பொள்ளாச்சியில் பெண்கள் பலாத்காரம்: நடிகர்-நடிகைகள் கண்டனம்


பொள்ளாச்சியில் பெண்கள் பலாத்காரம்: நடிகர்-நடிகைகள் கண்டனம்
x
தினத்தந்தி 12 March 2019 11:00 PM GMT (Updated: 12 March 2019 5:36 PM GMT)

பொள்ளாச்சியில் பெண்கள் பலாத்கார சம்பவத்திற்கு நடிகர்-நடிகைகள் வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

பொள்ளாச்சியில் ஒரு கும்பல் பெண்களை முகநூல் மூலம் நட்பு ஏற்படுத்தியும், காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறியும் ஆபாச படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் 4 பேர் கைதாகி உள்ளனர். இந்த சம்பவத்துக்கு நடிகர்-நடிகைகள் வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

நடிகை குஷ்பு டுவிட்டரில் “பொள்ளாச்சி கொடூரர்கள் மீது வெறிநாய்களை ஏவ வேண்டும். இந்த கொடுமையை செய்தவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. ரத்தம் கொதிக்கிறது. இந்த மிருகங்கள் மீது அனுதாபம் காட்டக்கூடாது. அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

நடிகர் சித்தார்த் கூறும்போது, “பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன். அப்போதுதான் அவர்கள் தைரியமாக குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சி சொல்வார்கள். சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களை வளைக்கிறார்கள். பெண்களை பாதுகாக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். நடிகர் சசிகுமார், “சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி பெண்களை கொடூரமாக நாசம் செய்திருப்பது குலை நடுங்க வைக்கிறது. உடனடியாக இந்த கொடூரர்களை தண்டிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

பெண்களுக்கு எதிராக செயல்பட்ட கொடூரர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று ஜெயம் ரவி கூறியுள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, “பொள்ளாச்சி சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். மிருகங்களினும் கேவலமான இந்த 4 பேரும் பெண்களை சித்ரவதை செய்து பாலியல் கொடுமைப்படுத்திய வீடியோ பார்த்து நெஞ்சம் பதைபதைக்கிறது. இவர்களை பொது வெளியில் நடமாட விடுவது சமூகத்துக்கு பேராபத்து” என்று கூறியுள்ளார்.

பாடகி சின்மயி, “பொள்ளாச்சியில் 200 பெண்களை 20 பேர் கற்பழித்த செய்தி வெளியாகி உள்ளது. என்ன நடக்கிறது? இதுவரை ஏதாவது கைது நடந்துள்ளதா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Next Story