தேர்தல் பணிகளில் கமல் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு நிறுத்தம்


தேர்தல் பணிகளில் கமல் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு நிறுத்தம்
x
தினத்தந்தி 11 March 2019 11:00 PM GMT (Updated: 11 March 2019 6:52 PM GMT)

கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிட இருப்பதால் இந்தியன்-2 படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதில் கமல்ஹாசனின் வயதான தோற்றத்தை கடந்த மாதம் வெளியிட்டு சென்னையில் படப்பிடிப்பையும் துவக்கினர். சில காட்சிகளை படமாக்கிய பிறகு கமலின் வயதான தோற்றம் ஷங்கருக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், தோற்றத்தை மாற்றியமைத்து மீண்டும் படப்பிடிப்பை அவர் தொடங்கியதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், 2 வாரங்களுக்கு முன்பு இந்தியன்-2 படத்தை கைவிட்டு விட்டதாக தகவல் பரவியது. இதனை மறுத்த லைகா பட நிறுவனம் “இந்தியன்-2 படத்தை கைவிட்டதாக பரவும் வதந்திகள் தவறானது. ஆதாரமற்றது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரி அருகில் உள்ள மெமோரியல் ஹாலில் ஒரு வாரமாக முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன. அடுத்தகட்டமாக ஸ்டுடியோவிலும் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம். தற்போது பல இடங்களில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன” என்று விளக்கம் அளித்தது.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கமல்ஹாசன் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் அவரது கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர். கமல்ஹாசனும் போட்டியிட இருக்கிறார். இதனால் இந்தியன்-2 படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர்.

மே மாதம் 23-ந் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அதன் பிறகே கமல்ஹாசன் இந்தியன்-2 படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார்.

Next Story