இந்திய படங்களை பாகிஸ்தானில் திரையிடக்கூடாது -நடிகை கங்கனா ரணாவத்


இந்திய படங்களை பாகிஸ்தானில் திரையிடக்கூடாது -நடிகை கங்கனா ரணாவத்
x
தினத்தந்தி 7 March 2019 10:00 PM GMT (Updated: 7 March 2019 7:01 PM GMT)

இந்திய படங்களை பாகிஸ்தானில் திரையிடக்கூடாது என்று நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.

கங்கனா ரணாவத் நடித்துள்ள மணிகர்னிகா படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் கங்கனா ரணாவத் பங்கேற்று பேசியதாவது:-

ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், அலியாபட் ஆகியோர் ஒரு சினிமா பட விழாவில் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது எங்களுக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்று பேசி உள்ளனர். அவர்கள் அப்படி பொறுப்பில்லாமல் பேசியது சரியல்ல. அவர்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்.

நமது ராணுவத்தினரின் சாகசங்கள் பற்றியெல்லாம் கூறாமல், ‘எங்கள் வீட்டில் தண்ணீர், மின்சாரமெல்லாம் இருக்கிறது, இதற்குமேல் அரசியலை ஏன் கண்டுகொள்ள வேண்டும்’ என்று பேசி உள்ளனர். இந்த நாட்டில்தான் அவர்கள் வீடு இருக்கிறது. நாட்டு மக்கள் கொடுத்த பணத்தில்தான் நீங்கள் கார் வாங்குகிறீர்கள். இவ்வளவு வசதியாக வாழ்கிறீர்கள்.

ராணுவம் எல்லையில் உயிரை கொடுத்து நாட்டை காப்பாற்றுவதால் நாம் நிம்மதியாக இருக்கிறோம். இப்படி பொறுப்பு இல்லாமல் அவர்கள் பேசி இருக்கக் கூடாது. சினிமாவில் நடிப்பதோடு நடிகர்கள் பொறுப்பு முடிந்து விடாது. அவர்கள் நாட்டை பற்றி கண்டுகொள்ளாமல் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்துவது ஏன்? என்று எனக்கு புரியவில்லை.

இந்திய படங்களை பாகிஸ்தானில் வெளியிடக்கூடாது என்று எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன். நானும் ஒரு தயாரிப்பாளராக என் படங்களை கண்டிப்பாக பாகிஸ்தானில் ரிலீஸ் செய்ய மாட்டேன்.

இவ்வாறு கங்கனா ரணாவத் கூறினார்.

Next Story