நடிகர் விஷாலுக்கு இன்று நிச்சயதார்த்தம்


நடிகர் விஷாலுக்கு இன்று நிச்சயதார்த்தம்
x
தினத்தந்தி 15 March 2019 11:15 PM GMT (Updated: 15 March 2019 7:12 PM GMT)

நடிகர் விஷால்-அனிஷா திருமண நிச்சயதார்த்தம் இன்று ஐதராபாத்தில் நடக்கிறது.

நடிகர் விஷால் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக இரண்டு மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. விஷாலின் தந்தை ஜி.கே. ரெட்டி இதனை தெரிவித்து இருந்தார். பின்னர் விஷாலும் தனது டுவிட்டர் பக்கத்தில் அனிஷாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு திருமணத்தை உறுதிப்படுத்தினார்.

இவர்களது நிச்சயதார்த்தம் இன்று (16-ந் தேதி) ஐதராபாத்தில் நடக்கிறது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொள்கிறார்கள். அனிஷா ஆந்திராவை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகள் ஆவார். அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர்.

விஜய் தேவரகொண்டா நடித்த பெல்லி சூப்லு, அர்ஜுன் ரெட்டி ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்தபிறகே திருமணம் செய்து கொள்வேன் என்று விஷால் கூறியிருந்தார். தற்போது கட்டிட பணிகள் இறுதிகட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆகஸ்டு மாதம் நடிகர் சங்க கட்டிடத்தில் இவர்கள் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமண தேதியை இன்று முடிவு செய்கிறார்கள்.

விஷால் நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும், தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். 2004-ல் செல்லமே படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட முயன்றார். ஆனால் அவரது வேட்புமனு தள்ளுபடியானது. தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார்.

Next Story