பாலிவுட்டை ஆக்கிரமிக்கும் ஹாலிவுட்


பாலிவுட்டை ஆக்கிரமிக்கும் ஹாலிவுட்
x
தினத்தந்தி 24 Feb 2019 7:47 AM GMT (Updated: 24 Feb 2019 7:47 AM GMT)

இந்திய திரை உலகம் அதிக திரைப்படங்களை தயாரித்து வெளியிடுவதில் உலக அளவில் முன்னணியில் இருக்கிறது.

ந்திய திரை உலகம் அதிக திரைப்படங்களை தயாரித்து வெளியிடுவதில் உலக அளவில் முன்னணியில் இருக்கிறது. பாரம்பரியம், பண்பாடு, கலை, கலாசாரம் என பலவற்றையும் காட்சிப்படுத்தும் பொக்கிஷமாக விளங்கும் பெருமைக்குரியது. சம கால நிகழ்வுகளையும், யதார்த்த வாழ்வியலையும் படம் பிடித்து காண்பிப்பதில் ஹாலிவுட்டுக்கே சவால் விடும் விதத்தில் திறமையான கலைஞர்கள் பாலிவுட்டில் இருக்கிறார்கள். எனினும் சமீப காலமாக இந்திய திரை உலகம் பயணிக்கும் பாதை வித்தியாசமானதாக இருக்கிறது. வெற்றி பெற்ற பழைய படங்களை மீண்டும் ‘ரீமேக்’ செய்து வெளியிடும் மனோபாவம் அதிகரித்து கொண்டிருக்கிறது. படத்தின் தலைப்பை மாற்றாமல் காட்சி அமைப்புகளையும், பழைய பாடல்களையும் புதிய பாணியில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறார்கள். சிலர் ஹாலிவுட் பட பாணியில் பிரமாண்டமாக தயாரிக்கிறார்கள்.

அப்படி ஹாலிவுட் படங்களை தேர்ந்தெடுப்பதில் கவனிக்கத்தக்க விஷயங்கள் இருக்கின்றன. சில படங்களின் கதைக்களம் அங்குள்ள பின்னணியில்தான் நன்றாக இருக்கும். அத்தகைய காட்சி அமைப்புகளைத்தான் விரும்பி பார்ப்பார்கள். நம் நாட்டுக்கென்று தனி கலாசாரம் உள்ளது. அதனை பிரதிபலிக்கும் படங்களைத்தான் மக்கள் விரும்புவார்கள். சில படங்கள் அந்தந்த காலகட்டங்களுக்குத்தான் பொருத்தமாக இருக்கும். இந்நிலையில், பிரமாண்ட வெற்றி பெற்ற படங்களை மறுபடியும் ரீமேக் செய்யும்போது இன்றைய காலகட்டத்தோடு ஒப்பிட்டு பார்த்து ரசனை மாறாமல் இரு காலகட்ட ரசிகர்களுக்கும் விருந்து கொடுக்கும்படி எடுக்க வேண்டும். அதனை கவனத்தில் கொள்ளாமல் ஒருமுறை வெற்றி பெற்ற படங்களை மீண்டும் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புடன் எடுக்கிறார்கள். அப்படி ரீமேக் செய்யப்பட்ட படங்கள் வந்த சுவடு தெரியாமல் திரும்பிப் போன நிகழ்வுகளும் இருக்கின்றன.

சமீபகாலமாக ஹாலிவுட் மோகமும் தலைதூக்கிக்கொண்டிருக்கிறது. மக்கள் ஹாலிவுட் படங்களைத்தான் அதிகம் விரும்புகிறார்கள் என்ற முடிவுக்கு சில தயாரிப்பாளர்கள் வந்துவிட்டார்கள். முன்பெல்லாம் வேற்று மொழியிலிருந்து ‘டப்’ செய்யப்பட்ட படங்கள் ஒன்றிரண்டு வந்து கொண்டிருந்தன. இங்கு தயாரிக்கப்படும் நல்ல படங்களுக்கு நடுவே ஒன்றிரண்டு ‘டப்’ படங்கள் ரிலீசாகி கொண்டிருந்தன. இப்போதோ டப்பிங் பட பிரிண்டுகள் ஆயிரக்கணக்கில் வந்து கொண்டிருக்கின்றன. எல்லா மொழி படத் தயாரிப்பாளர்களும் மும்பையில் தயாரிப்பு அலுவலகம் திறந்து விட்டார்கள். அந்த அளவுக்கு வியாபாரம் விரிவடைந்துவிட்டது.

அதனால் சிறந்த கதையை தயார் செய்வதற்கு பதில் சிறந்த ஹாலிவுட் படங்களை தேடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த படங்களின் சாயலிலேயே கதைக்களத்தை கொண்டு செல்கிறார்கள். சிந்தனை, செயல், படக்காட்சிகள், ஒப்பனை, கதை களம் எல்லாம் ஹாலிவுட்டை மையப்படுத்தியே இருக்கின்றன. சிறந்த படங்களை கொடுப்பதற்காக கசக்கிய மூளையை இப்போது ஹாலிவுட்டில் அடகு வைக்கும் இயக்குனர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். ஹாலிவுட் மோகம் அந்த அளவுக்கு அதிகரித்துவிட்டது. ஹாலிவுட் தயாரிப்பாளர்கள்தான் உலகத்திலேயே தலைசிறந்த தயாரிப்பாளர்கள் என்ற பிரமையையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள. ஹாலிவுட்டுக்கே சவால் விடும் விதமாக தலை சிறந்த படைப்பாளிகள் நம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களை மறந்துவிடக்கூடாது.

ஹாலிவுட் மோகம் அதிகரித்து கொண்டிருப்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்லலாம். இந்தியாவுக்கு வந்த பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் இங்குள்ள எல்லா இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் சந்தித்து பேசினார். அவர் வந்த செய்தி அறிந்ததும் திரையுலகமே திரண்டு சென்று அவரை சந்தித்தது. இப்படியொரு வரவேற்பு ஹாலிவுட்டில் நம் நாட்டு டைரக்டருக்கு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இத்தனைக்கும் அந்த ஹாலிவுட் இயக்குனர் தான் எடுத்த படத்தின் இந்திய விளம்பரத்திற்காகவும், பங்கு தாரர்களை சேர்க்கவும், வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காகவும்தான் வந்திருந்தார். அவரை பற்றிய தகவல்கள்தான் மீடியாக்களிலும், இணையதளங் களிலும் அதிகம் பகிரப்பட்டது. இந்தியாவின் பிரபல முன்னணி நட்சத்திரங்கள் கூட ஹாலிவுட்டில் நடிப்பதை பெரிய பாக்கியமாக கருதுகிறார்கள். தனக்கு ஹாலிவுட் வாய்ப்பு வேண்டும் என்று ரகசிய விண்ணப்பம் செய்பவர்களும் உண்டு. ஒரே ஒரு காட்சியில் வந்து விட்டால் கூட போதும், அதை எல்லோரிடம் சொல்லி அந்தப் படத்திற்கு இலவச விளம்பரம் செய்து கொடுக்கும் மனநிலையில் இருக்கிறார்கள். ஹாலிவுட்டில் எதைச் செய்தாலும் அதில் ஒரு வியாபார நோக்கம் இருக்கும். அவர்கள் படத்தை இந்தியாவில் விளம்பரம் செய்ய இது ஒரு உத்தி, அவ்வளவுதான்.

ஹாலிவுட் படங்களின் தொழில்நுட்பத்தை நம்மால் சிறப்பாக கையாள முடியாது என்றும் சிலர் சொல்கிறார்கள். சத்யஜித்ரே படத்திற்கு எந்த தொழில்நுட்பம் துணை புரிந்தது? அவருக்கு மேற்குலகமே அழைத்து ஆஸ்கார் விருதும் கொடுத்து பாராட்டியது. அதுவல்லவா நம் நாட்டிற்கு பெருமை. நம்முடைய திறமை மற்றவர்களால் பாராட்டப்பட வேண்டும். ஹாலிவுட் படத்தை ஆங்கிலத்தில் பார்ப்பதைத்தான் மக்கள் விரும்புவார்கள். அதேபோல மற்ற மொழி படங்கள் வெற்றி பெறும் என்று சொல்ல முடியாது. உலக படங்களிலேயே, ‘இந்தியப் படங்கள் மிகச் சிறப்பானவை, உணர்வுப்பூர்வமானவை’ என்று அனைவராலும் பாராட்டப்படுகின்றன. அதில் பாதி கூட ஹாலிவுட்டில் எடுக்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை. ஆனால் நம்மை விட அவர்களை புத்திசாலிகளாக பார்க்கும் மனப்பான்மை நிறைய பேரிடம் இருக்கிறது. ஆஸ்கார் விருதுதான் சினிமாவின் உச்சகட்ட அங்கீகாரம் என்று தீர்மானித்துவிடுகிறார்கள். ஆஸ்கார் விருது பெற்றவர்கள்தான் எல்லோரையும் விட சிறந்தவர்கள் என்றும் நிறைய பேர் கருதுகிறார்கள். அந்த விருதுக்கு பின்னே ஓடுகிறார்கள். ஹாலிவுட் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அது ஒருகட்டத்தில் பலவீனமாகவும் மாறிவிடும். அதனை ஹாலிவுட் உலகம் நன்கு தெரிந்து வைத்திருக்கிறது.

‘மிஷன் இம்பாசிபிள்’ படத்தில் அனில் கபூரையும், ‘த அமேசிங் ஸ்பைடர் மேன்’ படத்தில் இர்பான் கானையும் நடிக்க வைத்து இந்தியாவில் வியாபாரமாக்கினார்கள். அந்த படங்களில் இருவரும் சில மணித்துளிகளே வந்தார்கள். இன்று இந்தியாவின் மிகப்பெரிய இயக்குனர்கள் கூட ஹாலிவுட் மாயாஜாலத்தில் வீழ்ந்து கிடக்கிறார்கள். மகேஷ் பட் மிகச் சிறந்த இயக்குனர். தன்னுடைய படங்களில் ஹாலிவுட் சாயலில் சில காட்சிகளை இங்கும் அங்குமாக புகுத்தி வந்தார். இப்போது நேரிடையாக ஹாலிவுட் படங்களை விலைக்கு வாங்கி விடுகிறார்.

ஹாலிவுட் மோகம் தலைதூக்குவதற்கு பாலிவுட் படஉலகில் எதிர்ப்பும் எழுந்துள்ளது. இயக்குனர் அனுராக் காஷ்யப், ‘‘பாலிவுட் படங்கள் அவற்றின் நிஜ முகத்தை தொலைத்து வருகின்றன. இந்தியப் படங்களின் அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. இது பற்றி விழிப்புணர்வு வராவிட்டால் நாம் நிஜங்களை தொலைத்து முகமூடி அணிந்து வாழ வேண்டி இருக்கும். இப்படி ஹாலிவுட்டை சார்ந்து எடுக்கும் படங்களின் வெற்றிக்கு நாம் பெருமைப் பட முடியாது. அது நம்முடைய வெற்றியல்ல. தனித்து நின்று வளர்வது தான் வளர்ச்சி’’ என் கிறார்.

ஹாலிவுட் படங்களை எடுக்கும் இயக்குனர்கள் தங்கள் படங்களின் வெற்றிக்கு ‘மல்ட்டி பிளெக்ஸ்’ தியேட்டர்களை காரணம் கூறுகிறார்கள். இந்த வகை தியேட்டர்களில் அமர்ந்து பார்க்க இது போன்ற பிரமாண்டங்கள்தான் சிறந்தது என்றும் வாதாடுகிறார்கள். இப்போது ஹாலிவுட்-பாலிவுட் இரண்டிற்கும் சம அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஹாலிவுட், ரசிகர்களை தன்வசப்படுத்தி விட்டது. ஹாலிவுட்டின் மிகப் பெரிய தயாரிப்புகள் இந்தியாவில் நேரடியாகவே வெளியாகி கொண்டிருக்கின்றன. இங்கு தயாரிக்கும் படங்களை விட ஹாலிவுட் படங்களின் காட்சிகள் அதிகமாகிக்கொண்டிருக்கின்றன. அப்படி, பெரும்பாலான தியேட்டர்களை ஹாலிவுட் படங்கள் ஆக்கிரமிக்க தொடங்கி விட்டன. வசூலும் பல கோடிகளை எட்டிக்கொண்டிருக்கிறது. ஹாலிவுட் படங்கள் ரிலீசாகும் சமயத்தில் இந்திய படங்கள் அவற்றுடன் போட்டி போட முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு விட்டது. சில பாலிவுட் படங்கள் ஒரு வாரம் கூட தியேட்டர்களில் தாக்குப்பிடிக்க முடியாத நிலையும் உருவாகிவிட்டது. இது நமக்கு நாமே தோண்டிக்கொள்ளும் குழி.

இப்படித்தான் ஐரோப்பிய சினிமாவை ஹாலிவுட் ஆக்கிரமித்துக் கொண்டு இன்று ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது. அதேநிலை நாளை பாலிவுட் சினிமாவிற்கும் நேரலாம். தொழில்நுட்பம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதனை நாமும் நம் படங்களில் கையாளலாம். அதற்காக ஒரேயடியாக ஹாலிவுட் படங்களை தலைமீது வைத்துக் கொண்டாடினால் பாலிவுட்டின் எதிர்காலம் பூமிக்குள் புதைந்துவிடும்.

Next Story