜான்சி ராணியின் அழகு, வீரத்தால் கவரப்பட்ட ஹக் ரோஸ், அவரைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். தனது சுயசரிதையிலும் கூட ஜான்சி ராணி பற்றி நிறையக் குறிப்பிட்டிருக்கிறார். ஜான்சி ராணியை பல கோணங்களில் பார்க்கலாம் என்பதை நாங்கள் உணர்ந்தோம். விஜயேந்திர சார் அவரை ஒரு மகளாகப் பார்த்தார். அதனால்தான் ‘தேசத்தின் புதல்வி’ என்று நாங்கள் ஜான்சி ராணியை குறிப்பிட்டோம். எங்களைப் பொறுத்தவரை, இந்த மண்ணின் மகள் அவர். ஒரு பெரும் போர் வீராங்கனையான ஓர் இளம்பெண்ணின் கதையை எங்கள் படம் கூறுகிறது.

இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடிப்பது கடினமாக இருந்ததா?

அக்காலத்தில் ஜான்சி ராணி போன்றவர்கள் வாழ்ந்த வன்முறைச் சூழல், போர் அபாயம், வலியை எல்லாம் இன்று நம்மால் முழுமையாக உணர முடியாது. உளவியல் ரீதியாக அது மிகவும் வேறுபட்ட விஷயம். எனவே எனக்கு இப் படத்தில் நடிப்பது கடினமாகவே இருந்தது. ஈடுபடும் விஷயத்தில் முழுமையாக மூழ்கி விடும் வழக்கமுடையவள் நான். நான் நடிக்கும் கதாபாத்திரத்தின் உளவியலுக்கு நான் மாறிவிடுவேன். ஆனால் ஜான்சி ராணி வேடத்தில், எண்ணற்ற ஆண்களை வெட்டியும், குத்தியும் வீழ்த்துவது, அது என்னதான் நடிப்பு என்றாலும் கிறுக்குப் பிடிக்க வைப்பதாக இருந்தது. இதுபோன்ற நிலையில் பல மாதங்கள் நான் இருந்திருக்கிறேன். வன்முறைக்கும் ஆண்களுக்கும்தான் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் ஆண்களால் ஓரளவு எளிதாக நடித்துவிட முடியும்.

பால் தாக்கரேயின் சுயசரிதைப் படம் வெளியாகும் நாளில் உங்கள் படமும் வெளியாவதைத் தடுக்க குறிப்பிட்ட கட்சியினர் மிரட்டி யதாக தகவல் வெளியானதே?

அப்படிச் சில செய்திகள் வந்தன. ஆனால் பெரிதாக ஒன்றும் இல்லை. யாரும் எங்களைத் தொடர்புகொண்டு பேசவில்லை. நிச்சயமாக மராட்டியத்தில் ஒரு பெரிய மனிதர், பால் தாக்கரே. ஆனால் ஜான்சி ராணியும் ஒரு பெரிய அடையாளம்தானே? மராட்டியத்தின் பெருமைக்குரிய மகள்தானே அவர்? அவருக்கு எப்படி இங்கே இடம் மறுக்க முடியும்? ஜான்சி ராணி ஒரு தேசிய அடையாளம், மாபெரும் தியாகி. எனவே குறிப்பிட்ட சிலர் எழுப்பியது போன்ற சர்ச்சைகள் தேவையில்லை.

Next Story