இணையதளத்தில் வெளியான 3 படங்கள் : படக்குழுவினர் அதிர்ச்சி


இணையதளத்தில் வெளியான 3 படங்கள் : படக்குழுவினர் அதிர்ச்சி
x
தினத்தந்தி 25 Feb 2019 11:00 PM GMT (Updated: 25 Feb 2019 7:33 PM GMT)

தமிழ் திரையுலகில் திருட்டு வி.சி.டி.யை தொடர்ந்து, தற்போது புதிய படங்களை வெளியிடும் திருட்டு இணைய தளங்களின் நடவடிக்கை பெரிய தலைவலியாக உள்ளன.

இணையதளத்தில் புதிய படங்களை வெளியிடுவதற்கு கோர்ட்டு தடை விதித்தும் அதையும் மீறி வந்து விடுகின்றன. இதனால் பட அதிபர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

ரஜினிகாந்தின் பேட்ட, அஜித்குமாரின் விஸ்வாசம் உள்பட சமீபத்தில் ரிலீசான அனைத்து முன்னணி நடிகர்கள் படங்களையும் இணையதளங்களில் பார்க்க முடிந்தது. இதை கட்டுப்படுத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுத்தும் பயன் இல்லை.

இந்த நிலையில் தற்போது உதயநிதி ஸ்டாலின்-தமன்னா ஜோடியாக நடித்து திரைக்கு வந்துள்ள கண்ணே கலைமானே படம் திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதை ஏராளமானோர் பதிவிறக்கம் செய்து பார்க்கிறார்கள். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதுபோல் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் எல்.கே.ஜி. முழு படமும் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. நடப்பு அரசியலை நையாண்டி செய்யும் படம் இது. இந்த படத்தையும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பலரும் பார்க்கிறார்கள்.

தெலுங்கில் என்.டி.ராமராவ் வாழ்க்கையை மையமாக வைத்து 2-ம் பாகமாக வெளியான என்.டி.ஆர் மகாநாயுடு தெலுங்கு படமும் இணையதளத்தில் வெளியாகி பட உலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story